43. பத்து ஆண்டுகள் கழிந்தன! (சக்கரவர்த்தித் திருமகன் - ராஜாஜி)
இப்போது ஆரம்பிப்பது அரண்ய காண்டம். சீதைக்கு ஏற்படப்போகும் விபத்துக்கு, கவி நம்மை ஆயத்தப்படுத்துகிறார். தண்டகாரண்யத்தில் சக்கரவர்த்தித் திருமகனுக்கு ஒரு புதுக்கடமை ஏற்பட்டு விட்டது; ரிஷிகளைத் துன்புறுத்தும் அரக்கர்களைக் கொல்லும் கடமை. வரப்போகும் கஷ்டத்தின் சூசனையாகச் சீதையின் மனத்தில் ஒரு பயம் தோன்றிற்று. “வனவாசத்தில் இந்த க்ஷத்திரிய காரியத்தைத் தாபசிகளான நாம் ஏன் எடுத்துக்கொள்ள வேண்டும்? நாம் வந்தது தந்தையின் ஆணையை நிறைவேற்ற, அவர் வாக்கைச் சத்திய வாக்காகச் செய்வதற்காக வனவாசம் வந்தோம். ரிஷிகளைக் காப்பாற்றும் கடமை நாட்டையாளும் அரசனுடையது. மக்களைத் தொந்தரவு படுத்தும் ராக்ஷசர்களைத் தண்டிப்பது பொதுவாக க்ஷத்திரிய தருமமானாலும், அது சிம்மாசனம் ஏறிய அரசனுடைய கடமை. நாமோ தவமிருக்க வந்திருக்கிறோம். அரக்கர்களைக் கொன்று ரிஷிகளைக் காப்பது நம்முடைய கடமையாகாது. நம்மை எதிர்க்க வராதவர்களைக் கொல்லுவது வனவாச விரதத்துக்கும் விரோதமாகும். இங்குள்ள ரிஷிகளுக்கு நீங்கள் வாக்குறுதி கொடுத்து விட்டீர்கள். 'ரிஷிகளைத் தொந்தரவு செய்யும் அரக்கர்களை நான் வதம் செய்வேன்' என்று பிரதிக்ஞை செய்து விட்டீர்களே? இது நம்