சனி, 2 ஜூன், 2018

கண்ணன் என்னும் மன்னன் - 6 - இந்திரா சவுந்தரராஜன்

சத்ராஜித்தின் மாளிகை...
கண்ணனின் குதிரைகள் பூட்டிய ரதம் அந்த மாளிகை முன் வந்து நிற்கவும், மாளிகைச் சேவகர்கள் சத்ராஜித்துக்கு செய்தி சொல்ல ஓடினார்கள்.
கண்ணனின் வருகை அவர்களுக்கெல்லாம் ஒரு ஆச்சரியம்
துவாரகையில் எல்லோரும் கண்ணனைப் போய் பார்த்துள்ளனர். ஆனால், கண்ணன் இப்படி எவரையும் தேடி வந்ததில்லை. அது தான் ஆச்சரியத்திற்குரிய காரணம். மயிற்பீலி அசைய, கையில் குழலுடன் புன்னகை தவழ கண்ணன் ரதத்தில் இருந்து இறங்கிய கோலமே கம்பீரமாக இருந்தது. மஞ்சள் பட்டிலே கச்சம், இடையைச் சுற்றி வண்ணச் சிற்றாடை, மென்மையான மேலாடை என கண்ணனின் அழகு அலாதியாக இருந்தது.
சத்ராஜித்தின் முக்கிய காரியஸ்தர்கள் கண்ணனை வரவேற்றனர்
""வந்தனம் கோபாலரே! வருக! வருக!'' - என்று அவர்கள் திருமுகம் வாசித்தனர். சத்ராஜித் உள்ளே 
சமந்தக மணிக்கு, மலர் கொண்டு அர்ச்சனை செய்தபடி இருந்தான். சேவகன் ஒருவன் வந்து, ""கிருஷ்ணப் பிரபு நம் அரண்மனை வந்திருக்கிறார்!''- என்ற மாத்திரத்தில் சத்ராஜித் முகத்திலும் ஒரு ஆச்சரியம்! கூடுதலாக சற்று செருக்கும் கூட...!
""வந்திருப்பது கிருஷ்ணன் மட்டுமா? இல்லை உடன் பலராமனுமா?''
""பிரபு மட்டும் தான் வந்துள்ளார்...''
""அந்த பிரபு எதற்கு வந்துள்ளார் என்று கேட்டாயா?''
""அது நாகரீகமல்லவே அரசே....?''
""சரி! நீ போய் காரியஸ்தருடன் கூடி விருந்தினர் மண்டபத்தில் அவனோடு அமர்ந்து எதையாவது பேசிக் கொண்டிரு. நான் பூஜையை முடித்து விட்டு வருகிறேன்...'' - சத்ராஜித் தன் சேவகனிடம் பேசியதில் இருந்து கண்ணன் வரையில் அவனிடம் ஒரு அலட்சியம் துளிர் விட்டிருப்பது நன்றாகத் தெரிந்தது. சேவகன் விலகவும், ஜொலித்தபடி இருந்த மணியின் மேல் மலர்களைத் தூவி மனதார வணங்கியவன், பின் அதை எடுத்து அணிந்து கொண்டான். அந்த மணியோ அவன் இடை வரை தொங்கி வயிற்றுப் பாகத்தை மூடி மின்னலைப் போல பிரகாசித்தது.
கண்ணனை நோக்கி வந்த காரியஸ்தர், ""பிரபோ... எம்பிரான் சமந்தகமணி பூஜையில் இருக்கிறார். வரும் வரை உங்களோடு உரையாடியபடி இருக்கச் சொன்னார்.....'' என்று மென்று விழுங்கினார். பதிலுக்கு கண்ணன் பேசவில்லை. குழலை எடுத்து வாசிக்கத் தொடங்கி விட்டான்
அதே வேளையில் பூஜை முடிந்து புறப்பட்ட சத்ராஜித்திடம் ஒரு சிறு சிந்தனைத் தோய்வு. அதுவரையில், சூரிய பகவானின் திருமேனி மார்பில் தவழ்ந்தபடி இருந்த மணியை ஆழமாக ஒரு பார்வை பார்த்துக் கொண்டான். அப்போது யதார்த்தமாக வந்த சத்ராஜித்தின் திருமகளான சத்யபாமா தந்தையை அந்த கோலத்தில் பார்த்து சற்று அதிர்ந்து நின்றாள்
""என்னம்மா பார்க்கிறாய்?''
""இது..?''
""சமந்தக மணியே தான்....''
""உங்கள் கழுத்தில்...?''
""இல்லை. இது புனிதமானது. பூஜைக்குரியது என்று கூறினீர்களே....''
""பூஜித்த பிறகே அணிந்துள்ளேனம்மா.. நம் மனைக்கு கண்ணன் வந்துள்ளான். அதுவும் இந்த மணியைப் பார்த்திடத்தான். இல்லாவிட்டால் வருவானா? இப்படி ஒரு காலத்துக்காகத் தான் நானும் காத்திருந்தேன். என் விருப்பம் இன்று ஈடேறப் போகிறது. நீ வழியை விடு
மணியோடு என்னைப் பார்த்து கண்ணன் மலைத்துப் போக வேண்டும்....'' என்றபடி, கண்ணனை நோக்கி நடந்தான். சத்யபாமாவும் பின் தொடர்ந்தாள். கண்ணனின் குழலோசை தேன்பாகாய் காதுக்குள் நுழைந்து நாடி நரம்பெல்லாம் வசப்படுத்தியது
சத்ராஜித்தின் காரியஸ்தர் கண்ணனோடு பேசிக்கொண்டிராமல், கண்களை மூடியபடி தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டே அந்த இசையை ரசித்துக் கொண்டிருந்தார். இந்தக் காட்சியே சத்ராஜித்தை ஒருபாடு படுத்தி விட்டது. பாமாவும் இசையில் சொக்கிப்போனவளாக நின்றாள்
சத்ராஜித் வரவும் உதட்டில் இருந்து கண்ணன் குழலை விடுவித்தான். அப்படியே புருவம் வளைய சத்ராஜித்தைப் பார்த்து, "" அடடே... அடடே.... என்ன ஒரு தேஜஸ்.... என்ன ஒரு காந்தம்... என்ன ஒரு ஸ்ரேயஸ்.... '' என்று வியக்கத் தொடங்கினான். அது சத்ராஜித்தையும் மயக்கி விட்டது
"" கண்ணா என்னை ஒரேயடியாக புகழ்ந்து, அதில் என்னை மூழ்கடித்து விடாதே....'' என்றான். பாமா அவன் பின்னால் நின்று கொண்டு கண்ணனின் பேச்சில் மயங்கியவளாக அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
"" நான் புகழ்வதா.. அதுதான் துவாரகை முழுக்க உங்கள் பேச்சாகவே இருக்கிறதே....?'' என்றான் கண்ணன்
"" எல்லாம் ஆதித்தன் கருணை...''
""உண்மை தான்.... அது தான் பார்த்து விட்டுப் போக வந்தேன்....''
""நானும் அது தெரிந்தே இந்த மணியை கழுத்தில் அணிந்து வந்தேன்...'' 
""கெட்டிக்காரர் நீங்கள்..... சற்று அமர்ந்து விஸ்தாரமாகப் பேசலாமா?''
""பேச என்ன இருக்கிறது கிருஷ்ணா.... பார்த்து விட்டாய் அல்லவா... புறப்படு....'' - பட்டென்று சத்ராஜித் சொல்ல.....
""இப்படி பேசினால் எப்படி...? துவாரகாதிபதியான என் அண்ணா பலராமரின் கட்டளையின் பேரில் தான் நான் வந்திருக்கிறேன்.''
""கட்டளையா... அது என்ன?'' - சத்ராஜித் முகம், அதைக் கேட்டபடியே மாறிற்று.
""கட்டளை என்றவுடன், என்னவோ ஏதோவென்று பயப்பட வேண்டாம் மணி மார்பரே...!'' 
""பயமா.... என்னிடமா? அதெல்லாம் ஒன்றுமில்லை. நீ வந்த விஷயத்தை வேகமாகக் கூறு....'' 
- சத்ராஜித் சமாளிக்க முனைந்தான்.
""எல்லாம் இந்த மணி குறித்து தான்.....''
""மணி குறித்தா?''
""ஆமாம்.. இது அபூர்வமானதாகையால் தங்கள் வசம் இருந்து இதன் காரணமாக கள்வர்களால் உங்களுக்கு ஆபத்து நேரிட்டு விடுமோ என அண்ணா பயப்படுகிறார்...''- அதைக் கேட்ட மாத்திரத்தில் சத்ராஜித் இடி இடியென்று சிரிக்க ஆரம்பித்தான்
சிரிப்பா அது! இந்த உலகையே ஏளனம் செய்வது போல் இருந்தது அந்த கெக்கலிப்பு
""சிரிப்புக்கு பொருள் புரிகிறது எனக்கு.... இருந்தாலும் அவர் கருத்தை கூறி விடுகிறேன். இதைப் போன்ற உத்தமமான விஷயங்கள் அரசர் பெருமக்களிடம் இருப்பது தான் அழகென்று கூறச் சொன்னார் அண்ணா...'' - கண்ணன் அப்படிச் சொன்ன மாத்திரத்தில், ஏளனச் சிரிப்பு சிரித்த சத்ராஜித்தின் முகத்தில் இப்போது அடாத கோபக்கனல்

-
இன்னும் வருவான்


நன்றி தினமலர்

கண்ணன் என்னும் மன்னன் - 5 - இந்திரா சவுந்தரராஜன்

""ருக்மிணி! நீயா என்னைப் பார்த்து இப்படி கேட்கிறாய்?''
""ஏன்.... நான் கேட்டதில் என்ன தவறு....? தெய்வீகமானவைகள் தங்களைப் போன்ற தெய்வீகர்களிடம் இருப்பது தானே அழகு?''
""அது சரி... தெய்வீகத்துக்கு எதற்கு ருக்மிணி இன்னொரு தெய்வீகம்...?''
""நான் சொன்னதை வைத்தே எனக்கு பதிலா?''
""என் கேள்விக்கு பதில் சொல்லாமல், நீ இப்படி கேட்பதும் அழகா?''
""என்னைப் பொறுத்தவரை, உங்களை விட உயர்வாக எதுவும் சிந்திக்கப்படக் கூடாது. அப்படி சிந்திப்பதாக இருந்தால், அது உங்களுக்கே சொந்தமாக வேண்டும். அதிலும், என் புகுந்த வீடாகிய துவாரகாபுரி பட்டணத்திலேயே, உங்களை ஒரு மணி 
விஞ்சப் பார்ப்பதை, என்னால் ஜீரணிக்க முடியவில்லை பிரபு....!'' 
""அது எங்கே விஞ்சிற்று...? அதைப் பார்த்து உனக்குள் ஏற்பட்ட தாக்கம் தான் அச்சமாகி, உன்னை அதன் முன் நீ தோற்று விட்டது போல காட்டுகிறது. எதையும் எங்கிருந்து எப்படி பார்க்கிறோம் என்பதில் தான் இருக்கிறது ருக்மிணி!''
""உங்கள் பதிலால் எல்லாம் என் மனம் சமாதானம் அடையாது பிரபு...'' - ருக்மிணி ஒன்றும் சாமான்யப் பெண் இல்லை. ஆதிலட்சுமியின் அம்சம் தான் அவள். ஆனாலும், பூலோக மாயை, அவளையும் சாமான்யப்பட்ட பெண் போல சிந்திக்க வைத்தது. அப்படி பேசவும் வைத்தது
அவளை மட்டுமா அது அப்படி சிந்திக்க வைத்தது? கண்ணனின் அண்ணன் பலராமனையே அது சிக்கலாக சிந்திக்க வைத்து விட்டது
துவாரகைக்குள் ரதத்தில் ஏறிக் கொண்டு உலா சென்ற அவர், எதிரில் கூட்டம் கூட்டமாக அந்தணர்களும், புலவர்களும் சத்ராஜித் 
மாளிகை நோக்கிச் சென்ற வண்ணமிருந்ததைப் பார்த்தார். தன் ரதசாரதியான தாருகனிடம் இதுபற்றி கேட்டார்.
""தாருகா.... இவர்கள் எங்கே செல்கிறார்கள். கண்ணன் எனக்குத் தெரியாமல் ஏதாவது சதஸ் நடத்துகிறானா?'' என்று கேட்டார்
தாருகனும் சற்றே சலனமுடன், சத்ராஜித்துக்கு கிடைத்த சமந்தக மணி பற்றியும், அது தரும் எட்டு யானை அளவுப் பொன்னை சத்ராஜித் தன்னை புகழ்பவர்களுக்கும், வாழ்த்துபவர்களுக்கும் அள்ளி வழங்குவது பற்றியும் குறிப்பிட்டான்
""நல்ல காரியம் தான்... ஆனால், இது சத்ராஜித்தை மமதையில் ஆழ்த்தி விடுமே....''
""ஆழ்த்தி விட்டது அரசே... சத்ராஜித் இப்போது தன்னைத் தான், துவாரகாபுரியின் அரசனாக கருதிக் கொண்டிருக்கிறான். ஒரு புலவரிடம், "பேருக்கு தான் நீங்கள் அரசர்! உண்மையான அரசன் நான் தான்' என்று அவன் சொன்னதாக ஒரு செய்தி என் காதுக்கும் வந்தது...''
""இது கண்ணனுக்கு தெரியுமா?''
""அவர் அறியாத ஒன்றும் இருக்க முடியுமா அரசே?''
""ரதத்தை திருப்பு.... நான் இது குறித்து கண்ணனிடம் நிறைய பேச வேண்டி உள்ளது....'' - பலராமர் உத்தரவுப்படி, நான்கு குதிரைகள் பூட்டப்பட்ட அந்த ரதம் சரேலென்று திரும்பியது. பலராமரும் அதிர் நடை போட்டு ஆலோசனை மண்டபத்தை அடைந்து, கண்ணனையும் வரச் சொல்லி பேச்செடுத்தார்
""கண்ணா...... துவாரகாபுரி இப்போது எப்படி இருக்கிறது என்று தெரியும் தானே?''
""இது என்ன அண்ணா கேள்வி... உங்களுக்கும் எனக்கும் வேலையே இன்றி சத்ராஜித்தால் சுவர்ண தானமும், இதர தானங்களும் 
அமர்க்களப்படுகிறது.''
""இது தெரிந்து எப்படி உன்னால் சலனமின்றி இருக்க முடிகிறது?''
""அண்ணா.... இதில் நானோ.. இல்லை.. நீங்களோ சலனப்பட என்ன இருக்கிறது? சத்ராஜித், ஆதித்தனுக்காக தவமிருந்தான். வரமாய் சமந்தக மணியைப் பெற்றான். அதைக் கொண்டு அவன் இப்போது ஒரு அரசனைப் போலவும் நடந்து கொள்கிறான்.''
""இந்த துவாரகைக்கென்று ஒரு அரசனாய் நானிருக்க, இளவரசனாய் நீ இருக்க, அவன் இது போல செயல்படுவது சரிதானா?''
""அது தவறு என்றால் எந்த வகையில் என்று நீங்கள் தான் கூற வேண்டும்...''- கண்ணன் ஒன்றும் தெரியாதவன் போல பேசினான்.
- பலராமரின் பேச்சைக் கேட்ட கண்ணன் புருவத்தை உயர்த்தி நின்றான்.
""கண்ணா!....''
""என்ன?'' 
""உனக்கு தெரியாதா! ஒரு தேசத்து அரசன் இருக்க, அவனுக்கு தெரியாமலோ அல்லது அவனை விஞ்சியோ எந்த செயலும் அவன் ராஜ்யத்தில் நடக்கக் கூடாது. சமந்தகமணி போல அதிசயப் பொருள் அரசர்களிடம் இருப்பதே நல்லது. நாளையே சமந்தகமணியை அபகரிக்க எண்ணி, ஒருவன் சத்ராஜித்தை கொலை செய்து விட்டால், அந்த பழி என்னைத் தானே சேரும்?''
""தாங்கள் பழிக்கு அஞ்சுவது எனக்கு புரிகிறது. ஆனால்....'' 
"" என்ன ஆனால்....?'' 
""இதை சத்ராஜித்திடம் சொன்னால், அவன் நம் எண்ணத்தைப் புரிந்து கொள்ள வேண்டுமே....!'' 
""அவன் தவறாகப் புரிந்து கொள்வான் என்பதற்காக என்னை வேடிக்கை பார்க்கச் சொல்கிறாயா?'' 
""அப்படியல்ல அண்ணா! நாம் பொறாமைப்பட்டு அந்த மணியை கேட்பதாகத் தான் எண்ணுவான்...'' 
""சரி... இதற்கு தீர்வு என்ன?''
"" இது ஒன்றும் சிக்கலான விஷயம் இல்லை. நான் சத்ராஜித்தை சந்திக்க நேர்ந்தால் வாழ்த்தவே செய்வேன்... விரைவில்
இந்த துவாரகையை நீ பொன்னகராக்கி விடுவாய் என்பேன்...'' 
""கண்ணா! பெருந்தன்மை பெருமைக்குரிய விஷயம் தான். ஆனால், அதை விட மதிப்பும், மரியாதையும், கடமை உணர்வும் பெரிதல்லவா? ''
""சரி அண்ணா! நான் என்ன செய்யட்டும்! சொல்லுங்கள்'' 
""சமந்தக மணி நமக்கு வேண்டாம். மதுராபுரி மன்னரும், யதுகுல மகாபுருஷருமான உக்ரசேனரிடம் ஒப்படைத்து விடச் சொல்
அவரிடம் சேர்வது தான் சிறந்தது. இதனால் மதுராபுரியே மகிழும்.''
""உத்தரவு அண்ணா.... இப்போதே புறப்படுகிறேன். அதே சமயம் இதை ஒரு அரச உத்தரவாக நீங்கள் இட முடியாது. சமந்தகமணியைப் பெற சத்ராஜித் தவம் செய்திருக்கிறான். தவத்துக்கான வரத்தை நாம் ஆணையிட்டு தடுக்க முடியாது.''
""கண்ணா... அந்த மணி பற்றி என்னை விட உனக்கு நன்றாகத் தெரியும். நான் சொல்ல வேண்டியதைச் சொல்லி விட்டேன். அதனால் ஒரு அபகீர்த்தி எனக்கோ, உனக்கோ வரவே கூடாது. மற்றதை நீ பார்த்துக் கொள்....'' பலராமர் முத்தாய்ப்பாக கூறியதை தொடர்ந்து. கண்ணனின் பிரவேசமும் ஆரம்பமானது.

- இன்னும் வருவான்

நன்றி தினமலர்