வியாழன், 26 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 332

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தாறாவது அத்தியாயம்

(துஷ்ட (கெட்டவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்) யோக நிஷ்டைக்கு விக்னம் (இடையூறு) வருமென்றும், சிஷ்ட (நல்லவர்கள்) ஸஹவாஸத்தினால் (தொடர்பினால்), அந்த யோக நிஷ்ட்டை வளர்ந்து வருமென்றும் நிரூபித்துக் கொண்டு, ஸங்கத்தினால் (தொடர்பினால்) யோக ப்ரஷ்டனாவான் (நழுவுவான்) என்பதற்கு உதாஹரணமாக ஐல வ்ருத்தாந்தத்தைக் (சரித்ரத்தைக்) கூறுதல்.) 

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- என்னைக் காண்பதற்குக் காரணமாகிய இம்மனுஷ்ய தேஹத்தைப் பெற்று, ப்ரவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களில் ஈடுபடும் பாதையைத்) துறந்து, என்னுடைய ஆராதன ரூபமான நிவ்ருத்தி தர்மத்தை (உலக விஷயங்களிலிருந்து விலகும் பாதையை) அனுஷ்டித்துக் கொண்டு வருவானாயின், ஆநந்த மயனாகையால் நிரதிசய (சிறந்த) புருஷார்த்த ஸ்வரூபனும் (விரும்பி அடையப்பட வேண்டியவனும்), ஆத்மாவுக்கும் அந்தராத்மாவாகையால் பரமாத்மாவென்று ப்ரஸித்தி பெற்றவனுமாகிய என்னைப் பெறுவான். 

ஆத்ம, பரமாத்மாக்களின் உண்மையை ஆராய்ந்தறிகையாகிற ஜ்ஞான (அறிவு) நிஷ்ட்டையில் (ஊன்றி இருப்பதில்) இழிந்தவன், தேவாதி (தேவன், மனிதன், விலங்கு, தாவரம் என்கிற) தேஹங்களுக்கு (உடல்களுக்குக்) காரணமாயிருப்பதும், ஸத்வாதி குணங்களையே வடிவாக உடையதுமான ப்ரக்ருதியை (மூலப்ரக்ருதி மற்றும் அதன் மாறுபாடுகளை) விடுபட்டிருப்பானன்றி, அதற்கு உட்பட மாட்டான். (தேவ, மனுஷ்யாதி தேஹங்களிலிருப்பினும், அவற்றில் அஹங்கார ( நான்), மமகாரங்கள் (எனது) அற்றிருப்பான்) அத்தகையன், ப்ரக்ருதியின் கார்யமான சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், தேஹானுபந்தி (உடலோடு தொடர்புடைய) வஸ்துக்களில் என்னுடையவை என்னும் அபிமானம் (எண்ணம்) உண்டாகப் பெறினும், அவ்வஸ்துக்களாலாவது, அவ்விஷயங்களாலாவது, பந்தத்தை அடைய மாட்டான் (கட்டுப்பட மாட்டான்). (இத்தகையன் ஜீவதசையில் சப்தாதி விஷயங்களை அனுபவிப்பினும், அபிநிவேசம் (தீவிர ஈடுபாடு) உண்டாகப் பெறமாட்டானாகையால், அவை அவனுக்கு பந்தகங்களாக மாட்டாது.) 

சிச்னம் (விந்து), உதரம் (வயிறு) இவற்றின் ஸுகங்களையே விரும்பும் தன்மையர்களான அஸத் (அறிவற்ற) புருஷர்களோடு ஒருகாலும் ஸஹவாஸம் (தொடர்பு) செய்யலாகாது. அத்தன்மையுள்ள ஒருவனோடு ஸஹவாஸம் (தொடர்பு) செய்யினும், குருடனைத் தொடர்ந்து செல்கிற குருடன் பள்ளத்தில் விழுவதுபோல், நரகத்தில் விழுவான். ஆகையால் அத்தகையர்களுடைய ஸஹவாஸத்தைத் துறந்து, பகவத் தர்மத்தில் இழிந்து, மோக்ஷத்தை அடைய வேண்டும். 

பெரும் புகழுடைய ஐலன் என்னும் புரூரவ மன்னவன் ஊர்வசியால் இழுக்கப்பட்ட மதியுடையவனாகி, அவளுடன் கலந்திருக்கையில், பல வர்ஷங்களின் ராத்ரிகள் கடந்ததையும், மேல் வரப்போகிற பல ராத்ரிகளையும் அறியாமல், அற்பமான (மட்டமான) விஷயங்களையே அனுபவித்தும், அவற்றில் திருப்தி உண்டாகப் பெறாமல், மேன்மேலும் அவ்விஷயங்களையே அனுபவித்துக் கொண்டிருந்தான். இப்படியிருந்த அந்த ஐல மன்னன், ஒருகால் அவ்வூர்வசி தன்னைத் துறந்து போகையில், அவளைப் பிரிந்திருக்க முடியாமையால், பித்தம் பிடித்தவன் போன்று அரையில் ஆடையுமின்றி, “அடி! என் இன்பநாயகி! நில் நில் போகாதே” என்று புலம்பிக் கொண்டு, தழதழத்து, அவளைப் பின் தொடர்ந்து சென்றான். 

செவ்வாய், 24 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 331

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தைந்தாவது அத்தியாயம்

(ஸத்வாதிகுண வ்ருத்திகளையும் (செயல்களையும்), குண யுக்த (குணத்தோடு கூடிய) வஸ்துக்களையும், குணாதீத (குணங்களைக் கடந்த) வஸ்துக்களையும் நிரூபித்தல்.)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- தனித்தனியே இருப்பவைகளும், ஒன்றோடொன்று கலந்திருப்பவைகளுமான ஸத்வாதி குணங்களுக்குள் எந்தெந்த குணத்தினால் புருஷன் எந்தெந்த அபிநிவேசம் (ஈடுபாடு)  உடையவனாக இருப்பானோ, அதையெல்லாம், புருஷ ச்ரேஷ்டரே! உமக்குச் சொல்லுகிறேன்; ஊக்கத்துடன் கேட்டு உணர்வீராக. 

சமம், தமம், திதிக்ஷை , ஈக்ஷை , தவம், ஸத்யம், தயை, ஸ்ம்ருதி, துஷ்டி, த்யாகம், அஸ்ப்ருஹை, ச்ரத்தை, லஜ்ஜை, தானம், ஆர்ஜவம், விநயம் முதலியவைகளும், ஆத்மானுபவ ஸுகமும் ஸத்வ குணத்தின் வ்ருத்திகள். (ஸத்வ குணத்தின் கார்யங்கள்). 

 1. சமமாவது உள் இந்த்ரியத்தின் அடக்கம். 

 2. தமமாவது வெளி இந்தரியங்களின் அடக்கம். 

 3. திதிக்ஷையாவது ஸுகம், துக்கம் முதலிய த்வந்தவங்களைப் (இரட்டைகளைப்) பொறுத்தல்.

 4. ஈக்ஷையாவது தத்வங்களை ஆராய்ந்தறிதல்.

 5. ஸ்ம்ருதியாவது அனுபவித்த விஷயங்களை மறவாமை. 

 6. துஷ்டியாவது தெய்வாதீனமாய்க் கிடைத்ததைக் கொண்டு ஸந்தோஷம் உற்றிருக்கை .

 7. த்யாகமாவது செலவழிக்கும் தன்மை.

 8. அஸ்ப்ருஹையாவது விஷயங்களில் விருப்பமில்லாமை. 

 9. ச்ரத்தையாவது ஆஸ்திக்யம். அதாவது தெய்வம் உண்டென்னும் நினைவு.

 10. ஆர்ஜவமாவது நேர்மை.  

 11. விநயமாவது வணக்கம். 

விஷயங்களை அனுபவியாதிருக்க முடியாமையாகிற காமம் (ஆசை, விருப்பம்), சேஷ்டை (செயல்), மதம் (கர்வம்), எவ்வளவு பெறினும் ஸந்தோஷம் உறாமை, கர்வம், பொருளாசை, வைஷம்யம் (வேறுபடுத்திப் பார்த்தல்), விஷயபோகம் (உலக விஷயங்களை அனுபவித்தல்), ஸாஹஸ (திறமைக்கு மீறிய) கார்யங்களில் அபிநிவேசம் (ஈடுபாடு), புகழில் ப்ரீதி (தன்னைப் பிறர் ஸ்தோத்ரம் செய்கையில் ஸந்தோஷம் அடையும் தன்மை), பரிஹாஸம் (கேலி) செய்கை, தன் ப்ரபாவத்தை வெளியிடுகை, பலம் உள்ளவளவும் முயற்சி செய்கை, ஆகிய இவை எல்லாம் ரஜோ குண வ்ருத்திகள். (ரஜோகுணத்தின் கார்யங்கள்). 

பொறாமையாகிற க்ரோதம் (சினம்), சிலவு என்றால் மனம் செல்லாமையாகிற லோபம் (கஞ்சத்தனம்), அசாஸ்த்ரீயம் ஆனவற்றை (சாஸ்த்ரத்திற்கு ஒவ்வாதவற்றைப்) ப்ரமாணம் (ஒத்துக்கொள்ளக்கூடிய ஆதாரம்) என்று கூறுகையாகிற அன்ருதம் (உண்மையின்மை), பிறர்க்கு த்ரோஹம் (தீங்கு) செய்தல், யாசித்தல், வஞ்சித்தல், சோர்வுறுதல், கலஹம், சோகம் (வருத்தம்), மோஹம் (மயக்கம்), துக்கம், தைன்யம் (தாழ்ந்து நிற்கும் நிலை), ஆசை , பயம், முயற்சியற்று இருக்கை ஆகிய இவையெல்லாம் தமோகுண வ்ருத்திகள் (தமோ குணத்தின் கார்யங்கள்). 

திங்கள், 23 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 330

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

(ஸ்ருஷ்டி (படைப்பு) ஸம்ஹார (அழித்தல்) க்ரமங்களை நிரூபித்தல்.)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- அப்பனே! முன்புள்ள முனிவர்களால் நிச்சயிக்கப்பட்ட ஸாங்க்ய தத்வத்தை உமக்குச் சொல்லுகிறேன்; கேட்பீராக. இதை கீழ்ச்சொன்ன வண்ணம் அறிந்தால், “நான் வேறு, இவன் வேறு” என்னும் பேத புத்தியை விளைக்கும்படியான தேஹாத்ம ப்ரமத்தையும் (இந்த உடலே ஆத்மா என்கிற தவறான எண்ணம் – மனக்கலக்கம்), ஸ்வதந்த்ராத்ம ப்ரமத்தையும் (நாம் பகவானது கட்டளைக்கு உட்படாது தன்னிச்சைப்படி செயல்படும் வல்லமை உடையவர்கள் என்ற மனக்கலக்கம்) உடனே துறக்கலாம். ஸாங்கயமாவது, ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான மூலப்ரக்ருதி), ப்ராக்ருதம் (மூலப்ரக்ருதியிலிருந்து தோன்றியவை), புருஷன் (ஜீவாத்மா), ஈச்வரன் ஆகிய இத்தத்வங்களின் பிரிவினை. ஸ்ருஷ்டிக்கு (படைப்புக்கு) முன்பு பரமாத்ம ஸ்வரூபமொன்றே இருந்தது. ப்ரக்ருதியும் (மூலப்ரக்ருதி), புருஷனும் (ஜீவாத்மா) நாம (பெயர்), ரூபங்களுக்கு (உருவங்களுக்கு) இடமாகாமல் ஒன்றாகி, பரமாத்மாவினிடத்தில் மறைந்திருந்தன. 

முன்பு க்ருத யுகத்தில், ஸத்வ குணம் தலையெடுத்து, ப்ரக்ருதி, புருஷ, ஈச்வர தத்வங்களின் ஸ்வரூபங்களை உள்ளபடி அறிந்த பெரியோர்கள், நாம (பெயர்), ரூபங்கள் (உருவம்) இன்றி ஸூக்ஷ்ம தசையை (கண்ணுக்குப் புலப்படாத நுட்பமான நிலையை) அடைந்த சேதனாசேதனங்களை (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களை) சரீரமாகவுடைய ஜகத் (உலகிற்குக்) காரணமான இந்தப் பரப்ரஹ்மத்தையே உபாஸித்துக் (த்யானித்துக்)  கொண்டிருந்தார்கள். ஆனது பற்றியே, அந்த க்ருதயுகம், யுகங்களில் முதன்மை பெற்று, நிகரற்றதாயிற்று. ஸத்வாதி குணங்களின் ஏற்றக் குறைவின்றி, ஜாதி, குண, க்ரியைகளென்கிற விகல்பங்கள் (வேறுபாடுகள்) அற்று, வாக்காலும், மனத்தாலும் அளவிடமுடியாத ஸ்வரூப, ஸ்வபாவங்களுடையதும், கால பரிச்சேதம் அற்றதும் (காலத்தினால் வரையறுக்க முடியாததும்), விகாரங்கள் (மாறுபாடுகள்) தீண்டப் பெறாததுமாகிய அந்தப் பரப்ரஹ்மம் ப்ரளய தசையிலும் (படைப்புக்கு முந்தய நிலை), மாயையென்றும், பலனென்றும் இரண்டு விதமாயிருந்தது. 

மாயை, பலன் என்னும் அவ்விரண்டு வஸ்துக்களில், மாயையாவது ப்ரக்ருதி. அது கார்யம் (உண்டாக்கப்பட்டது) என்றும், காரணம் என்றும் இரண்டு வகைப்பட்டிருக்கும். (ஸமஷ்டி (மொத்தம்) என்றும், வ்யஷ்டி (தனித்தனி) என்றும் இரண்டு வகைப்பட்டிருக்கும் என்றும் சொல்லுவார்கள். ஜீவாத்ம, பரமாத்மாக்களுக்கு யோக்யமான (ஏற்ற) ஸ்வருபமுடையதாகையால், இரண்டு விதமாயிருக்கும் என்றும் சொல்லுவார்கள்). 

பலனென்று சொல்லப்படுகிற மற்றொன்று, ஜ்ஞான ரூபமான ஜீவஸ்வரூபம். அந்த ஜீவனையே புருஷனென்றும், ப்ரத்யகாத்மா (ஜீவாத்மா) என்றும் சொல்லுவார்கள். விசித்ரமான கார்யங்களை விளைக்கின்றதாகையால், ப்ரக்ருதி மாயையென்று கூறப்படுகின்றது. ஜீவன், அனுகூல ஜ்ஞான (நன்மை பயக்கும் அறிவு) ரூபமான ஆநந்தத்தையே ஸ்வரூபமாக உடையவனாகையால், ஆநந்தமே புருஷார்த்தமாகையால், பலன் என்று கூறப்படுகிறான். 

வியாழன், 19 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 329

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(மனத்தை அடக்குவதற்கு உபாயம் சொல்ல முயன்று, அதற்கு நிதர்சனமாக (உதாரணமாக) பிக்ஷூ கீதத்தைக் கூறுதல்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- பகவத் பக்தர்களில் முக்யராகிய உத்தவர் இவ்வாறு வினவுகையில், செவிக்கினிய வீரச் செயல்களையுடையவனும், மோக்ஷ பூமியைக் கொடுக்க வல்லவனாகையால் முகுந்தனென்று கூறப்படுகின்றவனும், தாசார்ஹர்களில் (யாதவர்களில்) சிறந்தவமனுமாகிய அந்த ஸ்ரீக்ருஷ்ண பகவான், தன் பக்தராகிய உத்தவருடைய வசனத்தைக் கேட்டு, அவரை வெகுமதித்துக் கொண்டு, மேல்வருமாறு கூறினான்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ருஹஸ்பதியின் சிஷ்யரே! எவன் துர்ஜனங்களுடைய (கெட்ட மனிதர்களின்) துர்ப்பாஷணங்களால் (கொடிய சொற்களால்) கலங்கின மனத்தை மீளவும் ஸமாதானப்படுத்திக் கொண்டு நிலைநின்றிருக்க வல்லவனோ, அத்தகைய அறிஞன் இவ்வுலகத்தில் எவனும் இல்லவே இல்லை. துர்ஜனங்களுடைய பருஷ வாக்யங்களாகிற (கெட்ட மனிதர்களின் கொடிய சொற்களாகிற) பாணங்கள் (அம்புகள்), மர்ம ஸ்தானங்களில் (உயிர் நிலைகளில்) நிலை நின்று வருத்துவது போல், மர்மஸ்தானங்களில் (உயிர் நிலைகளில்) பாயும்படி நாட்டின பாணங்களும் கூட வருத்த மாட்டாது. (ஆயினும், ஸுக துக்கங்களின் அஸாதாரண காரணத்தை ஆலோசிப்பானாயின், மனத்தை மெல்ல மெல்ல ஸமாதானப்படுத்திக் கொள்ளலாம்). 

உத்தவரே! இவ்விஷயத்தில் ஒரு இதிஹாஸம் சொல்லுகிறார்கள். இந்த இதிஹாஸம் கேட்போர்களுக்கு மிகவும் புண்யத்தை விளைக்கும். இதுவே உம்முடைய கேள்விக்கும் உத்தரமாம். ஆகையால், இதைச் சொல்லுகிறேன். மிக்க மனவூக்கத்துடன் கேட்பீராக.  

இந்த இதிஹாஸம் துர்ஜனங்களால் (கெட்ட மனிதர்களால்) அவமதிக்கப்பட்ட ஒரு ஸந்நியாஸியால் பாடப்பட்டது. அந்த ஸந்நியாஸி எத்தனை விக்னங்கள் (தடைகள்) நேரினும் நினைத்த கார்யத்தை நிறைவேற்றும் திறமையாகிற தைர்யமுடையவர்; தனக்கு வருகிற ஸுக துக்கங்களெல்லாம் தான் செய்த புண்ய, பாப கர்மங்களின் பரிபாகமே (விளைவே) என்று உறுதியாக நினைத்திருப்பவர்.

 அவந்தி தேசத்தில் செல்வத்தினால் மிகவும் ஸம்ருத்தனான (செழிப்புற்ற) ஓர் அந்தணன் இருந்தான். அவன், பயிர், வர்த்தகம் முதலிய தொழில்களால் ஜீவிக்கும் தன்மையன்; தன்னுடைய உதர போஷணத்தையும் (வயிரை வளர்ப்பதையும்) கூட உரியபடி நடத்தும் தன்மையன் அல்லன்; பணத்தில் விருப்பமுடையவன்; அதை ஆர்ஜனம் செய்வதில் (ஸம்பாதிப்பதில்) பேராசை உற்றவன்; மிகவும் கோப ஸ்வபாவமுடையவன். அவன் ஜ்ஞாதிகளையாவது (பங்காளிகள்), அதிதிகளையாவது (விருந்தாளிகள்), வாக்கு மாத்ரத்தினாலும் (சொல்லாலும்) கூட ஆராதிக்க மாட்டான். ஆகையால், இவனுடைய க்ருஹம் நுழைபவர் ஒருவருமின்றி எப்பொழுதும் சூன்யமாய் (காலியாய், வெற்றிடமாய்) இருக்கும். தன் தேஹத்தையும் கூட உரிய காலத்தில் வேண்டிய போகங்களால் உபலாலனம் செய்வதில்லை (சீராட்டுவதில்லை). 

திங்கள், 16 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 328

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(தத்வஸங்க்யைகளின் விரோத பரிஹாரமும், ப்ரக்ருதி புருஷர்களின் விசாரமும், ஜன்ம-மரணாதி ஸ்வரூப நிரூபணமும்)

உத்தவர் சொல்லுகிறார்:- ஜகதீசனே! ப்ரபூ! தத்வங்கள் எத்தனை? சில ரிஷிகள் தத்வங்கள் ஒன்பதென்றும், சிலர் பதினொன்றென்றும், சிலர் ஐந்தென்றும் கணக்கிடுகிறார்கள். நீயோவென்றால், மூன்று தத்வங்கள் என்று மொழிகின்றனை. இவ்விஷயத்தில் மற்றும் பலவாறு கேட்டிருக்கின்றோம். சிலர் இருபத்தாறென்றும், சிலர் இருபத்தைந்தென்றும், சிலர் ஏழென்றும், சிலர் ஒன்பதென்றும், சிலர் ஆறென்றும், சிலர் நான்கென்றும், சிலர் பதினொன்றென்றும், சிலர் பதினேழென்றும், சிலர் பதினாறென்றும், சிலர் பதின்மூன்றென்றும் சொல்லுகிறார்கள். வளர்ந்த ஆயுளை உடையவனே! ரிஷிகள் எந்த அபிப்ராயத்தைப் பற்றி வெவ்வேறாகக் கணக்கிடுகிறார்களோ, அதை நீ எமக்குச் சொல்ல வேண்டும்.

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ப்ராஹ்மணர்கள் எந்தெந்த விதம் சொல்லுகிறார்களோ, அவையெல்லாவற்றிற்கும் யுக்திகள் (ஆராய்ச்சியின் அடிப்படையிலான காரணங்கள்) இருக்கின்றன. என்னுடைய மாயையைத் தத்வங்களுக்குக் காரணமாக அங்கீகரித்து, அவற்றைக் கணக்கிடுகிறவர்களுக்கு எதுதான் பொருந்தாது. (எல்லாம் பொருந்தும்). எந்தக் கணக்கு விருத்தமாய் (முரணாய்) இருக்கிறதென்று சொல்லினையோ, அது விருத்தம் (முரண்) அன்று. அந்தக் கணக்கு இவ்வாறு பார்த்தால் விரோதமில்லாமல் பொருந்தும். அதெல்லாம் விரோதமில்லாமல் பொருந்தும்படி நான் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

ரிஷிகள் இவ்வாறு பலவாறு சொல்லுவதற்குக் காரணம் என்னவென்றால், ஒருவராலும் இல்லை என்று சொல்லி அதிக்ரமிக்க (மீற) முடியாத ப்ரக்ருதி (அசேதனமான மூலப்ரக்ருதி), புருஷ (ஜீவாத்மா), மஹத்து, அஹங்காராதி ரூபமான என் சக்திகளே. ரிஷிகள் என் சக்திகளான இந்த ப்ரக்ருதி, புருஷாதிகளைத் தனித்தனியே பிரித்துச் சொல்லுவதும், ஒன்றில் ஒன்றை உள்ளடக்கிச் சொல்லுவதும் செய்கையால், தத்வங்களின் கணக்கில் ஏற்றக் குறைவுகள் உண்டாகின்றனவன்றி வேறில்லை. சம (மனதை அடக்குதல்), தமாதி (வெளி இந்த்ரியங்களை அடக்குதல்) குணங்கள் கைகூடுமாயின், சேதனாசேதன ரூபமான (அறிவுள்ள ஜீவாத்மாக்கள் மற்றும் அறிவற்ற ஜடப்பொருட்களைக் கொண்ட) ஜகத்தெல்லாம் எனக்குச் சரீரமாகி, ஏக (ஒரே) ரூபமாகத் தோற்றும். அப்பொழுது தத்வங்களின் ஏற்றக் குறைவுகள் தோன்ற மாட்டாது. அவை தோன்றாமல் மறைந்தவுடனே, மூன்றென்றும், நான்கென்றும் சொல்லுகிற வாதமும் தொலைந்து போகும்.

புருஷ ச்ரேஷ்டனே! தத்வங்கள் ஒன்றில் ஒன்று உள்ளடங்கியிருப்பதைப் பற்றி அதை உள்ளபடி ஆராய்ந்து பார்க்கிறவர்கள் எவ்வாறு சொல்ல விரும்புகிறார்களோ அவ்வாறு தத்வங்களைக் குறைவாகவும் அதிகமாகவும் கணக்கிடுகிறார்கள். எல்லா தத்வங்களும் தமக்குக் காரணமான முற்பட்ட தத்வத்திலாவது, கார்யமான பிற்பட்ட தத்வத்திலாவது ஏதேனுமொரு தத்வத்தில் உள்ளடங்கி இருக்கின்றன. கடம் (குடம்)  முதலிய கார்ய வஸ்துக்கள் (உண்டாக்கப்பட்ட பொருட்கள்) தமக்குக் காரணமான மண்ணில் ஸூக்ஷ்ம  ரூபமாய் (நுட்பமாய்) உள்ளடங்கி இருக்கின்றன. கார்யமான கடாதி வஸ்துக்களில் மண் முதலிய காரண வஸ்துக்களும் தொடர்ந்திருக்கின்றன. 

சனி, 14 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 327

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபத்தொன்றாவது அத்தியாயம்

(கர்ம, ஜ்ஞான, பக்திகளில் அதிகாரமில்லாத ஸம்ஸாரிகளுக்கு த்ரவ்ய, தேசாதி குணதோஷங்களை நிரூபித்தல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- ஜீவாத்மாக்கள், கர்ப்ப (கருவறை), ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸாம்ஸாரிக (உலகியல்) துக்க ஸாகரத்தில் முழுகிக் கிடப்பதைக் கண்டு, இவர்களை அனுக்ரஹிக்க வேண்டும் என்னும் விருப்பத்தினால் என்னை ஆராதிப்பதற்குரியவையான கரண (இந்த்ரியங்கள்), களேபரங்களையும் (உடல்), சாஸ்த்ராதிகளையும் கொடுத்து, இவர்கள் நம்மைப் பெற வேண்டுமே என்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிற நான், என்னைப் பெறுதற்கு உபாயங்களான (வழி, மார்க்கம்) கர்ம யோக, ஜ்ஞான யோக, பக்தி யோகங்களை வெளியிட்டேன். 

எவர்கள் இந்த உபாயங்களை (வழிகளை) உபேக்ஷித்து (ஒதுக்கி) சஞ்சலமான (நிலையற்ற)  இந்த்ரியங்களுக்கு உட்பட்டு, அற்பமான சப்தாதி விஷயங்களை (உலக விஷயங்களை) அனுபவிக்கப் பார்க்கிறார்களோ, அவர்கள் மேன்மேலும் கர்ப்ப (கருவறை), ஜன்ம (பிறப்பு), ஜரா (கிழத்தனம்), மரணாதி ரூபமான ஸம்ஸாரத்தையே அனுபவிப்பார்களன்றி, அதினின்று மீள மாட்டார்கள். எவனெவனுக்கு எந்தெந்த தர்மத்தில் அதிகாரம் ஏற்பட்டிருக்கிறதோ, அவனவன் தன் தனக்கு ஏற்பட்ட அந்தந்த அதிகாரத்தில் நிலை நின்றிருக்கை அவனவனுக்கு குணமாகும். அதினின்று மாறுகை தோஷமாகும். (சூத்ரனுக்கு, ப்ராஹ்மண தர்மம் குணமாகாது. ஸம்ஸாரத்தில் விரக்தி உண்டாகப் பெறாதவனுக்கு, ஸந்நியாஸ தர்மம் குணமாகாது. விரக்தி உண்டாகப் பெற்றவனுக்கு, அதுவே குணமாகும்). குண தோஷங்களைப் பற்றிய நிர்ணயம் இதுவே என்று கண்டு கொள்வாயாக. (ஆகையால், மனுஷ்ய ஜாதியில் பிறந்தவர் அனைவர்க்கும் க்ஷூத்ரமான (தாழ்ந்ததான) சப்தாதி விஷயங்களில் அபிநிவேசம் (ஈடுபாடு) கொள்ளுகை மேன்மேலும் ஸம்ஸாரத்தை வளர்க்குமாகையால், தோஷமேயாம்). 

வஸ்துக்களெல்லாம் பஞ்ச பூதாதி ஸ்வரூபங்களாகையால் ஒத்திருப்பினும், “இது யோக்யமா? அன்றா” என்கிற ஸந்தேஹத்தை உண்டாக்கி, அதன் மூலமாய் அவற்றில் ஸ்வாபாவிகமான (இயற்கையான) ப்ரவ்ருத்தியை (செயலைத்)  தடுக்கும் பொருட்டுச் சுத்தியும் (தூய்மை), அசுத்தியும் (தூய்மையின்மை) விதிக்கப்படுகின்றன. அவைகளால் இதில் தனக்கு அதிகாரம் உண்டென்பதும் இல்லை என்பதுமாகிய குண தோஷங்கள் நன்கு தெரிவிக்கப்படுகின்றன. உலகத்தில் மனுஷ்யர்களுக்கு அவரவர்க்கு இஷ்டமானவற்றில் ப்ரவ்ருத்தி (செயல்) உண்டாவது ஸஹஜம் (இயற்கை). ஆனால் சாஸ்த்ர மர்யாதைக்கு நாம் உட்பட்டு நடக்க வேண்டுமாகையால், ஒரு வஸ்துவில் நமக்கு விருப்பம் உண்டாயினும், சாஸ்த்ரம் இதை நமக்குச் சுத்தம் என்கிறதோ, அசுத்தமென்கிறதோ என்று ஸந்தேஹித்து, அதில் நாம் ப்ரவர்த்திக்கல் (செயலில் இறங்குதல்) ஆகாது. சாஸ்த்ரத்தை ஆராய்ந்து சுத்தமென்று ஏற்படுமாயின், “இதில் நமக்கு அதிகாரம் உண்டு. இது நமக்கு குணமா” என்று நிச்சயித்துக் கொண்டு, ப்ரவர்த்திக்க (செயலில் இறங்க) வேண்டும். இதற்காகவே சாஸ்த்ரங்களில் வஸ்துக்களுக்குச் சுத்தியும், அசுத்தியும் அவரவர்க்குத் தகுந்தபடி நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. 

ஶ்ரீமத் பாகவதம் - 326

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – இருபதாவது அத்தியாயம்

(ஜ்ஞானயோகம், கர்மயோகம், பக்தியோகம் இவைகளையும், இவற்றின் அதிகாரிகளையும் நிரூபித்தல்)

உத்தவர் சொல்லுகிறார்:- தாமரைக் கண்ணனே! ஸம்ஸாரிகள், குண தோஷங்கள் என்று நினைக்கிற ஸுக, துக்கங்கள் இரண்டையும் துறக்கையே முமுக்ஷுவுக்குக் (மோட்சத்தை விரும்புபவனுக்கு) குணமாம் என்று மொழிந்தனை. இஹலோக (இந்த உலக) ஸுகங்களும், அவற்றின் ஸாதனங்களும் ப்ரத்யக்ஷமாகையால், அவற்றை ஆராய்ந்தறிந்து துறக்கலாம்: பரலோக (ஸ்வர்க்கம் முதலிய வேறு உலக) ஸுகங்களும், அவற்றின் ஸாதனங்களும், கேவலம் வேத சாஸ்த்ரத்தினால் அறியக் கூடியவைகளாய் இருக்கின்றன. “இதைச் செய், இதைச் செய்யாதே” என்று விதி (செய்), நிஷேத (செய்யாதே) ஸ்வரூபமான அவ்வேத சாஸ்த்ரம், ஸர்வேச்வரனான உன்னுடைய ஆஜ்ஞையேயன்றி வேறன்று. அத்தகைய வேதம்  “இதைச் செய்” என்று சிலவற்றைக் குணமாகவும், “இதைச் செய்யாதே” என்று சிலவற்றை தோஷமாகவும், நிரூபித்துச் சொல்லுகிறது. மற்றும், அது ப்ராஹ்மணாதி வர்ணங்களையும், அவற்றில் அனுலோமமாகவும் (உயர்ந்த ஜாதி ஆணுக்கும் தாழ்ந்த ஜாதி பெண்ணுக்கும்), ப்ரதிலோமமாகவும் (தாழ்ந்த ஜாதி ஆணுக்கும் உயர்ந்த ஜாதி பெண்ணுக்கும்) பிறக்கிற ஸங்கர வர்ணங்களையும் (கலப்பு ஜாதிகளையும்) குறித்து, “இன்னவன் இன்ன வயதில் இன்ன தேசத்தில் இன்ன காலத்தில் இன்ன த்ரவ்யத்தைக் கொண்டு இன்ன விதியை அனுஷ்டிக்க வேண்டுமென்றும், அவ்விதிகளை அனுஷ்டிக்கிறவர்களுக்குப் பலன் ஸ்வர்க்கமே என்றும் நிஷித்தங்களைச் (விலக்கியவற்றைச்) செய்கிறவர்களுக்குப் பலன் நரகமென்றும் நிரூபித்துச் சொல்லுகிறது. “இதைச் செய்யலாகாது” என்று நிஷேதரூபமாயும் “இதைச் செய்ய வேண்டும்” என்று விதி ரூபமாயுமிருக்கிற வேதரூபமான உன் வசனம் இது குணமென்றும், இது தோஷமென்றும் பேதபுத்தியை உண்டாக்காமல்  புருஷர்களுக்கு எப்படி நன்மையை அறிவிக்கவல்லதாகும்? குண தோஷ பேத புத்தியையும், ப்ரவ்ருதி (செயலில் ஈடுபடுதல்), நிவ்ருத்திகளையும் (விலகுதல்) உண்டாக்கித்தான் புருஷார்த்தத்தை அறிவிக்கும். 

ஜகதீசனே! அலௌகிகமான (இந்த உலகில் பார்க்க முடியாத) ஸ்வர்க்காதி புருஷார்த்தங்களையும், யஜ்ஞாதிகளான அவற்றின் ஸாதனங்களையும், ப்ரத்யக்ஷத்தினால் (நேரில் பார்த்து) அறிய முடியாது. பித்ருக்களுக்கும், தேவதைகளுக்கும், மனுஷ்யர்களுக்கும் அவற்றை அறிதற்கு வேதமே சிறந்த கண்ணாயிருக்கின்றது. ஆகையால், குண தோஷ பேதஜ்ஞானம் உனது ஆஜ்ஞாரூபமான அவ்வேதத்தினால் தான் உண்டாக வேண்டுமன்றி, ஸ்வயமாக (தானாக) உண்டாகாது. இப்படியிருக்க, இப்பொழுது இது குணமென்றும், இது தோஷமென்றும், பேத புத்தியைத் துறக்கையே முமுக்ஷுவுக்குக் (மோட்சத்தை விரும்புபவனுக்கு) குணமென்று அதற்கு விபரீதமாக (எதிராக) மொழிகின்றாய். ஆகையால் இதை நிர்ணயிக்க முடியாமல், மதி மயக்கமாய் இருக்கின்றது.

சனி, 7 ஆகஸ்ட், 2021

ஶ்ரீமத் பாகவதம் - 325

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பத்தொன்பதாவது அத்தியாயம்

(பக்தியோகத்தை அனுஷ்டிக்க முடியாதவனுக்கு, ந்யாஸமென்றும், ப்ரபத்தியென்றும் வழங்கிவரும் உபாயத்தை உபதேசிக்கை)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- சாஸ்த்ர அப்யாஸத்தினால் (கற்றதால்) உண்டாகும் ஜ்ஞானமாவது, கேவலம் பெரியோர்களைப் பணிந்து அவர்களுடைய உபதேசத்தினால் உண்டாகும் ஜ்ஞானமாவது அமைந்தவனும், சாஸ்த்ரங்களுக்கு விருத்தம் (எதிரிடையானது) அல்லாத தர்க்கங்களை அறிந்தவனும், க்ருஷி (விவசாயம்) முதலிய லௌகிக (உலகியல்) கர்மங்களால் (செயல்களால்) விளையும் பலன்களைப் போல் வைதிகமான யாகாதி கர்மங்களால் விளையும் ஸ்வர்க்காதி பலன்களும் அநித்யங்களே (நிலையற்றவையே) என்னும் ஊஹம் (அனுமானம்) உடையவனும், மனவூக்கம் உற்றவனுமாகிய புருஷன், பகவானுக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடைய ஆத்மாவுக்கு இச்சரீரம் பகவானுடைய மாயையினால் விளைந்ததென்று தெரிந்து கொண்டு, ஜ்ஞான ஸ்வரூபனான ஆத்மா, ஸர்வ சேஷியும் (எல்லோருக்கும் ஸ்வாமியும்), ஸர்வ அந்தராத்மாவும் (எல்லாவற்றையும் உள் இருந்து நியமிப்பவனும்) உபாய உபேய பூதனும் (அடையப்பட வேண்டியவனும், அடைவதற்கு வழியும்), ஸத்ய ஸங்கல்பனும் (நினைத்ததை முடிக்க வல்லவனும்), பரமகாருணிகனும் (மிகுந்த கருணை உடையவனும்), ஒரு விசேஷங்களையும் எதிர்பாராமல் ஸர்வலோக ஸம்ரக்ஷகனுமாகிய (காப்பவனுமாகிய) என்னிடத்தில் அதீனமாய் (உட்பட்டு) இருப்பதென்று அனுஸந்திக்க வேண்டும். 

பகவானுக்குக் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடையவனும், ப்ரக்ருதி ஸம்பந்தத்தினின்று (உலகியல் தொடர்பிலிருந்து) விடுபட்ட ஆத்மாவினுடைய அனுபவத்தில் கால் தாழாமல் பகவத் ப்ராப்தியை விரும்புகின்றவனுமாகிய ஜ்ஞானி, தனக்குப் பெறவேண்டிய ப்ரயோஜனமாக என்னையே விரும்புவானன்றி, மற்றொன்றையும் விரும்ப மாட்டான். அவன் என்னைப் பெறுதற்கு என்னையே உபாயமாகப் பற்றியிருப்பவனன்றி மற்றொன்றை உபாயமாக (சாதனமாக, வழியாக) நினைக்கமாட்டான். அவனுக்கு என்னையொழிய ஸ்வர்க்கமாவது, மோக்ஷமாவது, மற்ற எந்தப் பொருளும் ப்ரியமன்று. 

சரீரம் (உடல்) பகவானுடைய மாயையினால் விளைந்தது என்றும், ப்ரக்ருதியைக் (அசேதனத்தைக்) காட்டிலும் விலக்ஷணனான (வேறான) ஆத்மா பகவானுக்குச் சேஷமாய் (அடிமையாய்) இருக்கையையே முக்ய ரஸமாகவுடையவனென்றும், பகவானே உபாயமும் (அடைவதற்கு வழியும்), உபேயமும் (அடையப்பட வேண்டியவனும்), என்றும் இவ்வறிவுகள் அமைந்தவர்களே ப்ரக்ருதி (அசேதனம்) புருஷர்களை (ஜீவாத்மாவைக்) காட்டிலும் விலக்ஷணமாய் (வேறாய்) இருப்பதும், எல்லாவற்றிலும் மேன்மையுற்றிருப்பதுமாகிய என் ஸ்வரூபத்தை அறிகிறார்கள். 

ஜ்ஞானி, எனக்கு மிகவும் ப்ரியமானவன். இந்த ஜ்ஞானி என்னை ஒழிய ஆத்ம தாரணம் (உயிர் தரித்து இருத்தல்) ஸம்பவிக்காதென்னும் ஜ்ஞானத்தினால் என்னைத் தரிப்பிக்கிறான் (உயிர்ப்பிக்கிறான்). (நான் தரித்திருப்பது அவனாலேயே. ஏனென்றால், அவன் என்னை ஒழியத் தனக்குத் தாரணம் (உயிர் தரித்து இருத்தல்) ஸம்பவிக்காதென்று என்னையே சிறந்த ப்ரயோஜனமாகப் (பலனாகப்) பற்றியிருக்கிறான். என்னை எவர்கள் எப்படி அடைகிறார்களோ, அவர்களை நான் அப்படியே அடையும் தன்மை உடையவனாகையால், எனக்கும் அவனை ஒழிய ஆத்ம தாரணம் (உயிர் தரித்து இருத்தல்) ஸம்பவிக்கிறது இல்லை). 

ஶ்ரீமத் பாகவதம் - 324

ஏகாதச (பதினொன்றாவது) ஸ்கந்தம் – பதினெட்டாவது அத்தியாயம்

(வானப்ரஸ்த  ஆச்ரம தர்மங்களையும், ஸந்யாஸ ஆச்ரம தர்மங்களையும் கூறுதல்)

ஸ்ரீபகவான் சொல்லுகிறான்:- வானப்ரஸ்த ஆச்ரமத்தைப் பெற விரும்புவானாயின், பார்யையை (மனைவியை) பிள்ளைகளிடம் ஒப்புவித்து விட்டு, அல்லது பார்யையோடு கூடவாவது சென்று, இந்திரியங்களை எல்லாம் வென்று, ஆயுளுடைய மூன்றாம் பாகம் முழுவதும் வனத்திலேயே வாஸம் செய்யவேண்டும். (பிறகு இந்திரியங்களெல்லாம் தளர்ந்து போய்விடுமாகையால், சிறிது வைராக்யம் உண்டாயினும், ஸந்யாஸாச்ரமத்தைப் பெறலாம். வானப்ரஸ்த ஆச்ரமத்தை அனுஷ்டிப்பவன் வனத்தில் விளையக் கூடியவைகளும், சாஸ்த்ரங்களில் புசிக்கலாமென்று அனுமதிக்கப்பட்டவை ஆகையால் பரிசுத்தங்களுமான கிழங்கு, வேர், காய், பழம் முதலியவைகளால் ஜீவனத்தை நடத்திக் கொள்ள வேண்டும். மரவுரியை வஸ்த்ரமாக உடுத்திக் கொள்ள வேண்டும். அது கிடைக்காத பக்ஷத்தில், புல், இலை, தோல் இவைகளையாவது உடுத்திக்கொள்ள வேண்டும். தலைமயிர், உடம்பு மயிர், நகங்கள், தாடி, மீசை ஆகிய இவைகளை அப்படியே தரித்துக் கொண்டிருக்க வேண்டுமன்றி, நீக்கக்கூடாது. பல் தேய்க்கலாகாது. மூன்று காலங்களிலும் ஸ்னானம் செய்யவேண்டும். வெறும் பூமியில் புல் முதலியவைகளைப் பரப்பி, அதன் மேல் படுத்துக் கொள்ள வேண்டும். க்ரீஷ்ம ருதுவில் (கோடை காலத்தில்) பஞ்சாக்னி (ஐந்து நெருப்புகளுக்கு) மத்யத்தில் (இடையில்) இருந்து கொண்டு தன்னை அவ்வக்னி ஜ்வாலைகளால் தபிக்கச் செய்ய வேண்டும். வர்ஷருதுவில் (மழைக்காலத்தில்) விடா மழை பெய்து கொண்டிருப்பினும், அதைப் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும். சிசிர ருதுவில் (குளிர் காலத்தில்) கழுத்தளவு ஜலத்தில் அமிழ்ந்திருக்க வேண்டும். இத்தகைய நிலைமையுடன் தவம் செய்யவேண்டும்.

கிழங்குகளையும், வேர்களையும் அக்னியில் பக்வம் செய்து புசிக்க வேண்டும். பழங்களையோ என்றால், காலத்தினால் தானே பழுத்தவைகளைப் புசிக்க வேண்டும். செந்நெல் முதலியவைகளை உரலினாலாவது, கல்லினாலாவது குத்தி, உபயோகப்படுத்த வேண்டும். அல்லது பற்களையே உரலாகக் கொண்டு, கார்யத்தை நடத்திக் கொள்ளலாம். தன்னுடைய ஜீவனத்திற்கு ஸாதனமான கிழங்கு, வேர் முதலியவைகளைத் தானே கொண்டு வர வேண்டுமன்றி, பிறரால் வரவழைக்கலாகாது. 

தேச, காலங்களின் பல அபலங்களை ஆராய்ந்து, காலாந்தரத்தில் (முன்பே) கொண்டு வந்த காய், கிழங்கு முதலியவைகளைப் புசிக்கலாகாது. வனத்தில் கிடைக்கக் கூடிய செந்நெல் முதலியவைகளால் அந்தந்த காலங்களில் விதிக்கப்பட்ட ஆக்ரயணம் முதலிய சரு, புரோடாசாதிகளைச் (அக்னியியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் / மாவினால் ஆன பண்டம்) செய்து, அவைகளால் என்னை ஆராதிக்க வேண்டுமன்றி, வானப்ரஸ்த ஆச்ரமத்தில் இருப்பவன் வேதங்களில் விதிக்கப்பட்ட பசுக்களைக் கொன்று, அவைகளால் என்னை ஆராதிக்கலாகாது. வேதங்களால் முனிவர்களுக்கு விதிக்கப்பட்ட அக்னி ஹோத்ரம், தர்சம், பூர்ணமாஸம் முதலிய கர்மங்களாலும், என்னை வானப்ரஸ்தன் ஆராதிக்க வேண்டும். இவ்வாறு ஆயுள் வரையிலும் அனுஷ்டித்த தவத்தினால், ரக்த மாம்ஸங்களெல்லாம் உலர்ந்து, உடம்பு முழுவதும் நரம்புகளே நிறைந்தவனாகி, தவத்திற்கு நிர்வாஹகனாகையால் (நியமிப்பவனாகையால்) தபோமயனாகிய (தபஸ் வடிவனாகிய) என்னை ஆராதித்து, ரிஷிலோகமாகிய மஹர் லோகத்தைக் கடந்து, தேஹ அவஸானத்தில் (உடல் முடியும்போது) என்னைப் பெறுவான். (இந்தத் தவத்தையே பல அபிஸந்தியுடன் (பலனில் விருப்பத்துடன்) செய்வானாயின், அவனுக்கு ரிஷிலோகந்தான் நேரும். பல அபிஸந்தியில்லாமல் (பலனில் விருப்பமில்லாமல்) செய்வானாயின், அவனுக்கு என்னுடைய ப்ராப்தியே உண்டாகும்).