சனி, 31 அக்டோபர், 2020

இஃதறிந்தாள் சீறாளோ - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

தந்தை தாய் வாக்கிய பரிபாலனம் செய்யும் பொருட்டு தனக்கென தன் தந்தையால் அளிக்கப்பட்ட தரணியைத் தன் தம்பிக்காக விட்டு விட்டுத் தம்பி இலக்குவனுடனும் தன்னுயிர் போன்ற தகைசால் பத்தினி சானகியுடனும் சித்திரக்கூடத்திலிருந்து புறப்பட்ட தயரத குமாரனாகிய இராமன் தாபம் மிகுந்த கானகத்தில் காலடி எடுத்து வைத்தவுடன் முதன்முதலாக எதிர்ப்பட்டவன் விராதன்.


விராதன் ஓர் இயக்கன். அவனது காம உணர்ச்சியினால் ஏற்பட்ட அறிவீனத்தால் அரக்கனாக பிறக்கும்படி சாபம் பெற்றவன். பின்னர் நிகழவிருக்கும் இராவண வதத்திற்கு சூர்ப்பனகை எவ்வாறு மூலகாரணமாக வந்தமைந்தாளோ அதேபோல் அரக்கர் குல அழிவிற்கு அடிகோலுபவனாக வந்தமைகிறான் விராதன் என்று கூறலாம்.


விராதன் இராம இலக்குவர்களைத் தன் வலிய திரண்ட தோள்களில் ஏற்றிக்கொண்டு ஆகாய மார்க்கத்தில் செல்வதைக் கண்ட சனககுமாரி சஞ்சலமுற்றுக் கதறியழ, அதுகண்ட இலக்குவனன் தன் அண்ணணாகிய இராமனிடம் சீதையின் துயரைச்சொல்லி விளையாடியது போதும், இனியும் விளையாட வேண்டாம் என்று வேண்டுகிறான். வினைவிளை காலம் வந்ததையறிந்து கொண்ட அண்ணல் தன் திருவடியால் விராதனை அழுத்த அவனும் பேரிடியால் தாக்குண்ட பெருமலைபோல் தரையில் வீழ்கிறான்.


அவ்வாறு வீழ்ந்த விராதன் தன் பழவினைப் பயனால் இதுகாறும் எய்திருந்த அரக்க நிலை நீங்கி இயக்க நிலையடைந்து இராமனைப் பலவாறு புகழ்கிறான், துதிக்கிறான். அவனே பரம்பொருள் என்கிறான். அன்று யானைக்கு அபயமளித்துக் காத்த ஆதிமூலப் பொருளும் அவனே என்கிறான்.

எல்லாம் சரிதான். அவ்வாறு உய்த்துணர்ந்து உரையாற்றி வந்த விராதன் நடுவே ஓர் ஐயத்தையும் உருவாக்கி விடுகிறான் இராமன் மனதில். ஆனால் அவன் அண்ணலிடம் கேட்ட சந்தேகங்களுக்கு இராமனே தகுந்த சமாதானம் கூறியிருக்க முடியுமா? முடியாதுதான். அவைதான் என்ன? நாமும் அறியலாமே?

விரகம் விளைத்த வீரம் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

கம்பன் ஒரு மேதை. ஆம். மேதையிலும் சிறந்த மேதை செயற்கரிய செய்பவன்தானே மேதை. சந்தர்ப்பச் சூழ்நிலைகளை வைத்துக்கொண்டு பொருந்தாத இடங்களிலும் பொருந்துமாறு ஒர் இலக்கியப் படைப்பை உருவாக்குபவனை மேதை என்று அழைக்க நாம் தயங்கவேண்டியதே இல்லையே?


இங்கே அவ்வாறான ஒர் சந்தர்ப்பம். இராமகாதையில் யுத்த காண்டம் சூழ்ச்சியும், போரும், படையும் விரவி வரவேண்டிய பகுதி. இவ்விடத்திலும் ஒரு விந்தை புரிகின்றான் கவிச்சக்கரவர்த்தி தன் அற்புதத்திறமையால். மரணஒலிகள் எழுப்பவேண்டிய யுத்தகாண்டத்திலே. மறலிக்கு இடம் அளிக்கவேண்டிய ஓர் பகுதியிலே மன்மதனுக்கு வேலை கொடுக்கின்றான் கவிமேதை கம்பன். என்ன மன்மதனுக்கு வேலையா? எங்கே? என்ன! இதோ அதைக் காண்போம். கம்பராமாயணத்திலே யுத்தகாண்டம், ஐந்தாவதாக உள்ள படலம் இலங்கை கேள்விப்படலம் என்பது. இலங்காபுரியின் இணையில்லாச்செல்வன் வீடணன் இராமனிடம் அடைக்கலம் புகுந்துவிட்டான். இனி அடுத்ததாக இலங்கையை அடையவேண்டியதுதான். இராமனும், இலக்குவனும் தங்களது வானரப்படைகளுடன் கடற்கரையில் தங்கியிருக்கிறார்கள். போதாதற்கு வீடணன் வந்து சேர்ந்திருக்கின்றான். இலங்கையை அடையவேண்டுமென்றால் இடையே அகன்று பரந்து நிற்கும் கருங்கடல் இடையூறாக நிற்கிறது.


மாலை நேரம். இப்போதெல்லாம் இராமன் மன அமைதியை நாடி தனியே உலாவுவது வழக்கமாகிவிட்டது. அதுபோல் இப்போதும் இராமன் கடற்கரையில் நுண்ணிய வெண்ணிய மணற்பரப்பில் அமர்ந்து கருங்கடலையும் அதில் இடைவிடாது எழும்பி கரையில்வந்து மோதிச்செல்லும் வெண்ணிற அலைகளையும் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டிருக்கிறான்.


பகலவன் மேற்கு திசையில் சென்று மறைகிறான். வானம் தீநிறம் கொண்டு செவ்வானமாக காட்சியளிக்கிறது. சற்றைக்கெல்லாம் அந்தச்செவ்வானம் மறைந்து எங்கும் கரிய இருள் கவ்விக்கொள்கிறது. அரக்கர்கள் மாயையைப்போல் இருளில்தான் நோயாளிகளுக்கு நோயின்மிகுதி தோன்றும். இது உலக இயற்கை. அதும்டடும்தானா? இருள் தானே இடையூறுகளுக்கெல்லாம் தோழன். சனகக்குமாரியை பிரிந்து வாடும் சக்கரவர்த்தித்திருமகனின் மனதில் ஏற்ப்பட்டுள்ள வலியை மேலும் அதிகரிக்கச் செய்ய விரும்பியவன் போல் அநங்கனும் வந்து சேர்ந்தான் அவ்விடத்திற்கு.


வானத்தில் படர்ந்த காரிருள் கடல் நீரையெல்லாம் கொள்ளைக் கொண்டு வேறொரு புதிய தடாகத்தை உண்டு பண்ணியதுபோல் பிரமிக்கத்தக்க வகையில் காட்சியளிக்கிறது. அதற்கேற்றார் வகையில் வானத்தின்கண் படர்ந்திருந்த விண்மீன்கள் அந்தப் பெரும் பொய்கைக்கண்ணே படர்ந்திருந்த மலர்களை நிராகரித்து காணப்படுகின்றன.

வெள்ளி, 30 அக்டோபர், 2020

கம்பன் காட்டும் ஓர் இரவு பகல் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

ஒரு பொருளை நாம் காண்பதற்கும் ஒரு கவிஞன் காண்பதற்கும் வேற்றுமை இருக்கத்தான் செய்யும். நீர்ப்பெருக்கெடுத்து ஓடும் ஆறுகள் கோடையில் பெருக்கற்று அடிசுடும் மணற்பரப்பாகக் காட்சியளிப்பதையும் பசுமை நிறைந்த நிழல் தரும் மரங்களையும் பசையற்று ஒட்டி உலர்ந்த மரங்களையும் மற்ற இயற்கை நமக்கு அளித்திருக்கும் சாதனைகளை நாம் நம் வாழ்கையில் தினந்தோறும் தான் கண்டு கொண்டிருக்கிறோம். அவைகளைக் காணும் நமக்கு கருத்துக்கள் ஒன்றும் எழுவதில்லை. ஆனால் அதேப் பொருள்களைக் காணும் கவிஞர்கள் அவைகளிலுள்ள கருத்துக்களைக் கண்டு தாங்கள் மட்டும் அனுபவிக்காமல் நம் போன்ற பாமரர்களுக்கும் அக்கருத்துக்களை விளக்கத் தவறுவதில்லை. நாம் காணும் ஆற்றைத்தான் ஒளவையும் கண்டிருக்க வேண்டும். ஆற்றில் நிறைய நீர் இருந்த பொழுதும் அது கோடையில் வறண்டு நீரற்ற நிலையில் இருந்த பொழுதும் கண்டிருக்கக் கூடும். அவ்வாறு நீரற்ற நிலையிலும் தன் ஊற்றுப் பெருக்கால் உலகூட்டும் அந்த ஆற்றின் பெருந்தன்மையையும் கண்டிருக்கவேண்டும். உடன் அவருக்கு அதில் ஒரு கருத்துத் தோன்றியிருக்க வேண்டும். அதை வெளிப்படையாக நமக்கு எடுத்துக் காட்டுகிறார். நல்ல குடிப்பிறந்தவர்கள் வறுமையடைந்தாலும் தங்களால் இயன்ற உதவியை செய்யத்தவற மாட்டார்கள் என்ற உண்மையை அதனுடன் ஒப்பிட்டு அவர் எடுத்துக் காட்டிய பிறகுதான் நமக்கு விளங்குகிறது. 


கவையாகிக் கொம்பாகி காட்டகத்தில் நிற்கும் மரங்களை நாம் கண்டதுண்டு. அதே மரங்கள் கவிஞர் கண்களில் சபை நடுவே நீட்டோலை வாசியா நின்ற ஒரு குறிப்பறிய முடியாத கல்லாதவனை ஒப்பிட்டுக் காண்பிக்கிறது.


 நம் தோட்டங்களிலும் தென்னை மரங்கள் இருக்கத்தான் செய்கின்றன. நாம் அந்த மரங்களால் ஏற்படும் பலன்களைத் துய்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் அதில் நாம் காணாத ஓர் அரிய கருத்தை கவிஞன் உணர்ந்து நமக்கு காட்டத்தவறவில்லை. ஒருவருக்கு நாம் ஒரு உதவி செய்தால் அது என்று நமக்குப் பயன்தரும் என்று ஐயுறல் வேண்டாம். தென்னையைப் பாருங்கள். அது தான் உண்ட நீரை தலையாலே தரும் இயற்கையை போற்றுவோம் என்று நம்மை அறிவுறுத்துகிறார். இப்படியாக நாம் காண முடியாத நம் கண்களுக்குப் புலப்படாத இயற்கை தரும் அரும்பெரும் கருத்துக்களை கவிஞர்கள் காணத் தவறுவதில்லை. 


கவிச்சக்கரவர்த்தி கம்பன் மட்டும் இயற்கை காட்டும் கருத்துகளைக் காணத் தவறி விடுவானா? நாம் தினந்தோரும் காணும் கதிரவனும், உடுபதியும் கம்பனின் கண்களில் பலக் கருத்தோவியங்களைக் காட்டி வண்ண ஜாலங்கள் புரிகிறார்கள். அவன் பாடிய இராம காதையில் ஆரம்ப முதல் முடிவு வரை பற்பல இடங்களில் சந்தர்ப்பங்களுக்கு ஏற்றவாரெல்லாம் இரவையும் பகலையும் அதன் தலைவர்களாகிய மதியையும், இரவியையும் பயன்படுத்திக் கொள்ளத் தவறவில்லை. அவற்றுள் ஒன்றை இங்கு நாம் காணப்போகிறோம்.

கூவத்தின் சிறுபுனலும் அளப்பரும் ஆழ்கடலும் - மணப்பாக்கம் கோமான் வெங்கடாச்சாரி

அளத்தற்கரிய ஆழங்காண முடியாத, பெரும் கடல். அதை எடுத்துக் கையாளாத இலக்கியக் கர்த்தாக்களே கிடையாதென்று சொல்லலாம். அந்த அலை கடலிலே காணும் அரும் பெரும் குணங்களை ஆண்டவனோடு ஒப்பிட்டு கூறுவார்கள் பெரியோர். “கருமேக நெடுங்கடல் காரனையான்” என்று இராமனை தான் இயற்றிய இராமகாதையில் கம்பன் குறிப்பிடுகிறான். கடல் வண்ணனென்றும், ஆழிவண்ணனென்றும் பல பெரியோர்கள் ஆண்டவனை வருணித்து உள்ளார்கள். கடல் தன் நிறத்தினால் மட்டும் ஆண்டவனை ஒத்ததாக இருந்தால் அதற்கு அத்தனை சிறப்பு ஏற்பட்டிருக்க நியாயமில்லை. ஆண்டவன் எங்கும் நிறைந்தவன். எல்லாவிடங்களிலும் பரந்து இருக்கிறான். அவனில்லாமல் அணுவும் அசைய முடியாது. இத்தனை சிறந்த குணங்களிருந்தாலும் அவன் பக்தர்களுக்கு மிகவும் எளியவனாக ஆகிறான். எளியவன் மட்டுமென்ன. சில சமயம் அவர்களுக்கு அடிமையாகவும் ஆகிவிடுகிறான். அத்தன்மை அவனுடைய சிறந்த குணத்தைக் காட்டுகிறது.


அதே போன்று, உலகத்தில் பூமிப்பரப்பைக் காட்டிலும் கடற்பரப்பு அதிகமென்பது நாம் கண்டும், கேட்டும் அறிந்த உண்மையாகும். அதில் வசிக்கும் ஜீவராசிகள் எத்தனை? அதிலே மறைந்து கிடக்கும் அரும் பெரும் பொருள்கள் எத்தனை? இத்தனையிருந்தும் கடலானது தன்னைத்தானே அடக்கிக் கொண்டு பெருந்தன்மையாக இருக்கிறது என்றால் அதன் பெருமையை நாம் எவ்வாறு எடுத்துக்கூறுவது?


கடவுட் தன்மையைக் கடலிலே கண்டார்கள் சான்றோர்கள். அது கரையின்றி நிற்கும் அதிசயத்தை “ஆழாழி கரையின்றி நிற்கவில்லையோ” என்று தாயுமானவப் பெருந்தகை வியந்து பாராட்டினார். அதே கடல் தன் அலைக்கரங்களை வீசியும், அவ்வலைக்கரங்களைத் தனக்குள் தானே அடக்கிக் கொண்டும் நிலைத்து நிற்குந்தன்மையைக் கண்டு அதிசயித்த பன்னிரு வைணவப் பெரியோர்களில் ஒருவராகிய திருமழிசையாழ்வார்.


“தன்னுளே திரைத் தெழுந் தரங்கவெண்றரங்கடல்,

 தன்னுளே திரைத் தெழுந் தடங்குகின்ற தன்மை போல்” 


என்று கடலின் தன்மையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றார். நாமும் அதைக் கண்டு அதிசயிக்காமல் இருக்க முடியவில்லை.

புதன், 28 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 216

 ஒன்பதாவது ஸ்கந்தம் – இருபத்து நான்காவது அத்தியாயம்

(விதர்ப்பனுடைய பிள்ளைகளின் வம்சங்களைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- சைப்யை மணம்புரிவித்த அப்பெண்மணியிடத்தில் விதர்ப்பன், குசனென்றும், க்ரதனென்றும் இரண்டு பிள்ளைகளைப் பெற்றான். அப்பால், அவளிடத்திலேயே அவ்விதர்ப்பன், ரோமபாதனென்கிற மூன்றாம் பிள்ளையையும் பெற்றான். அவன் வைதர்ப்ப குலத்தை மேன்மேலும் வளரச் செய்தான். ரோமபாதன் பிள்ளை பாரு. அவன் பிள்ளை க்ரது. அவன் பிள்ளை குசிகன். அவன் பிள்ளை சேதி. அவனுக்குச் சைத்யன் முதலியவர்கள் பிறந்தார்கள். அவர்களெல்லோரும் அரசர்களாயிருந்தார்கள். விதர்ப்பனுடைய பிள்ளையாகிய க்ரதனுக்குக் குந்தியென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை வ்ருஷ்ணி. அவன் பிள்ளை நிர்வ்ருதி (வித்ருதி). அவன் பிள்ளை தசார்ஹன். அவன் பிள்ளை வ்யோமன். அவன் பிள்ளை ஜீமூதன். அவன் பிள்ளை விக்ருதி. அவன் பிள்ளை தீவ்ரரதன். அவன் பிள்ளை நவரதன். அவன் பிள்ளை தசரதன். அவன் பிள்ளை சகுனி. அவன் பிள்ளை கரம்பன். அவன் பிள்ளை தேவராதன். அவன் பிள்ளை தேவக்ஷத்ரன். அவன் பிள்ளை மது. அவன் பிள்ளை குகுரகன். அவன் பிள்ளை புருஹோத்ரன். அவன் பிள்ளை ஸாத்வதன். அவனுக்குப் பஜமானன், பஜி, தீப்தன், வ்ருஷ்ணி, தேவாப்ருதன், அந்தகன், மஹாபோஜன் என்று ஏழு பிள்ளைகள். அவர்களில் பஜமானனுக்கு, ஒரு மனைவியிடத்தில், நிம்ரோசி, கங்கணன், வ்ருஷ்ணி என்று மூன்று பிள்ளைகளும், மற்றொரு மனைவியிடத்தில் சதஜித்து, ஸஹஸ்ரஜித்து, அயுதஜித்து என்று மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள். ஸாத்வதனுடைய பிள்ளைகளில் தேவாப்ருதனுடைய பிள்ளை பருவென்பவன். தந்தையும் புதல்வனுமாகிய தேவாப்ருதன், பப்ரு இவர்களின் மஹிமையைப் பற்றிப் பெரியோர்கள் இவ்வாறு பாடுகிறார்கள். 

“தேவாப்ருதன், பப்ரு இவர்களிருவரையும் தூரத்தில் எப்படிப்பட்ட குணமுடையவர்களென்று கேட்கிறோமோ, ஸமீபத்திலும் அவர்களை அப்படிப்பட்ட குணமுடையவர்களாகவே காண்கின்றோம். பப்ரு, மனுஷ்யர்களில் சிறந்தவன். தேவாப்ருதன் தேவதைகளோடொத்தவன். பப்ருவுக்கும், தேவாப்ருதனுக்கும் பின்பு அவர்களுடைய வம்சத்தில் பதினாலாயிரத்து அறுபத்தைந்து புருஷர்கள் உண்டானார்கள். அவர்கள் எல்லோரும் இவர்களின் ப்ரபாவத்தினால் முக்தியை அடைந்தார்கள்” என பெரியோர்கள் பாடுகிறார்கள். ஸாத்வதனுடைய பிள்ளையாகிய மஹாபோஜன் மஹா தர்மிஷ்டன் (அறநெறியைப் பின்பற்றுபவன்). அவனுடைய வம்சத்தில், போஜர்களென்னும் அரசர்கள் பிறந்தார்கள். ஸாத்வதன் பிள்ளைகளில் மற்றொருவனாகிய விருஷ்ணிக்கு, ஸுமித்ரனென்றும், யுதாஜித்தென்றும் இரண்டு பிள்ளைகள். அவர்களில் யுதாஜித்துக்குச் சினியென்றும், அனமித்ரனென்றும் இரண்டு பிள்ளைகள். 

செவ்வாய், 27 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 215

 ஒன்பதாவது ஸ்கந்தம் – இருபத்து மூன்றாவது அத்தியாயம்

(யயாதியின் பிள்ளைகளான அனு, த்ருஹ்யு, துர்வஸு, யது இவர்களின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- யயாதியின் நான்காம் பிள்ளையாகிய அனுவுக்கு, ஸபாநரன், சக்ஷு, பரோக்ஷன் என்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் ஸபாநரன் பிள்ளை காலநாபன். அவன் பிள்ளை ஸ்ருஞ்சயன். அவன் பிள்ளை ஜனமேஜயன். அவன் பிள்ளை மஹாசாலன். அவன் பிள்ளை மஹாமனஸ்ஸு. அவனுக்கு உசீனரனென்றும், திதிக்ஷுவென்றும் இரண்டு பிள்ளைகள். அவர்களில் உசீனரனுக்கு, சிபி, வனன், க்ரிமி, தர்ப்பன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில் சிபிக்கு, வ்ருஷதர்ப்பன், ஸுவீரன், மத்ரன், கேகயன் என்று நான்கு பிள்ளைகள். உசீனரனுடைய தம்பியாகிய திதிக்ஷுவின் பிள்ளை வ்ருஷத்ரதன். அவன் பிள்ளை ஹேமன். அவன் பிள்ளை ஸுதபஸ்ஸு. அவன் பிள்ளை பலி (பிலன்). அந்தப் பலியின் மனைவியிடத்தில், தீர்க்கதமஸ்ஸென்னும் மஹர்ஷியால், அங்கன், வங்கன், கலிங்கன், ஸிம்ஹன் புண்ட்ரன், அந்த்ரன் என்பவர்கள் பிறந்தார்கள். அவர்களெல்லோரும், மன்னவர்களாயிருந்தார்கள். அவர்கள், கிழக்குத் திக்கில், தங்கள் தங்கள் பெயரால் ஆறு தேசங்களை உண்டாக்கினார்கள். 

அவர்களில், அங்கன் பிள்ளை கனபானன். அவன் பிள்ளை ஹவிரதன். அவன் பிள்ளை தர்மரதன். அவன் பிள்ளை சித்ரரதன். அவனுக்குப் பிள்ளையில்லை. அவனே ரோமபாதனென்று ப்ரஸித்தனாயிருந்தான். அவனுக்கு ஸ்நேஹிதனான தசரதன், தன் புதல்வியான சாந்தை என்பவளைக் கொடுத்தான். அப்பெண்மணியை ருச்யச்ருங்கர் மணம் புரிந்தார். அவர், விபண்டக முனிவர்க்கு பெண்மானிடத்தில் பிறந்தவர். ரோமபாதனுடைய ராஜ்யத்தில் மழை பெய்யாதிருக்கையில், மழைக்காக அம்மன்னவனால் அனுப்பப்பட்ட விலைமாதர்கள் சென்று, நாட்யம், ஸங்கீதம், வாத்யம், இவைகளாலும், விலாஸங்களாலும் (பார்வை, விளையாட்டு முதலியவற்றாலும்), ஆலிங்கனம் (கட்டிப்பிடித்தல்) முதலியவைகளாலும் அவரை வசப்படுத்தி, பட்டணத்திற்கு வரவழைத்தார்கள். அந்த ருச்யச்ருங்க முனிவர், ஸந்ததியற்ற தசரத மன்னவனைக் கொண்டு மருத்வானைக் குறித்து ஒரு யாகம் செய்வித்து, அவனுக்கு ஸந்ததி உண்டாகும்படி செய்தார். பிள்ளையில்லாதிருந்த அம்மன்னவனும், அதனால் பிள்ளைகளைப் பெற்றான். ரோமபாதன் பிள்ளை சதுரங்கன். அவன் பிள்ளை ப்ருதுலாக்ஷன். அவனுக்கு ப்ருஹத்ரதன், ப்ருஹத்கர்மன், ப்ருஹத்பானு என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் ப்ருஹத்ரதன் பிள்ளை ப்ருஹன்மனஸ்ஸு. அவன் பிள்ளை ஜயத்ரதன். அவனுக்கு, ஸம்பூதியென்னும் மனைவியிடத்தில் விஜயன் பிறந்தான். அவன் பிள்ளை த்ருதி. அவன் பிள்ளை த்ருதவ்ரதன். அவன் பிள்ளை ஸத்யகர்மன். அவன் பிள்ளை அதிரதன். இவன் கங்கையின் கரையில் விளையாடிக் கொண்டிருக்கையில், குந்தி, தனக்குத் திருமணம் ஆவதற்கு முன்பு, ஸூர்ய பகவானது அருளால் பிறந்த பிள்ளையை ஒரு பெட்டியில் வைத்து மூடிக் கங்கையின் வெள்ளத்தில் விட, அதில் அடித்துக்கொண்டு வருகின்ற அந்தப் பெட்டியை, ஸந்ததியற்ற அம்மன்னவன் கண்டெடுத்து, அதற்குள்ளிருந்த குழந்தையைத் தனக்குப் பிள்ளையாக வைத்துக்கொண்டான். அந்த பிள்ளை கர்ணனென்னும் பெயருடையவன். அங்க தேசத்து மன்னனான கர்ணனின் மகன் வ்ருஷஸேனன்.

திங்கள், 26 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 214

ஒன்பதாவது ஸ்கந்தம் – இருபத்து இரண்டாவது அத்தியாயம்

(திவோதாஸனுடைய வம்சத்தையும், ருக்ஷனுடைய வம்சத்தையும் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- முத்கலனுடைய பிள்ளையாகிய திவோதாஸனுக்கு மித்ராயுவென்பவன் பிறந்தான். அவனுக்கு, சயவனன், ஸுதாஸன், ஸஹதேவன், ஸோமகன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில், ஸோமகனுக்கு நூறு பிள்ளைகள். அவர்களில், ஜந்து என்பவன் எல்லார்க்கும் ஜ்யேஷ்டன் (மூத்தவன்). ப்ருஷதனென்பவன், எல்லார்க்கும் கனிஷ்டன் (இளையவன்). ப்ருஷதனுடைய பிள்ளை த்ருபதன். த்ருபதனுக்கு, த்ரௌபதியென்னும் புதல்வியும், த்ருஷ்டத்யும்னன் முதலிய புதல்வர்களும் பிறந்தார்கள். த்ருஷ்டத்யும்னனுடைய பிள்ளை, த்ருஷ்டகேது. பர்ம்யாச்வனுடைய வம்சத்தில் பிறந்த இந்த த்ருஷ்டத்யும்னாதிகள், பாஞ்சாலரென்னும் பெயருடைய முத்கல வம்சத்தில் பிறந்தவர்களாகையால், பாஞ்சாலகர்களென்று கூறப்படுகிறார்கள்.

அஜமீடனுக்கு ருக்ஷனென்று மற்றொரு புதல்வன் இருந்தான். அவன் பிள்ளை ஸம்வரணன். அவன், ஸூர்யனுடைய பெண்ணாகிய தபதியென்பவளிடத்தில், குருவென்னும் புதல்வனைப் பெற்றான். அவன் குருக்ஷேத்ரத்திற்கு ப்ரபு. அந்தக் குருவுக்குப் பரீக்ஷித்து, ஸுதனு, ஜஹ்னு, நிஷதன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில் ஸுதனுவின் பிள்ளை ஸுஹோத்ரன். அவன் பிள்ளை ச்யவனன். அவன் பிள்ளை க்ருதி. அவன் பிள்ளை உபரிசரவஸு. அவனுக்கு, ப்ருஹத்ரதன், குஸும்பன், மத்ஸ்யன், ப்ரத்யக்ரன், சேதிபன் முதலிய இவர்கள் பிள்ளைகள். அவர்கள் சேதி தேசங்களை ஆண்டு வந்தார்கள். அவர்களில், ப்ருஹத்ரதனுடைய பிள்ளை குசாக்ரன். அவன் பிள்ளை ருஷபன். அவன் பிள்ளை புஷ்பவான். அவன் பிள்ளை ஹிதன் (ஸத்யஹிதன்). அவன் பிள்ளை ஜஹு (ஜகு).

ப்ருஹத்ரனுக்கு மற்றொரு பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்), இரண்டு துண்டங்கள் பிறந்தன. அவற்றை அவள் வெளியில் போட்டாள். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஜரை என்னும் ராக்ஷஸி, “ஜீவிப்பாயாக. ஜீவிப்பாயாக.” என்று சொல்லிக்கொண்டு, அவ்விரண்டு துண்டங்களையும் ஒன்று சேர்த்தாள். ஜரை ஸந்தானம் செய்ததனால் (சேர்த்ததால்), அப்புதல்வன் ஜராஸந்தனென்று பெயர்பெற்றான். ஜராஸந்தனுக்கு, ஸஹதேவன் பிறந்தான். ஸஹதேவனுக்கு ஸோமாபியென்றும், ஸ்ருதஸ்ரவனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். குருவின் பிள்ளைகளில், பரீக்ஷித்துக்கு ஸந்ததி இல்லை. ஜஹ்னுவுக்கு ஸுரதனென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை விதூரதன். அவன் பிள்ளை ஸார்வபௌமன். அவன் பிள்ளை ஜயஸேனன். அவன் பிள்ளை ராதிகன். அவன் பிள்ளை த்யுமான். அவன் பிள்ளை க்ரோதனன். அவன் பிள்ளை தேவாதிதி. அவன் பிள்ளை ருக்ஷன். அவன் பிள்ளை திலீபன். அவன் பிள்ளை ப்ரதீபன். அவனுக்கு, தேவாபி, சந்தனு, பாஹ்லீகன் என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் தேவாபி, தந்தை கொடுத்த ராஜ்யத்தைத் துறந்து, வனத்திற்குச் சென்றான். பிறகு, சந்தனு ராஜ்யத்தை ஆண்டு வந்தான். அவன் பூர்வ ஜன்மத்தில், மஹாபிஷனென்று பெயர் பெற்றிருந்தான். அவன் இந்த ஜன்மத்தில் எவரெவரைக் கைகளால் தொடுகிறானோ, அவர்கள் அனைவரும் கிழவர்களாயினும், யௌவன (இளம்) வயதைப் பெற்று, மேலான சாந்தி குணத்தையும் அடைந்து கொண்டிருந்தார்கள். அதனால், அவன் ஜனங்களுக்கு ஸுகத்தை விளைத்துக் கொண்டிருந்தானாகையால், சந்தனுவென்று பெயர் பெற்றான். 

சனி, 24 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 213

 ஒன்பதாவது ஸ்கந்தம் - இருபத்தொன்றாவது அத்தியாயம்

(பரதனுடைய ஸந்ததியையும் (பரம்பரையையும்), ரந்தி தேவனுடைய வ்ருத்தாந்தத்தையும் (கதையையும்) கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- விததனுடைய பிள்ளை மன்யு. அவனுக்கு, ப்ருஹத்க்ஷத்ரன், ஜயன், மஹாவீர்யன், நரன், கர்க்கனென்று ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், நரனுடைய பிள்ளை ஸங்க்ருதி. பரீக்ஷித்து மன்னவனே! ஸங்க்ருதிக்குக் குருவென்றும், ரந்திதேவனென்றும் இரண்டு பிள்ளைகள் பிறந்தார்கள். ரந்திதேவனுடைய கீர்த்தியை (புகழை), இஹ (இந்த) லோகத்திலும், பர (வேறு) லோகத்திலும் பாடுகிறார்கள். அவன் தான் ஒரு முயற்சியும் செய்யாமல், தெய்வாதீனமாய்க் கிடைத்தவைகளைக் கொண்டு ஸந்தோஷமுற்றிருப்பவன்; அவ்வப்பொழுது, தெய்வாதீனமாய்க் கிடைத்தவற்றையெல்லாம் புசிக்க விரும்புகின்றவர்களுக்குக் கொடுத்துவிடும் தன்மையன். ஸாயங்காலத்திற்கென்றாவது, நாளைக்கென்றாவது சிறிதும் மிகுத்து வைத்துக்கொள்வது அவனுக்கு வழக்கமில்லை. அவன் குடும்பத்துடன் இளைத்திருப்பினும், ஜிதேந்தரியனாகையால் (புலன்களை வென்றவனாகையால்), அதைப்பற்றி வருத்தமுறாமலேயிருப்பான். அவன் ஒருகால் ஆஹாரமின்றி, ஜலத்தையும் கூடப் பருகாமல், நாற்பத்தெட்டு நாள் வெறுமனே இருந்தான். அவனுடைய குடும்பம் வருத்தமுற்றிருந்தது. பசி, தாஹங்களால் நடுக்கமுற்றிருக்கின்ற அம்மன்னவன், ஒருநாள் காலையில் தெய்வாதீனமாய்க் கிடைத்த நெய், பாயஸம், அப்பம் இவைகளையும், ஜலத்தையும் புசிக்க விரும்பித் தொடங்குகையில், அப்பொழுது ஒரு ப்ராஹ்மணன் அதிதியாக அவ்விடம் வந்தான். அந்த ரந்தி தேவன், ப்ரீதியுடனும், சிரத்தையுடனும் கூடி, ஸமஸ்த பூதங்களிலும் பரமபுருஷன் வஸிக்கிறானாகையால், எல்லாம் பகவத் ஸ்வரூபமென்று பாவித்து, தான் புசிக்க வைத்திருந்த நெய், பாயஸம் முதலியவற்றை அந்த அதிதிக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அந்த ப்ராஹ்மணன், அதைப் புசித்துப் போனான். பிறகு, அம்மன்னவன் மிகுந்த அன்னத்தை, தன் குடும்பத்திற்குப் பங்கிட்டுக்கொடுத்துத் தானும் புசிக்க விரும்புகையில், ஒரு கீழ் குலத்தவன் மற்றொரு அதிதியாய் வந்து சேர்ந்தான். அம்மன்னவன், பகவானை நினைத்துக்கொண்டு, தனக்காக வைத்துக் கொண்டிருப்பதில், அவனுக்குப் பங்கிட்டுக் கொடுத்தான். அவன் போனபின்பு, மற்றொருவன் நாய்களால் சூழப்பெற்று, அதிதியாய் வந்து, அம்மன்னவனைப் பார்த்து “ராஜனே! என் கூட்டத்துடன் பசியினால் வருந்துகின்ற எனக்கு அன்னம் கொடுப்பாயாக” என்றான். அம்மன்னவன், அதிதிகளுக்குக் கொடுத்து, மிகுந்திருக்கின்ற அவ்வன்னத்தை வெகுமதியுடன் நாய்களுக்கும், அவற்றையோட்டிக்கொண்டு வந்தவனுக்கும், கொடுத்துப் பரமபுருஷ பாவனையால் அவனுக்கு நமஸ்காரம் செய்தான். பிறகு, ஜலம் மாத்ரமே மிகுந்திருந்தது. அதுவும் ஒருவனுக்கு மாத்ரமே த்ருப்தியை விளைக்கக்கூடிய அளவுள்ளதாயிருந்தது. அம்மன்னவன், அந்த ஜலத்தைப் பானஞ் செய்யத் தொடங்குகையில், ஒரு புலையன் வந்து,  “மன்னவனே ! நீசனாகிய (தாழ்ந்தவனாகிய) எனக்கு ஜலம் கொடுப்பாயாக” என்றான். அந்தப் புலையன் மொழிந்த வார்த்தை மிகவும் தீனமாகி, அவனுடைய வருத்தத்தையெல்லாம் வெளியிடக்கூடியதாயிருந்தது. ரந்திதேவன் அவ்வசனத்தைக் கேட்டு, மன இரக்கத்தினால் மிகவும் பரிதபித்து, அவனைக் குறித்து இவ்வாறு அம்ருதம் போன்ற வசனத்தை மொழிந்தான்.

வெள்ளி, 23 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 212

 ஒன்பதாவது ஸ்கந்தம் - இருபதாவது அத்தியாயம்

(பூருவின் வம்சமும், சகுந்தலோபாக்யானமும், பரதனுடைய வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- “பரீக்ஷித்து மன்னவனே! நீ எந்த வம்சத்தில் பிறந்தனையோ, அப்படிப்பட்ட பூருவின் வம்சத்தைச் சொல்லுகிறேன்.” மற்றும், இவ்வம்சத்தில், வம்சத்தை மேன்மேலும் வளர்ப்பவர்களான, ராஜர்ஷிகளும், அத்தகைய ப்ராஹ்மணர்களும், பிறந்தார்கள். பூருவின் பிள்ளை ஜனமேஜயன். அவன் பிள்ளை ப்ரதன்வான். அவன் பிள்ளை ப்ரவிரோதன். அவன் பிள்ளை நமஸ்யு. அவன் பிள்ளை சாரு. அவன் பிள்ளை ஸுத்யு. அவன் பிள்ளை பஹூகவன். அவன் பிள்ளை சர்யாதி (ஸம்யாதி). அவன் பிள்ளை அஹம்யாதி. அவன் பிள்ளை ரௌத்ராதி. (ரௌத்ராஸ்வன்). ஸர்வஸ்மாத்பரனும் (எல்லாவற்றையும் விட மேலானவனும்), ஜகத்ஸ்வரூபனுமாகிய பகவானிடத்தினின்று, பத்து இந்த்ரியங்கள் உண்டானாற்போல, அந்த ரௌத்ராதிக்கு, க்ருதாசியென்னும் அப்ஸரமடந்தையிடத்தில், ருதேபு, கக்ஷேபு, ஸ்தலேபு, க்ருதேபு, ஜலேபு, ஸந்ததேபு, தர்மேபு, ஸத்யேபு, வரதேபு, வனேபு என்று பத்துப் பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், ருதேபுவின் பிள்ளை ரந்திஸாரன். அவனுக்கு, ஸுமதி, த்ருவன், அப்ரதிரதனென்று மூன்று பிள்ளைகள். அவர்களில், அப்ரதிரதனுடைய பிள்ளை கண்வன். அவன் பிள்ளை மேதாதிதி. அவனுக்கு ப்ரஸ்கணவர் முதலிய ப்ராஹ்மணர்கள் பிறந்தார்கள். ரந்திஸாரனுடைய பிள்ளையாகிய ஸுமதிக்கு, ரைப்யனென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை துஷ்யந்தன். அவன் ப்ரஸித்தன்.  

துஷ்யந்தன் ஒருகால் வேட்டைக்காகத் திரிந்து கொண்டு, தெய்வாதீனமாய்க் கண்வ மஹர்ஷியின் ஆச்ரமத்திற்குச் சென்றான். அம்மன்னவன், அங்கு ஸ்ரீமஹாலக்ஷ்மியைப் போன்று தன் தேஹகாந்தியாலேயே தன்னையும், ஆச்ரமத்தையும், அலங்கரிப்பவளும், தேவமாயை போன்றவளுமான, ஒரு மடந்தையைக் கண்டு அப்பொழுதே மோஹித்தான் (மயங்கினான்). அவன் அவளைக் கண்ட மாத்ரத்தில், மிகவும் ஸந்தோஷம் அடைந்து, வேட்டையாடின வருத்தமும் தீர்ந்து, மன்மத பாதையால் (காதல் ஆசை தாக்கத்தால்) பரிதபித்து, சில படர்களுடன் (சேவகர்களுடன்) சென்று, புன்னகை செய்து கொண்டே, அம்மடந்தையர் மணியை நோக்கி, இனிய உரையுடன் மொழிந்தான்.

வியாழன், 22 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 211

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பத்தொன்பதாவது அத்தியாயம்

(யயாதி விரக்தியினால் தேவயானிக்குத் தன் நிலைமையைக் கூறி மோக்ஷம் பெறுதலும், தேவயானியும் யயாதியின் உபதேசத்தினால் விவேகம் உண்டாகப்பெற்று, ஸ்ரீக்ருஷ்ண த்யானத்தினால், சரீரத்தைத் துறத்தலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அந்த யயாதி மன்னவன், இவ்வாறு ஸ்த்ரீலோலனாகி (பெண்ஆசை பிடித்து), காம ஸுகங்களை (காதல் ஆசை இன்பங்களை) அனுபவித்துக் கொண்டிருக்கையில், ஒருகால் தன் புத்தி வழி தப்பி மயங்கினதை அறிந்து, வெறுப்புற்று, தன் காதலியான தேவயானிக்கு ஒரு பழைய கதையைக் கூறினான்.

யயாதி சொல்லுகிறான்:- “பார்க்கவருடைய புதல்வியே! என்னைப்போன்ற மூடனுடைய வ்ருத்தாந்தத்தை (கதையை) உட்கொண்டிருப்பதாகிய ஒரு பழைய இதிஹாஸத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. பார்க்கவீ! என்னைப் போன்ற மூடனான க்ருஹஸ்தனுடைய வ்ருத்தாந்தத்தை வனத்திலுள்ள ஜிதேந்திரியர்கள் (புலனை வென்றவர்கள்) மன இரக்கத்தினால் சோகிக்கிறார்கள். அரண்யத்தில் (காட்டில்) தனியே திரிந்து கொண்டிருக்கின்ற ஒரு ஆடு, தனக்கு இன்பத்தைத் தேடிக்கொண்டு, தன் கர்மத்திற்கு உட்பட்டு, கிணற்றில் விழுந்திருக்கின்ற ஒரு பெண் ஆட்டைக் கண்டது. அது காம ஸுகத்தை அனுபவிக்க வேண்டுமென்னும் விருப்பமுடையதாகையால், அந்தப் பெண் ஆட்டைக் கிணற்றினின்று கறையேற்றுவதற்கு உபாயத்தை ஆலோசித்துக் கரையில் கொம்பின் நுனியால் மண் முதலியவற்றை எடுத்து, கரையேறும் வழியை உண்டாக்கிற்று. பிறகு அழகிய இடையின் பின்புறமுடைய அந்தப் பெண் ஆடு, கிணற்றினின்று கரையேறி, அந்த ஆண் ஆட்டையே தனக்குக் கணவனாகும்படி விரும்பிற்று. அப்பால், அந்தப் பெண் ஆடு விரும்பினதைக் கண்டு, மற்றும் பல பெண் ஆடுகளும் அங்கங்களெல்லாம் பருத்து தாடி, மீசைகள் அமைந்து, மிகுந்த ரேதஸ் (விந்து) உடையதும், மைதுன (பெண்ணுடன் சேரும்) வ்யாபாரத்தில் திறமையுடையதுமாகிய, அந்த ஆண் ஆட்டையே மிகுந்த மனவிருப்பத்துடன் மேல்விழுந்து, விரும்பின. 

புதன், 21 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 210

ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினெட்டாவது அத்தியாயம்

(யயாதியின் வ்ருத்தாந்தம்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ப்ராணிகளுக்கு ஆறு இந்த்ரியங்கள் போல, நஹுஷனுக்கு யதி, யயாதி, ஸம்யாதி, ஆயாதி, விக்ருதி, க்ருதி என்னும் ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், மூத்தவனான யதியென்பவன், தந்தை தனக்கு ராஜ்யம் கொடுக்கினும், அதில் கடைசியாக விளையும் துக்கங்களை அறிந்தவனாகையால், அதை அங்கீகரிக்கவில்லை. ராஜ்யத்தில் இழிந்தவன், தன்னை அறியமாட்டானல்லவா? பிறகு நஹுஷன், இந்த்ர பதவியைப் பெற்று, இந்திராணியைப் புணர (சேர) விரும்புகையில், அவள் அகஸ்த்யர் முதலிய ப்ராஹ்மணர்களிடம் விண்ணப்பம் செய்ய, அவர்களும் அவனை வாஹனத்தில் ஏற்றிக்கொண்டு ஊர்கோலம் வர, நஹுஷன் இந்த்ராணியைப் புணர (சேர) வேண்டும் என்னும் விருப்பத்தினால் விரைந்து, சீக்ரம் போகும்படி அம்முனிவர்களைக் கால் கட்டை விரலால் குற்றித் தூண்ட, அவர்கள் அவனுடைய துர்ப்புத்தியைக் (கெட்ட புத்தியைக்) கண்டு, கோபித்து,  “ஸர்ப்பமாய் விடுவாயாக” என்று சபித்து, வாஹனத்தினின்றும் கீழே விழத் தள்ள, அவன் அப்படியே ஸ்வர்க்கத்தினின்று நழுவி, மலைப்பாம்பாகப் பிறந்தான். யயாதி, தன் தந்தை அவ்வாறு இந்த்ரப் பதவியினின்று நழுவின பின்பு, ராஜ்யத்தைக் கைப்பற்றி ஆண்டு வந்தான். அவன், தன் தம்பிகளான ஸம்யாதி முதலிய நால்வரையும், நான்கு திசைகளில் ஏற்பாடு செய்து, தான் சுக்ரனுடைய பெண்ணான தேவயானியையும், வ்ருஷபர்வனுடைய பெண்ணான சர்மிஷ்டையையும் மணம் புரிந்து, பூமியைப் பாதுகாத்து வந்தான்.

பரீக்ஷித்து மன்னவன் சொல்லுகிறான்:- மஹானுபாவனாகிய சுக்ரன் ப்ரஹ்மர்ஷி. யயாதி க்ஷத்ரியர்களிலும் தாழ்ந்தவன். ஆகையால் க்ஷத்ரியனுக்கும், ப்ராஹ்மணனுக்கும் ப்ரதிலோமமான (உயர்ந்த ஜாதிப் பெண்ணை தாழ்ந்த ஜாதி ஆண் மணக்கும்) ஸம்பந்தம் எப்படி நேர்ந்தது?

செவ்வாய், 20 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 209

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினேழாவது அத்தியாயம்

(புரூரவன் பிள்ளைகளில் ஆயுவின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புரூரவனுடைய பிள்ளைகளில் ஆயுவென்பவன் ஒருவன் உண்டென்று மொழிந்தேனல்லவா? அவனுக்கு நஹுஷன், க்ஷத்ரவ்ருத்தன், ரஜி, ரம்பன், அனேனன் என்று ஐந்து பிள்ளைகள் பிறந்தார்கள். எல்லோரும் மிகுந்த வீர்யமுடையவர்கள். அவர்களில், க்ஷத்ரவ்ருத்தனுடைய வம்சத்தைச் சொல்லுகிறேன்; கேட்பாயாக. 

ராஜச்ரேஷ்டனே! க்ஷத்ரவ்ருத்தனுடைய பிள்ளை ஸுஹோத்ரனென்பவன். அவனுக்கு காச்யன், குசன், க்ருத்ஸ்னமதனென்று மூன்று பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், க்ருத்ஸ்னமதனுடைய பிள்ளை சுனகன். அவனுக்குச் சௌனகர் பிறந்தார். அவர் பஹ்வ்ருசர்களில் (ரிக் வேத மந்த்ரங்களில்) சிறந்தவர்; முனிவராயிருந்தார். காச்யனுடைய பிள்ளை காசிராஜன். அவன் பிள்ளை தீர்க்கதபன். அவன் பிள்ளை தன்வந்தரி. அவனே ஆயுர்வேதமென்கிற வைத்ய சாஸ்தரத்தை வெளியிட்டான். அவன் யஜ்ஞத்தில் ஹவிர்ப்பாகம் (யாகத்தில் தேவதைகளுக்காக அக்னியில் ஹோமம் செய்யப்படும் பொருள்) பெற்றவன்; வாஸுதேவனுடைய அம்சாவதாரம். நினைத்த மாத்ரத்தில், ரோகத்தைப் (வியாதியை) போக்கவல்லவன். (இவன் ஸமுத்ரம் கடையும் பொழுது உண்டான தன்வந்தரியைக் காட்டிலும் வேறுபட்டவன்). அவன் பிள்ளை கேதுமான். அவன் பிள்ளை பீமரதன். அந்தக் கேதுமானுக்கு த்யுமானென்று மற்றொரு பிள்ளை உண்டு. அவன் திவோதாஸனென்றும், ப்ரதர்த்தனனென்றும், சத்ருஜித்தென்றும், வத்ஸனென்றும், ருதத்வஜனென்றும், குவலயாச்வனென்றும் பல நாமங்களைப் பெற்றான். அவனுக்கு அலர்க்கன் முதலிய பல பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் அலர்க்கனொருவனே யௌவனத்துடன் (இளமையுடன்) அறுபத்தாறாயிரம் வர்ஷங்கள் பூமியை ஆண்டு வந்தான். 

அக்காலத்தில், அவனைத்தவிர மற்றெவனும் யௌவனத்துடன் (இளமையுடன்) பூமியை ஆளவில்லை. அலர்க்கன் பிள்ளை ஸந்நதி. அவன் பிள்ளை ஸுகேதன். அவன் பிள்ளை ஸுகேதனன். அவன் பிள்ளை தர்மகேது. அவன் பிள்ளை ஸத்யகேது. அவன் பிள்ளை திருஷ்டகேது. அவன் பிள்ளை ஸுகுமாரன். அவன் மன்னவனாயிருந்தான். அவன் பிள்ளை வீதிஹோத்ரன். அவன் பிள்ளை பர்க்கன். அவன் பிள்ளை பர்க்கபூமி. இவ்வாறு சொல்லப்பட்ட இம்மன்னவர்கள், காச்யனுடைய வம்சத்தில் பிறந்தவர்கள். காச்யனுடைய கொள்பாட்டனாகிய (தாத்தாவின் தகப்பனார்) க்ஷத்ரவருத்தனுடைய வம்சத்தைச் சேர்ந்தவர்கள். (ஆயுவின் பிள்ளைகளில் ஒருவனான க்ஷத்ரவருத்தனுடைய வம்சத்தை மொழிந்தேன். இனி அவர்களில் மற்றொருவனான ரம்பனுடைய வம்சத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக).

திங்கள், 19 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 208

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினாறாவது அத்தியாயம்

(கார்த்தவீர்யார்ஜுனன் பிள்ளைகள் ஜமதக்னியை வதித்தலும், ராமன் அதற்காக க்ஷத்ரியர்களை அழித்தலும், விச்வாமித்ரர் வம்சமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு தந்தையினால் கட்டளையிடப் பெற்ற (பரசு)ராமன், அப்படியே என்று அங்கீகரித்து ஒரு வர்ஷம் தீர்த்த யாத்ரை நடத்தி, மீளவும் ஆச்ரமத்திற்கு வந்தான். இவ்வாறு இருக்கையில் ஒருநாள், ஜமதக்னியின் பார்யையாகிய (மனைவியாகிய) ரேணுகை கங்கைக்குச் சென்று, சித்ரரதனென்னும் கந்தர்வராஜன் அப்ஸர ஸ்த்ரீகளுடன் ஜலக்ரீடையாடிக் (நீரில் விளையாடிக்) கொண்டிருக்கக் கண்டாள். ஜலம் கொண்டு வருவதற்காகக் கங்கைக்குப் போன ரேணுகை, நீர் விளையாடலுற்றிருக்கின்ற சித்ரரதனைப் பார்த்துக் கொண்டே, அவனிடத்தில் சிறிது மனவிருப்பமுற்று, பர்த்தாவின் அக்னிஹோத்ர ஹோம வேளையை மறந்தாள். அப்பால், ரேணுகை வெகுமுயற்சியின் மேல் அவ்வாறு ஹோம வேளை கடந்தது என்பதை நினைத்து, முனிவரான தன் பர்த்தாவினிடத்தினின்று தனக்குச் சாபம் நேருமென்று சங்கித்து (ஸந்தேஹப்பட்டு), விரைவுடன் வந்து, தீர்த்தக்குடத்தைப் பர்த்தாவின் முன்னே வைத்து, கைகளைக் குவித்துக் கொண்டு நின்றாள். 

பிறகு, ஜமதக்னி முனிவர், பத்னியின் வ்யபிசாரத்தை (வேறு ஒரு ஆணிடம் மன விருப்பமுற்றதை) அறிந்து, மிகவும் கோபித்து, பிள்ளைகளைப் பார்த்து “ஓ என் அருமைப் புதல்வர்களே, பாபிஷ்டையான (பாபியாகிய) இவளைக் கொன்று விடுங்கள்” என்றார். அவர்கள், மாத்ரு வதத்திற்குக் கூசி, அவர் கட்டளையைச் செய்யாதிருந்தார்கள். பிறகு, (பரசு)ராமன் தந்தையால் தூண்டப்பட்டு, மாதாவையும், கட்டளையைக் கடந்த ப்ராதாக்களையும் (ஸகோதரர்களையும்) வதித்தான். (பரசு)ராமன், முனிவராகிய தன் தந்தையினுடைய ஸமாதி மஹிமையையும், தவமஹிமையையும் அறிந்தவனாகையால், “நாம் இதைச் செய்யாமற் போவோமாயின், இவர் நம்மையும் சபித்து விடுவார். வதிப்போமாயின், மீளவும் அருள் புரிவிக்கப் பெற்று மரணமடைந்தவர்களையும் பிழைப்பிக்கச் செய்யலாம்” என்று நிச்சயித்து, சிறிதும் அஞ்சாமல், மாதாவையும், ப்ராதாக்களையும் (ஸகோதரர்களையும்), தந்தையின் கட்டளைப்படி வதித்தான். 

பிறகு, ஸத்யவதியின் புதல்வராகிய ஜமதக்னி, ஸந்தோஷம் அடைந்து, (பரசு)ராமனைப் பார்த்து வரம் வேண்டும்படி தூண்டினார். ராமனும், தன்னால் வதிக்கப்பட்ட மாதாவும், ப்ராதாக்களும் (ஸகோதரர்களும்), ஜீவிக்க (உயிர்பெற) வேண்டுமென்றும், அவர்களுக்கு இவன் நம்மை வதித்தான் என்கிற நினைவு மறக்கவேண்டுமென்றும், வரங்களைக் கேட்டான். பிறகு, அந்தப் ப்ராதாக்களும் (ஸகோதரர்களும்), மாதாவும் தூங்கியெழுந்திருப்பவர் போலச் சீக்ரத்தில் க்ஷேமமாகப் பிழைத்தெழுந்திருந்தார்கள். தந்தைக்குள்ள இத்தகைய தவமஹிமையை (பரசு)ராமன் அறிந்தவனாகையால், அவர்களை வதித்தான். ஆகையால், அவன் செய்தது தவறு அன்று. (கார்த்தவீர்ய)அர்ஜூனனுடைய பிள்ளைகள் பதினாயிரம் பேர்களும், (பரசு)ராமனுடைய வீர்யத்திற்குத் தோற்று, ஓடிப்போய் விட்டார்களென்று மொழிந்தேனல்லவா? அவர்கள், தங்கள் தந்தையின் வதத்தை நினைத்து, அவ்வருத்தத்தினால் சிறிதும் சுகத்தை அடையாதிருந்தார்கள். ஒருகால், (பரசு)ராமன் தன் ப்ராதாக்களுடன் (ஸகோதரர்களுடன்) ஆச்ரமத்தினின்றும் வனத்திற்குப் போயிருக்கையில், (கார்த்தவீர்ய)அர்ஜுனன் பிள்ளைகள், ஸமயம் நேரப்பெற்று, பழிக்குப் பழி வாங்க விரும்பி, ஜமதக்னியின் ஆச்ரமத்திற்கு வந்தார்கள். அக்னிஹோத்ர க்ருஹத்தில் உட்கார்ந்து உத்தம ச்லோகனான (உயர்ந்த பெருமை பொருந்திய) பகவானிடத்தில் மனவூக்கமுற்றிருக்கின்ற ஜமதக்னி முனிவரைப் பார்த்து, பாபம் செய்வதில் நிச்சயமுடைய அந்த (கார்த்தவீர்ய)அர்ஜுன குமாரர்கள், அவரை வதித்தார்கள். 

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 207

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினைந்தாவது அத்தியாயம்

(புரூரவனுடைய வம்சமும், பரசுராமன் கார்த்தவீர்யார்ஜுனனைக் கொன்ற வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- புரூரவனுக்கு, ஊர்வசியின் கர்ப்பத்தினின்றும், ஆயு, ச்ருதாயு, ஸத்யாயு, ரயன், விஜயன், ஜயன் என்று ஆறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில், ச்ருதாயுவின் பிள்ளை வஸுமான். ஸத்யாயுவின் பிள்ளை ச்ருதஞ்சயன். ரயனுடைய பிள்ளை ஏகன். ஜயனுடைய பிள்ளை அமிதன். விஜயனுடைய பிள்ளை பீமன். அவன் பிள்ளை காஞ்சனன். அவன் பிள்ளை ஹோத்ருகன். அவன் பிள்ளை ஜஹ்னு. அவன் கங்கையை (வாய் கொப்பளித்துக்) குடித்து விட்டானென்று ப்ரஸித்தம். அவன் பிள்ளை பூரு. அவன் பிள்ளை பலாகன். அவன் பிள்ளை அஜகன். அவன் பிள்ளை குசன். குசனுக்குக்கு குசாம்பன், மூர்த்தயன், வஸூ, குசநாபன் என்று நான்கு பிள்ளைகள். அவர்களில், குசாம்பனுடைய பிள்ளை காதி. காதிக்கு ஸத்யவதியென்று ஒரு பெண் பிறந்தாள். அவளை, ப்ராஹ்மண ச்ரேஷ்டரும், பார்க்கவ வம்சத்தில் பிறந்தவருமான, ருசீகர் தனக்குக் கொடுக்கும்படி வேண்டினார். அப்பால், காதி அந்த வரன் தன் புதல்விக்கு அநுரூபனாய் (ஒத்தவனாய்) இல்லாமையை ஆலோசித்து, பார்க்கவரான அந்த ருசீகரைப் பார்த்து மொழிந்தான்.

காதி சொல்லுகிறான்:– ஒரு பக்கத்தில் கறுத்த காதுடையவைகளும், சந்த்ரனோடொத்த ஒளி உடையவைகளுமான, ஆயிரம் குதிரைகளை கன்யா சுல்கமாகக் (மணம் புரியும் பென்ணிற்காகக் கொடுக்கும் சீர்) கொடுக்க வேண்டும். எங்கள் கன்னிகைக்கு இதுவும் போராது. நாங்கள் கௌசிகர்கள். ஆகையால், எங்கள் ஏற்றத்தை ஆராய்ந்து அதற்கு உரியபடி நடப்பீராக.

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இவ்வாறு சொல்லப்பெற்ற அந்த ருசீகர், காதியின் கருத்தை அறிந்து கொண்டு, வருணனிடம் சென்று, அவன் சொன்ன லக்ஷணங்கள் அமைந்த குதிரைகளை யாசித்து வாங்கிக் கொண்டு வந்து, கொடுத்து, அழகிய முகமுடைய ஸத்யவதியை மணம் புரிந்தார். பிறகு, ஒரு காலத்தில், அந்த ருசீக ரிஷி, பிள்ளை வேண்டுமென்னும் விருப்பத்தினால், பத்னியாலும், மாமியாராலும், வேண்டப்பெற்று, ப்ராஹ்மண, க்ஷத்ரியர்கள் என்கிற இரண்டு வர்ணங்களுக்குரிய இருவகை மந்த்ரங்களாலும், இரண்டு வகையான சருவைப் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) பக்வம் செய்து (சமைத்து வைத்து) வைத்து, ஸ்நானம் செய்யப்போனார். அவர் ஸ்நானம் செய்து வருவதற்குள், ருசீகரின் மாமியார், பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) பர்த்தாவுக்கு (கணவனுக்கு) ஸ்நேஹம் (ப்ரியம்) அதிகமாகையால், தன் பெண்ணான ஸத்யவதிக்காகப் பக்வம் செய்த (சமைத்து வைத்த) சரு (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) மேலாயிருக்குமென்று பாவித்துத் (நினைத்து) தன் புதல்வியை வேண்ட, அந்த ஸத்யவதியும், ப்ராஹ்மண மந்திரங்களால் மந்தரிக்கப்பட்ட தன் சருவைத் (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) தாய்க்குக் கொடுத்து, அவளுக்காக க்ஷத்ரிய மந்திரங்களால் மந்திரிக்கப்பட்ட சருவை (அக்னியில் ஹோமம் செய்யப்படும் அன்னம் போன்ற பொருள்) தான் எடுத்துக்கொண்டு இருவரும் பக்ஷித்து (உண்டு) விட்டார்கள். பிறகு, ருசீக முனிவர் ஸ்நானம் செய்து வந்து நடந்த ஸங்கதியைத் தெரிந்து கொண்டு பத்னியைப்பார்த்து, “நீ தப்புக் கார்யம் செய்தாய். ஆகையால், எல்லோரையும் தண்டிக்கும் படியான கொடும் தன்மையுடைய புதல்வன் உனக்குப்பிறப்பான். உன் ப்ராதாவோ (ஸகோதரனோ), பரப்ரஹ்மத்தை உணர்ந்தவர்களில் சிறந்த ப்ராஹ்மண ச்ரேஷ்டனாயிருப்பான்” என்றார். 

சனி, 17 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 206

ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினான்காவது அத்தியாயம்

(ஸோம வம்சத்தின் வரலாறு. ப்ருஹஸ்பதியின் பத்னியான தாரையிடத்தில் பிறந்த புதனுக்குப் புரூரவன் பிறத்தலும், அவன் ஊர்வசியிடத்தில் ஆறு பிள்ளைகளைப் பெறுதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மன்னவனே! இனிமேல் ஸோம வம்சத்தைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. அது மிகவும் பரிசுத்தமானது. இந்த வம்சத்தில் புண்யமான புகழுடைய “ஐலன் (புரூரவன்) முதலிய மன்னவர்கள் பிறந்தார்களென்று சொல்லுகிறார்கள். ஆயிரம் தலைகள் கொண்ட, விராட் புருஷனான (ப்ரபஞ்ச வடிவானவனான) பரமபுருஷனான ஸ்ரீமந்நாராயணனுடைய நாபியாகிற மடுவினின்றும் ஒரு தாமரை மலர் உண்டாயிற்று. அதினின்று, ப்ரஹ்மதேவன் உண்டானான். அந்த ப்ரஹ்மதேவனுக்கு, அத்ரி மஹர்ஷி பிள்ளையாகப் பிறந்தார். அவர் குணங்களில் தந்தையோடொத்தவர். அவருடைய ஆனந்தக் கண்ணீரினின்று ஸோமன் பிறந்தான். அவன் அம்ருத மயனாயிருந்தான். ப்ரஹ்ம தேவன் அவனை ப்ராஹ்மணர்களுக்கும், ஓஷதிகளுக்கும், ஆம்பல் முதலியவற்றிற்கும், ப்ரபுவாக ஏற்படுத்தினான். அவன் மூன்று லோகங்களையும் ஜயித்து, ராஜஸூய யாகம் செய்தான். அவன் ப்ருஹஸ்பதியின் பத்னியாகிய தாரையென்பவளை தனது கர்வத்தினால் பலாத்காரமாக அபகரித்தான். தேவதைகளுக்குக் குருவான ப்ருஹஸ்பதி, தன் பத்னியான தாரையை விடும்படி அடிக்கடி வேண்டியும், ஸோமன்  கர்வத்தினால் விடாமலேயிருந்தான். அப்பொழுது, அதைப்பற்றித் தேவதைகளுக்கும், தானவர்களுக்கும் சண்டை உண்டாயிற்று. சுக்ரன், ப்ருஹஸ்பதியிடத்தில் த்வேஷத்தினால் (பகைமையினால்) அஸுரர்களுடன் சேர்ந்து, ஸோமனைத் தன் பக்ஷத்தில் உட்படுத்திக்கொண்டான். ருத்ரன், பூதகணங்களோடு கூடி ப்ருஹஸ்பதியை ஸ்நேஹத்தினால் அங்கீகரித்தான். இந்திரன், ஸமஸ்த தேவகணங்களோடும்கூடி, ப்ருஹஸ்பதியை அநுஸரித்தான்.

இப்படியிருக்கையில், தாரையைப் பற்றித் தேவதைகளுக்கும், அஸுரர்களுக்கும், பெரிய யுத்தம் உண்டாயிற்று. அதில், பல தேவதைகளும், பல அஸுரர்களும் அழிந்து போனார்கள். அப்பொழுது, அங்கிரஸ்ஸு ஸோமனை விரட்டி ப்ரஹ்ம தேவனிடம் விண்ணப்பம் செய்தார். பிறகு, ஸோமன் அதற்குப் பயந்து, தாரையை அவளுடைய பர்த்தாவுக்குக் கொடுத்து விட்டான். அப்பொழுது பர்த்தாவாகிய ப்ருஹஸ்பதி, தன் பார்யை கர்ப்பிணியாயிருப்பதை அறிந்து,  “அடி மதி (புத்தி) கேடீ! என் க்ஷேத்ரமாகிய உன்னிடத்தில், பிறர் ஆதானம் செய்த (வைத்த) கர்ப்பத்தைச் சீக்ரத்தில் விடுவாயாக. நீ இந்தக் கர்ப்பத்தை விட்டால் தான், உன்னை நான் பஸ்மம் செய்யாது (சாம்பலாக்காது) இருப்பேன்; இல்லாத பக்ஷத்தில் ஸ்த்ரீ (பெண்) என்பதையும் பாராமல் உன்னை நான் பஸ்மம் செய்து (சாம்பலாக்கி) விடுவேன்” என்றார். 

செவ்வாய், 13 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 205

ஒன்பதாவது ஸ்கந்தம் - பதிமூன்றாவது அத்தியாயம்

(இக்ஷ்வாகுவின் பிள்ளையாகிய நிமியின் வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- இக்ஷ்வாகுவின் பிள்ளையாகிய நிமி, ஒரு சமயம் யாகம் செய்யத்தொடங்கி, வஸிஷ்டரை ருத்விக்காய் (யாகம் செய்விக்கும் உபாத்யாயராய்) இருக்கும்படி வேண்டினான். அம்முனிவர், நிமியைப்பார்த்து, “ஓ மன்னவனே! நான் முன்னமே இந்த்ரனால் யாகம் செய்விக்கும் படி வரிக்கப்பட்டேன் (பொறுக்கியெடுக்கப்பட்டேன்). ஆகையால், இந்திரனுடைய அந்த யாகத்தை முடித்து விட்டு, வருகின்றேன். அதுவரையில் என்னை எதிர்பார்ப்பாயாக” என்றார். பிறகு, நிமி ஒன்றும் பேசாதிருந்தான். அவ்வஸிஷ்ட முனிவரும், இந்த்ரனுக்கு யாகம் செய்விக்கப்போனார். அப்பொழுது  நிமி, ப்ரக்ருதி (அறிவற்ற ஜடப்பொருட்களின் மூலமான முலப்ரக்ருதி), புருஷ (ஜீவாத்மாக்கள்), ஈச்வரன் (பரமாத்மாவான ஸ்ரீமந்நாராயனன்) என்கிற தத்வங்களின் உண்மையை அறிந்தவனாகையால், மனுஷ்ய சரீரம் (உடல்) நிலையற்றதென்பதை ஆராய்ந்து, அம்முனிவர் வருவதற்கு முன்னமே வேறு ருத்விக்குக்களை (யாகம் செய்விக்கும் உபாத்யாயர்களை) ஏற்படுத்திக்கொண்டு யாகம் செய்யத் தொடங்கினான். இக்ஷ்வாகு வம்சத்து அரசர்களுக்கு ஆசார்யராகிய வஸிஷ்ட முனிவர், இந்த்ரனுடைய யாகத்தை நிறைவேற்றி வந்து சிஷ்யனாகிய நிமி மன்னவன் செய்த அக்ரமத்தைக் (முறையற்ற தன்மையைக்) கண்டு, தன்னைத்தானே பண்டிதனாகப் பாவித்துக் கொண்டிருக்கிற நிமியின் சரீரம் (உடல்) அவனை விட்டுப் போகக்கடவது என்று சபித்தார். அதைக்கேட்டு நிமியும்,  தர்மத்தை அநுஸரித்திருக்கின்ற குருவாகிய வஸிஷ்டருக்குப் “பணத்தாசையால்  தர்மத்தை அறியாதிருக்கின்ற உம்முடைய தேஹமும் உம்மை விட்டுப் போகட்டும்” என்று பதில் சாபம் கொடுத்தான்.

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 204

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பன்னிரண்டாவது அத்தியாயம்

(ஸ்ரீராமனுடைய பிள்ளையான குசனுடைய வம்சத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஸ்ரீராமனுடைய பிள்ளையாகிய குசனுக்கு அதிதியென்பவன் பிறந்தான். அவன் பிள்ளை நிஷதன். அவன் பிள்ளை நபன். அவன் பிள்ளை புண்டரீகன். அவன் பிள்ளை க்ஷேமதன்வா. அவன் பிள்ளை தேவானீகன். அவன் பிள்ளை ஹீனன் (அனீஹனென்று சிலர்). அவன் பிள்ளை பாரியாத்ரன். அவன் பிள்ளை பலன். அவன் பிள்ளை சலன். அவன் பிள்ளை வஜ்ரநாபன். அவன் ஸூர்யனுடைய அம்சத்தினால் பிறந்தவன். அவன் பிள்ளை ககணன். அவன் பிள்ளை வித்ருதி. அவன் பிள்ளை ஹிரண்யநாபன். அவன் யோகாசார்யரான ஜைமினியின் சிஷ்யன். கௌஸல்யரான யாஜ்ஞ்யவல்க்ய ரிஷி, இந்த ஹிரண்யநாபனிடத்திலிருந்து யோகமென்று கூறப்படுவதும், பெரிய நன்மையை விளைப்பதும், அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்குவதுமான, அத்யாத்ம (ஆத்மா, பரமாத்மா பற்றிய) சாஸ்த்ரத்தைக் கற்றார். ஹிரண்யநாபன் பிள்ளை புஷ்யன். அவன் பிள்ளை த்ருவஸந்தி. அவன் பிள்ளை ஸுதர்சனன். அவன் பிள்ளை அக்னிவர்ணன். அவன் பிள்ளை சீக்ரன். அவன் பிள்ளை ம்ருத்து. அவன் யோகத்தினால் சரீரத்தை வென்றவன். அவன் கலாபக்ராமமென்னும் க்ராமத்திற்குச்சென்று, இன்னமும் இருக்கிறான். இவன் கலியுகத்தின் முடிவில் அழிந்துபோன ஸூர்ய வம்சத்தை மீளவும் பிள்ளை, பேரன் முதலிய பரம்பரையினால் தழைக்கும்படி நடத்தப்போகிறான். அவன் பிள்ளை ப்ரஸ்னு. அவன் பிள்ளை ஸந்தி. அவன் பிள்ளை – மர்ஷணன் (அமர்ஷணன் என்று சிலர்). அவன் பிள்ளை ஸுமஹான் (மஹஸ்வானென்று சிலர்). அவன் பிள்ளை விச்வஸாஹ்யன். அவன் பிள்ளை ப்ருஹத்பலன். அவன் யுத்தத்தில், உன் தந்தையாகிய அபிமன்யுவால், அடியுண்டு முடிந்தான். இக்ஷ்வாகு வம்சத்தில் பிறந்த இம்மன்னவர்கள் அனைவரும் கடந்தார்கள். இனிமேல் வரப்போகிற இக்ஷ்வாகு வம்சத்தரசர்களைச் சொல்லுகிறேன், கேட்பாயாக. 

சனி, 10 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 203

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பதினொன்றாவது அத்தியாயம்

(ஸ்ரீராமன் அயோத்யையில் இருந்து கொண்டு, யஜ்ஞாதி (யாகம் முதலிய) கர்மங்களை அநுஷ்டித்த விதத்தைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ஷாட்குண்ய பூர்ணனான (ஜ்ஞான, சக்தி, பல, ஐச்வர்ய, வீர்ய, தேஜஸ் என்கிற ஆறு குணங்கள் முழுமையாக அடையப்பெற்றவனுமாகிய) ஸ்ரீராமன், பெரியோர்களான வஸிஷ்டாதி முனிவர்களைக் கொண்டு யஜ்ஞங்களை (யாகங்களை) அனுஷ்டித்து, ஆசார்யனை முன்னிட்டு, ஸமஸ்த (எல்லா) தேவதாஸ்வரூபனும் (தேவதைகளின் வடிவானவனும்), தேவச்ரேஷ்டனுமாகிய (தேவர்களில் சிறந்தவனுமான), தன்னைத் தானே ஆராதித்தான். அவன், அந்த யாகத்தில் ஹோதாவுக்குக் கிழக்குத் திக்கையும், ப்ரஹ்மாவுக்குத் தெற்குத் திக்கையும், அத்வர்யுவுக்கு மேற்குத் திக்கையும், உத்காதாவுக்கு வடக்குத் திக்கையும் ஆசார்யனுக்கு அந்தத் திசைகளுக்கு இடையிலுள்ள பூமியையும் துணையாகக் கொடுத்தான். {யாகத்தில் ருத்விக்குகள் யஜமானனால் நியமிக்கப்பட்டு, யஜமானனுக்காக யாகத்தைச் செய்கிறார்கள்.  “ஹோதா” என்கிற ருத்விக் ரிக் வேத மந்த்ரங்களைக் கூறி, யாகத்தில் குறிக்கப்பட்ட தேவதைகளை அழைக்கிறார். “அத்வர்யு” என்கிற ருத்விக் “ஹோதா”வால் அழைக்கப்பட்ட ஒவ்வொரு தேவதைக்கும் யஜுர் வேத மந்த்ரங்களைச் சொல்லி அந்தந்த தேவதைக்கு யாக குண்டத்தில் ஹோமம் செய்து, அந்தந்த தேவதை, ஹோமம் செய்யப்பட்ட த்ரவ்யத்தை (பொருளை) ஏற்றுக்கொள்ளும்படிச் செய்கிறார். “உத்காதா” என்கிற ருத்விக் ஸாமகானம் செய்து, அந்த தேவதைகள் மகிழ்ச்சி அடையும்படிச் செய்கிறார். “ப்ரஹ்மா” என்கிற ருத்விக் யாகம் ஸரியான முறையில் நடக்கிறதா என்று மேற்பார்வை செய்பவர்.} மற்றும், ப்ராஹ்மணன் இப்பூமண்டலத்தையெல்லாம் பெற்றுக்கொள்ள உரியவனென்று அவன் நினைத்திருந்தானே அன்றித் தான் கொடுத்தவற்றை ஒரு பொருளாக நினைக்கவில்லை. கொடுத்தவற்றில் சிறிதும் மனப்பற்று வைக்கவில்லை. மற்றும், அவர்களுக்குச் சிறந்த ஆடை, ஆபரணம் முதலிய அலங்காரங்களையும் கொடுத்தான். இவ்வாறு எல்லாவற்றையும் கொடுத்து, மேல்துணி, கீழ்துணி ஆகிய இரண்டு வஸ்த்ரங்கள் மாத்ரமே மிகப்பெற்றான். ராஜபத்னியாகிய வைதேஹியும், பர்த்தாவின் (கணவனின்) அபிப்ராயத்தை அறிந்து, எல்லா அலங்காரங்களையும் கொடுத்து, மாங்கல்யம் மாத்ரமே மிகப்பெற்றாள். ஹோதா முதலிய அவ்வந்தணர்கள், ப்ராஹ்மணர்களையே தெய்வமாக நம்பியிருக்கிற அந்த ஸ்ரீராமனுக்கு, பெரியோர்கள் விஷயத்திலுள்ள தான சீலத்தையும் (வள்ளல் தன்மையையும்), வாத்ஸல்யத்தையும் (கன்றிடம் தாய் பசுவிற்கு இருக்கும் ப்ரீதியைப் போன்ற பரிவையும்) கண்டு, ஸந்தோஷம் அடைந்து, “இந்தத் திசைகளை நாங்கள் பெற்றுக்கொள்ள உரியரல்லோம். இவற்றை நீயே ஆண்டு வருவாயாக” என்று விண்ணப்பம் செய்து, மீளவும் இவ்வாறு மொழிந்தார்கள்.

ப்ராஹ்மணர்கள் சொல்லுகிறார்கள்:- பகவானே! நீ எங்களுக்குக் கொடாதது என்ன இருக்கிறது? எல்லாவற்றையும் கொடுக்க நீ ஸித்தமாயிருக்கின்றாய். நீ ஸர்வேச்வரன். உனக்கு மேற்பட்டவன் எவனும் கிடையாது. நீ அவாப்த ஸமஸ்தகாமன் (விரும்பியவை அனைத்தும் அடையப் பெற்றவன்). உனக்கு இவற்றால் ஆகவேண்டிய ப்ரயோஜனம் என்ன இருக்கிறது? மற்றும், பரமபுருஷார்த்தமாகிய மோக்ஷத்தை எங்களுக்குக் கொடுக்கும் பொருட்டு, எங்கள் ஹ்ருதயத்தில் புகுந்து, உன் ப்ரகாசத்தினால், எங்களுடைய அஜ்ஞானத்தைப் (அறியாமையைப்) போக்குகின்றாய். இவ்வாறு தன்னையும் கொடுக்க வழிபார்த்துக் கொண்டிருக்கிற உனக்கு, இந்தத் திசைகளைக் கொடுப்பது ஒரு பொருளோ? நீ ப்ராஹ்மண குலத்திற்கு வேண்டியவற்றையெல்லாம் ஸாதித்துக் கொடுப்பவன்; தன் தேஜஸ்ஸினால் திகழும் தன்மையன்; என்றும் குறையாத அறிவுடையவன்; மிகுந்த புகழுடையவர்களில் முதன்மையானவன். ப்ராணிகளுக்கு த்ரோஹம் செய்கையின்றி, ஸமஸ்த பூதங்களுக்கும் நண்பர்களான முனிவர்கள், உன் பாதார விந்தங்களைத் தமது மனத்தில் கொண்டு த்யானிக்கின்றார்கள். உன் குணங்களை எங்களால் வர்ணிக்க முடியுமோ ? உனக்கு நமஸ்காரம்.

வெள்ளி, 9 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 202

 ஒன்பதாவது ஸ்கந்தம் - பத்தாவது அத்தியாயம்

(ஸ்ரீராமாவதார வ்ருத்தாந்தத்தினைக் கூறுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- கட்வாங்கனுடைய பிள்ளை தீர்க்கபாஹு. தீர்க்கபாஹுவின் பிள்ளை ரகு. அவன் பிள்ளை தசரதன். ஸாக்ஷாத் பரப்ரஹ்மமென்று சொல்லப்படுகிற பரமபுருஷன் அவனுக்குப் பிள்ளையாகப் பிறந்தான். அவன், ராம, லக்ஷ்மண, பரத, சத்ருக்னர்களென்று பெயர் பூண்டு, தன் ஸங்கல்பத்தினால் நான்கு வகையாகப் பிறந்தான். மன்னவனே ! “ஸீதையின் மணவாளனாகிய அந்த ஸ்ரீராமபிரானுடைய சரித்ரத்தை, தத்வதர்சிகளான (ஆத்ம, பரமாத்ம தத்வங்களை அறிந்த) வால்மீகி முதலிய மஹர்ஷிகள், விஸ்தாரமாக வர்ணித்திருக்கிறார்கள். நீயும் அதைப் பலவாறு கேட்டிருப்பாய். ஆகையால், நான் அதை விரித்துச் சொல்ல வேண்டிய அவச்யமில்லை. ஆயினும், சுருக்கமாகச் சொல்லுகிறேன்” கேட்பாயாக. 

அந்த ஸ்ரீராமபிரான், தந்தையின் வார்த்தையைப் பாதுகாக்கும் பொருட்டு, ராஜ்யத்தைத் துறந்து, தன் காதலியான ஸீதையின் கை படுவதையும் பொறுக்கமாட்டாதவைகளும், தாமரை மலர்போல மிக்க ஸுகுமாரங்களுமான (மென்மையான) தன் பாதங்களால் நடந்து, வனத்திற்குச் சென்று; ஸுக்ரீவ, லக்ஷ்மணர்களால் வழி நடந்து வந்த ச்ரமங்களெல்லாம் தீரப்பெற்று; லக்ஷ்மணனால் காது, மூக்குகள் அறுப்புண்டு கோபமுற்ற சூர்ப்பணகையால் ஆசை மூட்டப்பெற்ற ராவணன், தன் மனைவியான ஸீதையைப் பறித்துக்கொண்டு போக; அவளைப் பிரிந்த வருத்தம் பொறுக்கமாட்டாமையால், புருவத்தை நெரிக்க, அதைக்கண்டு பயந்த ஸமுத்ர ராஜனுடைய வசனத்தினால் ஸமுத்ரத்தில் அணை கட்டி; லங்கையைச் சேர்ந்து; துஷ்டர்களான (கொடியவர்களான) ராவணாதிகளாகிற வ்ருக்ஷங்களைக் (மரங்களைக்) காட்டுத்தீபோல் கொளுத்தி, பஸ்மம் செய்து (சாம்பலாக்கி); மீண்டும் ஸீதையுடன் கோஸல தேசத்திற்கு வந்து, பட்டாபிஷேகம் பெற்று, பூமியை ஆண்டு வந்தானல்லவா? இந்த மஹானுபாவன், நம்மைப் பாதுகாப்பானாக. விச்வாமித்ர மஹர்ஷியின் யாகத்தில், தம்பி லக்ஷ்மணன் பார்த்துக்கொண்டிருக்கையில், மாரீசன் முதலிய ராக்ஷஸ ச்ரேஷ்டர்களை வதித்த ஸ்ரீராமபிரான் நம்மைப் பாதுகாப்பானாக. 

மன்னவனே! ஸீதையின் ஸ்வயம்வர மண்டபத்தில், உலகத்திலுள்ள வீரர்கள் அனைவரும் சேர்ந்திருக்கிற ஸபையில், உறுதியுடையதும், பளுவாயிருப்பதும் (அதிக எடை உடையதும்), முன்னூறு பேர்களால் எடுத்துக் கொண்டு வரப்பட்டதுமாகிய, ருத்ர தனுஸ்ஸை எடுத்து, நாணேற்றி இழுத்து, இளம் யானை கரும்புத்தடியை முறிப்பது போல முரித்துவிட்ட, இந்த ஸ்ரீராமபிரான், நம்மைப் பாதுகாப்பானாக. தனக்குத் தகுந்த குணம், சீலம், வயது, உருவம், அழகு, இவையுடையவளும், ஸீதையென்னும் பெயர் பூண்டு ஜனக வம்சத்தில் தோன்றினவளும், முன்பு தன் மார்பில் இடம் கொடுத்து வெகுமதிக்கப் பெற்றவளுமாகிய, ஸ்ரீமஹாலக்ஷ்மியை, வில்லை நாணேறிடுகையாகிற பந்தயத்தினால் ஜயித்து, மீண்டு தன் பட்டணத்திற்குப் போகும் பொழுது வழியில், வில்லை முறித்த கோஷம் (ஒலி) கேட்டு, மனம் கலங்கப்பெற்றவரும், இருபத்தோரு தடவைகள் பூமியில் க்ஷத்ரியப் பூண்டுகளே (பயனற்ற செடிகளே) இல்லாமல் அழிந்து போகும்படி செய்தவருமான, பரசுராமருடைய பெரும் கர்வத்தைப் போக்கின அந்த ஸ்ரீராமபிரான், நம்மைப் பாதுகாப்பானாக. 

வியாழன், 8 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 201

 ஒன்பதாவது ஸ்கந்தம் - ஒன்பதாவது அத்தியாயம்

(கட்வாங்கன் வரையிலுள்ள அம்சுமானுடைய வம்சத்தைத் கூறுதலும், பகீரதன் கங்கையைப் பூமிக்குக் கொண்டு வந்த வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்சுமான், பாட்டனால் (தாத்தாவால்) ராஜ்யம் கொடுக்கப்பெற்றும் பித்ருக்களைக் கரையேற்றுவதற்காகக் கங்கையைக் கொண்டுவர விரும்பி, வெகுகாலம் தவம் செய்தான். ஆயினும், கங்கையைக் கொண்டுவர முடியாமலே மரணம் அடைந்தான். அப்பால், அவன் பிள்ளையாகிய திலீபனும் அவனைப்போலவே தவம் செய்து கொண்டிருந்து, கங்கையைக் கொண்டுவர முடியாமலே மரணம் அடைந்தான். அவன் பிள்ளை பகீரதன். அவன், அதற்காக மிகப்பெருந்தவம் செய்தான். அப்பால், அந்தத் தவத்திற்கு மனம் இரங்கி, கங்கை அவனுக்கு ப்ரத்யக்ஷமாய் வந்து தோன்றி, “உனக்கு வரம் கொடுக்க வந்தேன்” என்று மொழியவும் மொழிந்தாள். இவ்வாறு கங்கையினால் மொழியப்பட்ட அந்த பகீரத மன்னவன், அவளுக்கு நமஸ்காரம் செய்து, தன் அபிப்ராயத்தைச் சொன்னான். மீளவும் அவனை நோக்கிக் கங்கை மொழிந்தாள்.

கங்கை சொல்லுகிறாள்:- நான் பூமியில் விழும்பொழுது, என் வேகத்தைத் தரிப்பவர் யாவர்? ஒருவரும் தரிக்காத பக்ஷத்தில், மன்னவனே! பூமியைப் பிளந்து கொண்டு பாதாளலோகம் போய்ச் சேருவேன். மற்றும், எனக்குப் பூமியில் வந்திருக்க இஷ்டமில்லை. பூமியிலுள்ள மனிதர்கள் என்னிடத்தில் ஸ்னானம் செய்து தங்கள் பாபத்தை விட்டுப்போவார்கள். நான் அதை எங்கு போக்கிக்கொள்வேன்? இதைப்பற்றியும் நீ உபாயம் ஆலோசிப்பாயாக.

மன்னவன் சொல்லுகிறான்:- காம்ய கர்மங்களைத் (ஆசைகளை நிறைவேற்றும் செயல்களை) துறந்தவர்களும், ஜிதேந்த்ரியர்களும் (புலன்களை வென்றவர்களும்), பரப்ரஹ்ம த்யானத்தில் சிறந்த மனவூக்கமுடையவர்களும், உலகங்களையெல்லாம் பாவனம் (புனிதம்) செய்யவல்லவர்களுமான ஸத்புருஷர்கள், தங்கள் சரீர (உடல்) ஸம்பந்தத்தினால், உன் பாபத்தைப் போக்குவார்கள். ஆனால், அவர்கள் அந்தப் பாபத்தை எங்கு போக்குவார்களென்னில், அவர்களிடத்தில் பாபங்களைப் போக்கும் திறமையுடைய பரமபுருஷன் வஸிக்கின்றான். ஆகையால், அவர்களிடத்தில் பாபம் தங்காது. மற்றும், ருத்ரன் உன் வேகத்தைத் தரிப்பான். அவன் பகவத் பக்தனாகையால் அவனுக்கு எல்லா திறமைகளும் உண்டு. பகவானுடைய திறமைகளைப்பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவன், ப்ரஹ்மா முதல், மரம், செடி வரையிலுள்ள, ஸமஸ்த பூதங்களுக்கும் உள்ளே புகுந்து, நியமித்துக்கொண்டிருப்பவன். ஆயிரம் சொல்லியென்ன? நூலில் வஸ்த்ரம் போல, இந்த ப்ரபஞ்சமெல்லாம் அவனிடத்தில் அமைந்திருக்கின்றது. இவ்வாறு ஜகத்தையெல்லாம் அனாயாஸமாகத் தரித்துக் கொண்டிருக்கிற அப்பரமபுருஷனை, ருத்ரன் ஸர்வகாலமும் மனத்தில் தரித்துக் கொண்டிருக்கிறானாகையால், அவனுக்கு உன் வேகத்தைத் தரிப்பது ஒரு பொருளன்று.

செவ்வாய், 6 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 200

 ஒன்பதாவது ஸ்கந்தம் - எட்டாவது அத்தியாயம் 

(ரோஹிதனுடைய வம்சமும், ஸகர புத்ரர்கள் யாகக்குதிரையைத் தேடிச்சென்று கபிலரால் பஸ்மமாவதும் (சாம்பலாவதும்), அம்சுமான் குதிரையைத் திருப்பிக்கொண்டு வருதலும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- ரோஹிதனுடைய பிள்ளை ஹரிதன். அவன் பிள்ளை சம்பன். அவன் சம்பையென்னும் பட்டணத்தை நிர்மித்தான். அவன்பிள்ளை ஸுதேவன். அவன் பிள்ளை விஜயன். அவன் பிள்ளை பேருகன். அவன் பிள்ளை வருகன். அவன் பிள்ளை பாஹுகன். அவன், சத்ருக்களால் பூமியும், ராஜ்யமும் பறியுண்டு, பார்யையுடன் (மனைவியுடன்) வனத்திற்கு சென்றான். கிழவனாகிய பாஹுகன் அங்கேயே மரணம் அடைகையில் அவன் பத்னி (மனைவி) அனுமரணஞ் செய்ய (அவனுடன் தானும் இறக்க) முயன்றிருக்கையில், அவள் கர்ப்பிணியாயிருப்பதை அறிந்த ஒளர்வ மஹர்ஷி வேண்டாமென்று தடுத்தார். அவளுடைய சக்களத்திகள், அவள் கர்ப்பிணியென்பதை அறிந்து, அவளுக்கு அன்னத்தில் விஷத்தைக் கலந்து கொடுத்தார்கள். அப்பால், அவளுக்கு அந்த விஷத்தோடு கூடவே பிள்ளை பிறந்தான். அதனால், அவன் ஸகரனென்று பெயர் பெற்றான். அவன் ஏழு தீவுகளுக்கும் ப்ரபுவாகிப் பெரும் புகழனாயிருந்தான். அவனுடைய பிள்ளைகள் தான் ஸமுத்ரத்தைத் தோண்டினார்கள். ஸகரர்கள் தோண்டினதால், ஸமுத்ரம் ஸாகரமென்று பெயர் பெற்றது. 

அந்த ஸகரன், தாலஜங்கசர், சகர், ஹைஹயர், பர்ப்பர் என்னும் பேருடைய மிலேச்சர்களை ஆசார்யரான ஒளர்வருடைய வசனத்தினால் வதிக்காமல் விரூபர்கள் ஆக்கிவிட்டான் (உருவத்தைச் சிதைத்தான்). சிலரை மொட்டைகளாகவும், சிலரைத் தாடி, மீசைகள் மட்டும் தரிப்பவர்களாகவும், சிலரை விரி தலையர்களாகவும், சிலரைப் பாதித்தலை மொட்டைகளாகவும், சிலரை அரைத்துணி இல்லாதவர்களாகவும், சிலரை மேல்துணி இல்லாதவர்களாகவும் செய்தான். மற்றும், அந்த ஸகரன் ஆசார்யராகிய ஒளர்வரால் உபாயம் உபதேசிக்கப்பெற்று, ஸமஸ்த வேத ஸ்வரூபனும், ஸமஸ்த  தேவதா ஸ்வரூபனும், ஸர்வாந்தராத்மாவும், ஸர்வ நியாமகனுமாகிய, பகவானை அச்வமேத யாகங்களால் ஆராதித்தான். அவன் நூறாவது யாகம் செய்யும்பொழுது, பூப்ரதக்ஷிணத்திற்கு (பூமியை வலம் வர) விட்டிருந்த மேலான அச்வத்தை (குதிரையை) இந்திரன் பறித்துக்கொண்டு போனான். ஸகரனுக்கு ஸுமதியென்றும், கேசினியென்றும் இரண்டு பார்யைகள் (மனைவிகள்). அவர்களில் ஸுமதிக்கு, அறுபதினாயிரம் பிள்ளைகள். அவர்கள், பலத்தினால் கொழுத்தவர்கள். அவர்கள், தந்தையினால் கட்டளையிடப்பெற்று, அதை நிறைவேற்றும் பொருட்டு யாகக்குதிரையைத் தேடிக்கொண்டு சென்று, எங்கும் காணாமல் நாற்புறத்திலும் பூமியைத் தோண்டினார்கள். கிழக்குத் திக்கு முதலாக நாற்றிசைகளிலும் பூமியைத் தோண்டிக்கொண்டு போகிற அந்த ஸகர புத்ரர்கள் வடகிழக்கு மூலையில் பாதாளத்தில் இருக்கிற கபிலருடைய அருகாமையில் இந்திரனால் கொண்டு விடப்பெற்று, மேய்ந்து கொண்டிருக்கின்ற குதிரையைக் கண்டார்கள். 

திங்கள், 5 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 199

 ஒன்பதாவது ஸ்கந்தம் - ஏழாவது அத்தியாயம்

(மாந்தாதாவின் வம்சமும், அவ்வம்சத்தில் பிறந்த புருகுத்ஸ ஹரிச்சந்த்ரர்களின் உபாக்யானமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- மாந்தாதாவின் பிள்ளைகளில் அம்பரீஷனென்பவன் ஒருவனென்று முன்னமே மொழிந்தேன். அவன் சிறப்புடையவனாயிருந்தான். அவனை அவன் பாட்டனாகிய (தாத்தாவாகிய) யுவனாஷ்வன், தனக்குப் பிள்ளையாக ஸ்வீகரித்தான் (ஏற்றான்). ஆதலால்தான் அந்த அம்பரீஷனுடைய பிள்ளை, யுவனாஷ்வனென்னும் பெயர் பெற்றான். யுவனாஷ்வனுடைய பிள்ளை ஹரிதன். இந்த அம்பரீஷ-யுவனாஷ்வ-ஹரிதர்கள் மாந்தாதாவின் ஸந்ததியைச் (வம்சத்தைத்) சேர்ந்தவர்கள். நாகர்களின் உடன் பிறந்தவளான நர்மதை என்பவள், தன் ப்ராதாக்களால் (ஸகோதரர்களால்) புருகுத்ஸனுக்குக் கொடுத்து மணம் செய்விக்கப்பட்டாள். அவள், தன் ப்ராதாக்களால் (ஸகோதரர்களால்) தூண்டப்பட்டு, புருகுத்ஸனைப் பாதாளத்திற்கு அழைத்துக்கொண்டு போனாள். அவன், பகவானால் பலம் கொடுக்கப்பெற்று, ஒருவர்க்கும் வதிக்கமுடியாத கந்தர்வர்களை வதித்தான். நாகேந்திரன் அதற்கு ஸந்தோஷம் அடைந்து “இந்த உன் வ்ருத்தாந்தத்தை நினைப்பவர்களுக்கு ஸர்ப்பத்தினின்று பயம் உண்டாகாது” என்று புருகுத்ஸனுக்கு வரம் கொடுத்தான். 

புருகுத்ஸனுடைய பிள்ளை த்ரஸதஸ்யு. அவன் பிள்ளை அனரண்யன். அவன் பிள்ளை ஹர்யஷ்வன். அவன் பிள்ளை அருணன். அவன் பிள்ளை த்ரிபந்துரன். அவன் பிள்ளை ஸத்யவ்ரதன். அவனே த்ரிசங்குவென்று ப்ரஸித்தி பெற்றவன். அவன், தன் குருவான வஸிஷ்ட மஹர்ஷியின் சாபத்தினால், சண்டாளத் தன்மையை (தாழ்ந்த ஜாதியை) அடைந்தான். பின்பு, விச்வாமித்ரருடைய தவமஹிமையால், சரீரத்துடன் ஸ்வர்க்கம்சென்று, இப்பொழுதும் ஆகாயத்தில் நக்ஷத்ரரூபியாய்ப் புலப்படுகின்றான். வஸிஷ்ட சாபத்தினால் சண்டாளத்தனம் (தாழ்ந்த ஜாதியை) அடைந்த அந்த த்ரிசங்குவை, விச்வாமித்ரர் தன் தவமஹிமையால் ஸ்வர்க்கத்திற்கு ஏற்றும்பொழுது, அவன் அங்குள்ள தேவதைகளால் தலைகீழாகத் தள்ளுண்டு விழ, மீளவும் விச்வாமித்ரர் தன் தவமஹிமையினால் தானே பலாத்காரமாக அவனை ஆகாயத்திலேயே நிலைநிற்கும்படி செய்தார். 

த்ரிசங்குவின் பிள்ளை ஹரிச்சந்த்ரன். அவன் நிமித்தமாக விச்வாமித்ரரும், வஸிஷ்டரும் ஒருவர்க்கொருவர் சாபமிட்டுக் கொண்டு, பக்ஷிகளாகிப் பலவாண்டுகள் வரையில் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். அந்த ஹரிச்சந்த்ரன், பிள்ளையில்லாமையால் வருந்தி நாரதருடைய உபதேசத்தினால் வருணனைச் சரணம் அடைந்தான். “ப்ரபூ! எனக்குப் பிள்ளை பிறக்க வேண்டும். அவ்வாறு அனுக்ரஹம் செய்வாயாக. மஹாராஜனே! எனக்கு வீரனாகிய புதல்வன் பிறப்பானாயின், அவனையே நர பசுவாகக் (யாகத்தில் பலி கொடுக்கப்படும் ம்ருகமாகக்) கொண்டு உன்னை ஆராதிக்கிறேன்” என்று அம்மன்னவன் வருணனை வேண்டிக்கொண்டான். அவ்வருணனும் அப்படியே ஒப்புக்கொண்டு, அவனுக்குப் பிள்ளை பிறக்கும்படி அனுக்ரஹம் செய்தான். அதனால், அந்த ஹரிச்சந்த்ரனுக்கு ஒரு பிள்ளை பிறந்தான். அவன் ரோஹிதனென்று ப்ரஸித்தனாயிருந்தான். 

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 198

 ஒன்பதாவது ஸ்கந்தம் - ஆறாவது அத்தியாயம்

(அம்பரீஷனுடைய வம்சத்தைச் சொல்லி முடித்து இக்ஷ்வாகுவின் வம்சத்தைச் சொல்லுதல்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- அம்பரீஷனுக்கு விரூபன், கேதுமான், சம்பு என்று மூன்று பிள்ளைகள். அவர்களில் விரூபனுடைய பிள்ளை, ப்ருஷதச்வன். அவன் பிள்ளை ரதீதரன். அவன் பிள்ளையற்றிருக்கையில், ஸந்ததி அழியாதிருக்கும் பொருட்டு, அங்கிரஸ மஹர்ஷி அவனுடைய பார்யையிடத்தில் (மனைவியிடத்தில்) ப்ரஹ்மதேஜஸ்ஸுடன் கூடின ஒரு பிள்ளையைப் பிறப்பித்தார். இவர்கள் ரதீதரன் க்ஷேத்ரத்தில் பிறந்தவர்களாயினும், அங்கிரஸ மஹர்ஷியின் பீஜத்திற்குப் (விந்துக்குப்) பிறந்தவர்களாகையால், ஆங்கிரஸர்களுமானார்கள். ஆகையால், ரதீதரனுடைய பிள்ளைகளும், அவர்களுடைய ஸந்ததியில் பிறந்தவர்களும், க்ஷத்ரியகோத்ரமும், ப்ராஹ்மண ப்ரவரமும், உடையவர்களானார்கள். 

வைவஸ்வதமனு தும்மும் பொழுது, அவனுடைய மூக்கினின்றும் இக்ஷ்வாகுவென்று ப்ரஸித்திபெற்ற ஒரு புதல்வன் பிறந்தான். அவனுக்கு நூறு பிள்ளைகள் பிறந்தார்கள். அவர்களில் முதல் மூவர், விகுக்ஷி, நிமி, தண்டனென்பவர்கள். அந்த நூறு பெயர்களில் இருபத்தைந்து பெயர்கள், கிழக்குத் திக்கில் ஹிமவத பர்வதத்திற்கும் (மலைக்கும்) விந்த்யா பர்வதத்திற்கும் (மலைக்கும்) நடுவிலுள்ள ஆர்யாவர்த்தமென்னும் தேசத்தை ஆண்டு வந்தார்கள். இருபத்தைந்து பெயர்கள், மேற்குத் திக்கில் உள்ள ஆர்யாவர்த்த தேசத்தை ஆண்டு வந்தார்கள். முதல் மூவரான விகுக்ஷி முதலியவர்கள், இடையிலுள்ள ஆர்யாவர்த்த தேசத்தை ஆண்டு வந்தார்கள். மற்றவர்கள் தெற்கு, வடக்கு முதலிய திசைகளைப் பாதுகாத்துக்கொண்டு வந்தார்கள். அந்த இக்ஷ்வாகு மன்னவன், ஒருகால் அஷ்டகா ச்ராத்தத்திற்காகத் தன் பிள்ளைகளில் விகுக்ஷி என்பவனைப் பார்த்து, “விகுக்ஷி! பரிசுத்தமான மாமிஸம் கொண்டு வருவாயாக. சீக்ரம் போ. விளம்பிக்க (காலம் தாழ்த்த) வேண்டாம்” என்று கட்டளையிட்டு அனுப்பினான். 

அந்த விகுக்ஷியும், அப்படியே கொண்டு வருகிறேனென்று சொல்லி வனத்திற்குச் சென்று, ச்ராத்தத்திற்குரிய ம்ருகங்களைக் கொன்று, இளைத்துப் பசித்து, “ச்ராத்தத்திற்காகக் கொன்ற மிருகங்களை நாம் பக்ஷிக்கலாகாது” என்னும் புத்தியை மறந்து, வீரனாகிய அந்த விகுக்ஷி அவற்றில் ஒரு முயலைப் பக்ஷித்தான் (உண்டான்). அப்பால் அவன் தான்  பக்ஷித்து (உண்டு) மிகுந்த மாம்ஸத்தைத் தன் தந்தையிடம் கொண்டுபோய்ச் சேர்த்தான். இக்ஷ்வாகு, அந்த மாம்ஸத்தை ப்ரோக்ஷித்து, சுத்தி செய்யும்படி தன் குருவுக்குச் சொன்னான். குருவாகிய வஸிஷ்ட மஹர்ஷி  “இந்த மாம்ஸம் சாப்பிட்டு மிகுந்ததாகையால், துஷ்டமாயிற்று (வீணாயிற்று). ஆகையால், இது ச்ராத்தத்திற்கு உபயோகப்படாது” என்றார். பிறகு இக்ஷ்வாகு மன்னவன், குருவின் வசனத்தைக் கேட்டு, தன் பிள்ளையாகிய விகுக்ஷி செய்த கார்யத்தை அறிந்து, நியமங்களைத் துறந்து, கோபத்தினால் பிள்ளையைத் தேசத்தினின்றும் துரத்திவிட்டான். 

சனி, 3 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 197

 ஒன்பதாவது ஸ்கந்தம் - ஐந்தாவது அத்தியாயம்

(அம்பரீஷன் தன்பாதங்களில் விழுந்து வேண்டுகிற துர்வாஸ முனிவரைச் சக்ரத்தினின்றும் விடுவித்து, அவர்ப் பசியாற்றுதலும், கடைசியில் வனத்திற்குப் போதலும்.)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:– இவ்வாறு பகவானால் உபாயம் உபதேசிக்கப்பெற்ற துர்வாஸ முனிவர், சக்ரத்தினால் தபிக்கப்பட்டவராகவே (எரிக்கப்பட்டவராகவே) அம்பரீஷனிடம் சென்று, மனவருத்தத்துடன் அவனுடைய பாதங்களைப் பிடித்துக்கொண்டார். அம்பரீஷனும் அந்த துர்வாஸருக்கு நேர்ந்த அப்படிப்பட்ட துக்கத்தைக்கண்டு, அவர் தன் பாதங்களைப் பிடித்துக் கொண்டதற்கு மிகவும் வெட்கமுற்று, மன இரக்கத்தினால் மிகவும் பரிதபித்து, ப்ராஹ்மணரைப் பின்தொடர்ந்திருக்கின்ற பகவானுடைய சக்ரத்தை ஸ்தோத்ரம் செய்தான்.

அம்பரீஷன் சொல்லுகிறான்:– ஸுதர்சனமென்றும், ஸஹஸ்ராரமென்றும் பெயர்பெற்ற சக்ரராஜனே! மஹானுபாவனாகிய அக்னியும் நீயே, ஸூர்யனும் நீயே. நக்ஷத்திரங்களுக்கு ப்ரபுவான சந்த்ரனும் நீயே. ஜலம், பூமி, ஆகாயம், காற்று, தன்மாத்ரங்கள், இந்திரியங்கள் இவையெல்லாம் நீயே. அச்சுதனுக்கு அன்பனே! ஸமஸ்தமான அஸ்த்ரங்களையும் அழிக்கும் திறமையுடையவனே! ஜகத்திற்கெல்லாம் ப்ரபுவே! உனக்கு நமஸ்காரம். இந்த ப்ராஹ்மணனுக்கு மங்களத்தை விளைப்பாயாக. நீயே தர்ம ஸ்வரூபன் (தர்ம வடிவானவன்); தர்மத்தை நிறைவேற்றுகின்றவன்; அழிவற்ற தைர்யமும் நீயே. ஸமஸ்த யஜ்ஞங்களுக்கு (யாகங்களுக்கு) நிர்வாஹகனும் (நியமிப்பவனும்), அவற்றால் ஆராதிக்கப்படுகிறவனும் நீயே. யஜ்ஞங்களில் (யாகங்களில்) கொடுக்கின்ற ஹவிஸ்ஸுக்களைப் புசிக்கின்றவனும் அவற்றிற்குப் பலன் கொடுப்பவனும் நீயே. ஸர்வஸ்வரூபனே! (அனைத்துமாய் இருப்பவனே!) நீயே உலகங்களையெல்லாம் பாதுகாக்கின்றாய். சத்ருக்களை அழிக்கும் ஸங்கல்ப ரூபமான (எண்ணமான) பரம புருஷனுடைய ஸாமர்த்யமும் (திறமையும்) நீயே. அழகிய நாபியுடையவனே! உனக்கு நமஸ்காரம். உன்னைத் துதிக்க வல்லனல்லேன். நீ ஸமஸ்த தர்ம மர்யாதைகளையும் பாதுகாக்கின்றாய். அதர்மமே தொழிலாயிருக்கின்ற அஸுரர்களுக்குத் தூமகேதுவைப்போல அநர்த்தங்களை (துக்கங்களை) விளைக்கின்றாய். நீ மூன்று லோகங்களையும் பாதுகாக்கின்றாய். நீ பரிசுத்தமான தேஜஸ்ஸுடையவன். மனத்தின் வேகமுடையவன். உன் செயல்கள் அற்புதமாயிருக்கும். உனக்கு நமஸ்காரம் செய்கிறேன். தர்ம ஸ்வரூபமான உன் தேஜஸ்ஸினால் மஹானுபாவர்களான பெரியோர்களின் ஜ்ஞானத்தைத் தடுப்பதாகிய அஜ்ஞானத்தையெல்லாம் அழித்து ஜ்ஞான ப்ரகாசமும் கொடுக்கப்பட்டது. ஸூர்யன் முதலிய தேஜஸ்ஸுக்களின் ப்ரகாசமும் உன்னுடையதே. மேன்மை, தாழ்மைகளுக்கு இடமாயிருப்பதும், சேதனா சேதன ரூபமுமாகிய, இந்த ஜகத்தெல்லாம் உன்னுடைய உருவமே. வேத வாக்யங்களால் புகழப்படும் பெருமையுடையவனே! இப்படிப்பட்ட உன் மஹிமை எல்லையற்றது. கெட்ட குணங்கள் எவையும் தீண்டப்பெறாத பரம புருஷனால் தூண்டப்பட்டுப் பலிஷ்டர்களான (பலம் உடையவர்களான) தைத்யர்களும், தானவர்களும், நிறைந்த சத்ரு ஸைன்யத்தில் புகுந்து, கை, வயிறு, துடை, கால், கழுத்து இவைகளைச் சேதித்துக்கொண்டு (துண்டித்துக் கொண்டு), யுத்தத்தில் மிகவும் விளங்குகின்றாய். அப்படிப்பட்ட நீ ஸாதுக்களைப் பாதுகாப்பதற்காகவும், துஷ்டர்களை அழிப்பதற்காகவும், பகவானால் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றாய். நீ சரணாகதர்களின் அபராதங்களையெல்லாம் பொறுக்கும் தன்மையன். அப்படிப்பட்ட நீ என் குலத்தின் க்ஷேமத்திற்காக இந்த ப்ராஹ்மணனுக்கு மங்களத்தைச் செய்வாயாக. (இவனை ப்ராணன்களோடு விடுவாயாக) இதுவே நீ எனக்குச்செய்ய வேண்டிய அனுக்ரஹம். நான் தானாதி தர்மங்களையும், யாகாதி தர்மங்களையும், எனக்கு ஏற்பட்ட வர்ணாச்ரம தர்மங்களையும், நன்றாக அனுஷ்டித்திருப்பேனாயின், எங்கள் குலம் ப்ராஹ்மணர்களையே தெய்வமாக நினைத்திருப்பது உண்மையாயின், இந்த ப்ராஹ்மணன் வருத்தம் தீர்ந்து ஸுகமாயிருப்பானாக. என்னுடைய தானாதி தர்மங்களால் ஸுதர்சன பகவான் ஸந்தோஷமுற்றிருப்பானாயின், ப்ராஹ்மணனை ப்ராண பயத்தினின்றும் பாதுகாப்பானாக. இணையெதிரில்லாதவனும், ஸமஸ்த கல்யாண குணங்களுக்கும் இருப்பிடமாய் இருப்பவனுமாகிய பகவான், “அவன், ஸமஸ்த பூதங்களுக்கும், அந்தராத்மாவாகையால் அவையெல்லாம் அவனே” என்கிற எண்ணத்துடன் பணிந்து வருகின்ற என்னுடைய மனோபாவத்தினால் (எண்ணம், சிந்தனையினால்) ஸந்தோஷமுற்றிருப்பானாயின், அதனால் இந்த ப்ராஹ்மணன் மனக்கவலை தீர்ந்து ஸுகமாயிருப்பானாக.

வெள்ளி, 2 அக்டோபர், 2020

ஶ்ரீமத் பாகவதம் - 196

 ஒன்பதாவது ஸ்கந்தம் - நான்காம் அத்தியாயம்

(மனுவின் பேரனான நரபாகனுடைய வ்ருத்தாந்தமும் (கதையும்), அவன் பிள்ளையான அம்பரீஷனுடைய வ்ருத்தாந்தமும்)

ஸ்ரீசுகர் சொல்லுகிறார்:- வைவஸ்வத மனுவின் பிள்ளைகளில் ஒருவனாகிய நபகனுடைய பிள்ளை நரபாகனென்பவன். அவனுக்கு மற்றும் பல புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களில், நரபாகன் அனைவர்க்கும் பின் பிறந்தவன். அவன், வெகுகாலம் குருகுலவாஸம் செய்து வந்தான். அவனுடைய ப்ராதாக்கள், அவன் ப்ரஹ்மசாரியும், ஜ்ஞானியுமாய் இருக்கிறானென்று நினைத்து, தந்தை ஸம்பாதித்து வைத்திருக்கும் சொத்தை, அவனுக்குக் கொடுக்காமல் தாங்கள் மாத்திரம் பங்கிட்டுக் கொண்டார்கள். அப்பால், நரபாகன் தன் ப்ராதாக்களை நோக்கி “எனக்கு எதைப் பங்கிட்டுக் கொடுத்தீர்கள்” என்று வினவினான். அவர்கள், “அப்பொழுது நாங்கள் மறந்து போனோம். இப்பொழுது நாங்கள் பங்கிட்டுக் கொடுக்க முடியாது. உனக்கு விருப்பம் உள்ளதாயின், பங்கிட்டுக் கொடுக்க வேண்டியவராகிய தந்தையிடம் போவோம். பங்கிட்டுக் கொடுங்களென்று அவர் சொல்வாராயின், பாகம் கொடுக்கிறோம்” என்றார்கள். அப்பால் நரபாகன் தந்தையிடம் சென்று “அப்பனே! என் ஜ்யேஷ்ட ப்ராதாக்கள் (மூத்த சகோதரர்கள்) எனக்கு என்ன பங்கிட்டுக் கொடுத்தார்கள்?” என்று வினவினான். அதற்குத் தகப்பனும் “பிள்ளாய்! நீ அந்தப் பாகத்தில் விருப்பம் செய்யவேண்டாம். இதோ சிறந்த மதியுடைய (புத்தியுடைய) அங்கிரஸர்கள் இப்பொழுது ஸத்ரயாகம் (நீண்ட நாட்கள் செய்யும் யாகம்) செய்கின்றார்கள். அவர்கள் ஆறாவது நாளில் செய்ய வேண்டிய கார்யத்தில் கை தெரியாமல் தடுமாறுவார்கள். அறிஞனே! வைச்வதேவ கர்மத்தில் விச்வதேவ தேவதைகளை அறிவிப்பவைகளான இரண்டு ஸூக்தங்கள் அவர்களுக்குத் தெரியாது. மிகுந்த மதியுடையவர்களாயினும், அந்த ஸூக்தங்களை அறியாமல் தடுமாறுகிற அவர்களுக்கு, நீ அவற்றைச் சொல்லுவிப்பாயாக. அப்பால், யாக கார்யம் முடிந்த பின்பு, ஸ்வர்க்கம் போகிற அவ்வங்கிரஸர்கள், தங்கள் ஸத்ரயாகத்தில் மிகுந்த பணத்தை உனக்குக் கொடுப்பார்கள். ஆகையால், நீ அவ்விடம் செல்வாயாக” என்றான். 

அப்பால், நரபாகனும் தந்தை சொன்ன வண்ணமே செய்தான். பிறகு, ஆங்கிரஸர்களும், ஸத்ரத்தில் மிகுந்த பணத்தையெல்லாம் அந்த நரபாகனுக்குக் கொடுத்து, ஸ்வர்க்கம் போனார்கள். அதன் பிறகு, நரபாகன் அந்தப் பணத்தை எடுத்துக்கொள்ள முயற்சி செய்கையில், கறுத்த உருவமுடைய ஒரு புருஷன் வடதிசையினின்றும் வந்து “யஜ்ஞபூமியில் இருக்கிற இந்தப் பணம் என்னுடையது” என்றான். அப்பொழுது நரபாகனும் “ரிஷிகளாகிய அங்கிரஸர்கள் இந்தப் பணத்தை எனக்கே கொடுத்தார்கள்” என்றான். மீளவும் “அப்புருஷன் ஆனால் இவ்விஷயத்தை உங்கள் தந்தையைக் கேட்போம்” என்றான். அப்பால் நரபாகன் தந்தையிடம் சென்று கேட்கத் தந்தையும், “யாக பூமியில் இருப்பதும் யாகத்தில் மிகுந்ததுமாகிய தனம் முழுவதும் ருத்ரனுடைய பாகமென்று ஒரு காலத்தில் ரிஷிகள் ஏற்படுத்தினார்கள். ஆகையால், அவை யாவும் அவனுக்கே சேரவேண்டும்” என்றான்.