புதன், 19 ஜூன், 2024

கிளி காட்டிய ஸ்ரீரங்கன்! - எஸ்.ஆர்.எஸ். ரெங்கராஜன்

ஸ்ரீ ரங்கநாதருக்கு மாலையைப்போல ஓடும் நதி காவிரி நதி. ஒரு சமயம், காவிரியில் பெரும் வெள்ளம் வந்தது. வெள்ளத்தில் ஸ்ரீரங்கம் மூழ்கியது. வெள்ளம் வடியப் பல நாட்கள் ஆகின. வெள்ளம் வடிந்தபின் கோவில் உட்பட எந்தப் பகுதியையும் அடையாளம் கண்டு பிடிக்க முடியவில்லை. எங்கு பார்த்தாலும் மண்மேடு தெரிந்தது. அந்தக் காலத்தில் ரங்கநாதர் கோவில் இப்போதுபோல பெரிய கோவில் அல்ல. கர்ப்பக் கிரகமும் ஒரு சிறிய மண்டபமும் மட்டுமே கொண்டிருந்த கோவில். மண்மேட்டின் கீழ்ப்புறம் கோவில் அகப்பட்டுக் கொண்டது. மண்மேடுகளில் மரம், செடி, கொடிகள் வளரத் தொடங்கின.

சோழ நாட்டை ஆண்ட தர்மவர்மன் என்ற மன்னன் ரங்கநாதரைக் கண்டுபிடிக்கும் எண்ணத்துடன் அடிக்கடி அப்பகுதிகளில் நடந்து ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான். வெள்ளம் வருவதற்கு முன் ரங்கநாதர் கோவிலில் ஒரு கிளி இருந்தது. அது தினந்தோறும் ரங்கநாதர் கோவில் பூஜைகள் எல்லாவற்றையும் உன்னிப் பாகப் பார்ப்பது வழக்கம். வெள்ளம் வந்தது, கோவிலை மண் மூடியது எல்லாவற்றையும் அந்தக் கிளி கவனித்துக்கொண்டிருந்தது. சொன்னதைத் திரும்பச் சொல்வதுதானே கிளியின் பழக்கம். ஒரு கிளையில் அமர்ந்து தான் அங்கு முன்னால் கேட்ட சுலோகங்களை- அதாவது பூஜைக் காலத்தில் சொன்ன சுலோகங் களைத் திரும்பத் திரும்பச் சொல்வதை வாடிக்கை யாக்கிக் கொண்டது.


ஒரு நாள் மாலை கோவிலைத் தேடி சோழ மன்னன் தர்மவர்மன் நடந்து வந்த நேரம், கிளி சொன்ன சுலோகம் மன்னனின் மனதைத் தொட்டது. 

ஸ்ரீராமானுஜர் - ரா.ஶ்ரீ.தேசிகன்

அறம் சிதைந்த ஒவ்வொரு காலத்திலும் ஓர் அவதார புருஷன் உலகம் உய்யத் தோன்றுகின்றான் என்பது உண்மையே. வைதீக மதத்தில் மாசு நுழைந்தபொழுது அதை அகற்றக் கருணை வடிவாய்த் திகழ்ந்த புத்தர்பிரான் பிறந்தார். அவர் வைதீக மதத்தை அழிக்க வரவில்லை; அதை அன்பு நெறியில் அமைத்து, அதற்கொரு புதிய வாழ்வு தந்தார்.

பௌத்த மதக்கொள்கையிலும் நேர்மையில்லாத ஒரு காலத்தில், சங்கராசாரியார் காலடியில் அவதாரஞ் செய்ய வேண்டியிருந்தது. அவர் ஞானயோகத்தை வற்புறுத்தி, அத்வைத மார்க்கத்தை எங்கும் பரப்பினார்.


நாளாவட்டத்தில் போலி அத்வைத பிரச்சாரம் உலகத்தில் தலையெடுத்தபொழுது ஆண்டவன் தன் அளவற்ற கருணையால் ஸ்ரீராமானுஜரை வையகத்தில் பிறக்கும்படிச் செய்தான். நம்மாழ்வார் தம் திருவிருத்தத்தில் அவதார ரகசியத்தை வெளியிடுகிறார். 

செவ்வாய், 18 ஜூன், 2024

மகாலக்ஷ்மி மகிமை! - நாவல்பாக்கம் நரசிம்ஹன் ஸ்வாமி

நாராயண பட்டத்ரி குருவாயூரில் எழுந்தருளியிருக்கும் குருவாயூரப்பனைப் பார்த்து, ‘ஹே குருவாயூரப்பா, பிராட்டி கண்களை உருட்டி உருட்டி உன்னை மட்டுமா பார்க்கிறாள்? உன்னுடைய கல்யாண குணங்களைக் கேட்பவர்கள் மற்றும் ரசிப்பவர்களின் இல்லங்களில் அவள் நிரந்தரமாக குடிகொள்கிறாள்' என்றார் 'மகாலக்ஷ்மியின் மகிமை' என்ற தமது சொற்பொழிவில் நாவல்பாக்கம் நரசிம்ஹன் ஸ்வாமி.

ஒரு முனிவர் காட்டில் கடுமையாக தவம் புரிந்து கொண்டிருந்தார். 'ஹே முனிவரே. உன்னோடு நான் சில காலம் வாசம் செய்கிறேன். அப்பொழுது உனக்கு ராஜமரியாதை கிடைக்கும்' என்றாள் மகாலட்சுமி.


'நானோ ஒரு சன்யாசி. எனக்கு எதற்கு ராஜ மரியாதை எல்லாம்? எனக்கு அது தேவையே இல்லையே’ என்றார் அந்த முனிவர். 'நீ வேண்டாம் என்று சொன்னாலும் உன்னோடு சிலகாலம் நான் வாசம் செய்யத்தான் போகிறேன்' என்றாள் தாயார்.


தாயார் சென்ற பிறகு, முனிவர் நடந்து போய்க் கொண்டிருந்தார். வழியில் ஒரு மூட்டையைப் பார்த்தார்.

நேர்கொண்ட பா(ர்)வை ஆண்டாள் - முனைவர் ந. மைதிலி

ஆண்டாள் நாராயணன் மீது பக்தி வைத்ததோடு அல்லாமல், தம்மைச் சேர்ந்தார்க்கும் அப்பக்திப் பாதையைக் காட்டும் விதத்தில் ஞானாசிரியனாகத் திகழ்கின்றாள். கோவிந்தனின் புகழை நா மணக்கப் பாடி இறையருளைப் பெற்று வீடுபேற்றை அளிக்கவல்ல ஞானத்தைப் போதிப்பவள். 

ஆண்டாளின் இல்லம் வில்லிபுத்தூரெனினும் அவளைப் பொறுத்தமட்டில் அஃது ஆயர்பாடியே. சூடிக் கொடுத்த சுடர்க்கொடியாம் ஆண்டாளின் கற்பனை ஆயர்பாடியில் அவள் கண்டது உண்மையான திவ்ய தரிசனம் அளிக்கும் கண்ணனுடன் இரண்டென்றில்லாமல் ஒருவராய் வாழ்ந்தது. இவற்றுள் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் அவளின் நேர்கொண்ட பார்வை.


தூய தமிழ்ச் சொல்லாகிய இந்த 'நேர்' என்ற சொல் பல பொருள்களைத் தன்னுள் கொண்டது. அந்தப் பல பொருள்களினூடே இப்பாவையாம் ஆண்டாளின் பார்வை எவ்வாறு உள்ளது என்பதைக் காண்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

திங்கள், 17 ஜூன், 2024

பக்தி வழியை பற்றுவோம் - கல்யாணபுரம் ஆராவமுதச்சாரியார்

மிகவும் பழைமையான ஒரு கதை சொல்லும் பாணி ஹரிகதை. இயல், இசை, நாடகம் என மூன்றும் கலந்தது இது. மகாராஷ்ட்ராவிலிருந்து வந்ததுதான் இந்த ஹரி கதை. ‘ஹரி கீர்த்தன்’னு மராத்தி மொழியில் பாடுவார்கள். இன்றைய சொற் பொழிவில் பிரகலாதனின் கதையைத்தான் சொல்லப் போகிறேன்" என்றபடியே துவங்கினார் கல்யாணபுரம் ஆராவமுதச்சாரியார் ஸ்வாமிகள்.

“ஹரி என்கிற பெயரைக் கேட்டாலே அவ்வளவு கோபம் வரும் ஹிரண்யகசிபுவுக்கு. அவனது சகோதரனை பகவான் வதம் பண்ணிட்டார்ன்னு அவ்வளவு கோபம். அந்த ஹரி எங்கே இருந்தாலும் அவனை வதம் பண்ணிடணும்னு தன்னோட வேலைக்காரர்களுக்கு எல்லாம் உத்தரவு போட்டான் அவன். தாமரைக்கண் கொண்ட ஹரியை எம லோகத்துக்கு அனுப்பிடணும்னு உக்கிரமான தவம் மேற்கொண்டான். அந்தத் தவத்தின் உக்கிரத்தால் தேவலோகத்தில் இருந்த தேவர்கள் எல்லாரும் பாதிக்கப்பட்டார்கள். அவர்கள் பிரம்ம தேவனிடம் சென்று முறையிட, பிரம்ம தேவன், ஹிரண்யகசிபுவிடம் வந்து, 'உன் தவத்தை நிறுத்து. உனக்கு என்ன வரம் வேண்டுமோ கேள். தருகிறேன்' என்றார்.

திருமால் முதலில் மனித வடிவமெடுத்த… - எம்.என். ஸ்ரீனிவாசன்

திருமால் எடுத்த மத்ஸ்ய, கூர்ம, வராக, நரசிம்ம, வாமன, பரசுராம, பலராம, ராம, கிருஷ்ண அவதாரங்களில் மனித அவதாரமாய் முதன் முதலில் தோன்றிய அவதாரம் வாமன அவதாரமே ஆகும். சிறு பிராமணச் சிறுவனாய்த் தோன்றி, மகாபலியிடம் மூன்றடி மண் கேட்டு, பிறகு "ஓங்கி உலகளந்த உத்தமனாய்' என்றபடி வளர்ந்து, மகாபலி சக்கரவர்த்தியைப் பாதாள லோகத்தில் அழுத்திய அவதாரம் இது.

இந்த அவதாரம் எடுக்கப்பட்டது மகாபலியின் வள்ளல் தன்மையை எடுத்துக் காட்டவும், அதேசமயம் அவன் மனதில் குடியிருந்த ஆணவப் பேயை அழிக்கவுமேதான். மேலும், தன் குலகுருவான சுக்ராச்சாரியாரின் அறிவுரையைப் புறந்தள்ளி, தான் கொடுத்த வரத்தை மீறாமல் மகாபலி நடந்ததால், அவன் புகழ் எவ்வாறு உயர்ந்தது என்பதை நமக்கு எடுத்துக்காட்டவும் திருமால் மிகப்பெரும் வடிவெடுத்துக் காட்டினார் என்றும் சொல்லலாம்.


இங்கே ஒன்றை யோசிக்க வேண்டும். யாசிப்பது என்பது தாழ்ந்த செயல். உடல், மனம் குன்றி, வருந்தி யாசிப்பது என்ற நிலைக்கு ஏற்றாற்போல் திருமாலின் வடிவமும் குறுகிவிட்டதாம். பின் ஆசை நிறைவேறியபின் ஏற்பட்ட களிப்பே ஒரு சாண் உடம்பு பல நூறு சாண் வடிவமாயிற்றாம். இதனை கோதைப் பிராட்டி,

ராமனிடம் லட்சுமணனுக்கு ஏற்பட்ட சந்தேகம்! - எழிலானந்தா

வேடர் குலத்தில் பிறந்தவள் சபரி. மூதாட்டியான அவள் மதங்க மாமுனிவரின் ஆசிரமத்துக்கு அருகில் சிறு குடிசையில் வாழ்ந்து வந்தாள்.

மதங்க மாமுனிவரிடம் உபதேசம் பெற்ற அந்த மாது இராமனிடம் மானசீக பக்தி கொண்டவள். இராமனைக் கண்ணால் காண வேண்டும்; அவன் திருவடியைத் தலையில் பூண வேண்டும்; அவனுக்கு விருந்தளித்துப் பேண வேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தாள்.


மதங்க மாமுனிவர் தவம் முடித்து மோட்சம் புகும்போது, தன்னுடன் வருமாறு சபரியையும் அழைத்தார்.


"இராம தரிசனத்தைவிட வீட்டுலகம் சிறந்ததா? என்றைக்காவது ஒருநாள் இராமன் இவ்வழியே வருவான். அவனை வணங்கி விருந்திடுதல் வேண்டும் என்பதே என் ஆசை. ஆதலால் மோட்சம் வேண்டாம்'' என்று மறுத்து விட்டாள் சபரி.


இராமன் இன்று வருவான், இன்று வருவான் என்று ஒவ்வொரு நாளும் பாதையைப் பெருக்கி, முள், கல் நீக்கித் தண்ணீர் தெளித்து மெத்தெனச் செய்து வைப்பாள்.

ஞாயிறு, 16 ஜூன், 2024

சீதை ஏன் சிறைப்பட்டாள்? - வேளுக்குடி கிருஷ்ணன்

இலங்கையை விட்டுக் கிளம்பும் முன்பு ராமர், சீதைக்கு லங்காபுரியைச் சுற்றிக்காட்டுகிறார். ''சீதா! இந்த இடத்தில்தான் கும்பகர்ணன் அழிந்தான், இங்குதான் ராவணனைக் கொன்றேன், இங்கேதான், இந்திரஜித்தை லட்சுமணன் முடித்தான்..." என்றவர், 


"சரி... ஒருமுறை இந்த இலங்கையை உனது கண்களால் பார்” என்றார். ''அதைத்தானே இத்தனை நாளும் செய்துகொண்டிருந்தேன். இவ்வளவு காலமும் இங்கேதானே இருந்தேன்?" என்றாள் பிராட்டி.


"நீ இங்கே இருந்ததும் உண்மை, பார்த்ததும் உண்மை. ஆனால், அது கோபப்பார்வை. இப்போது கண்குளிரப் பார். ஏனெனில், நம் பிள்ளை விபீஷணன், இனி இந்த தேசத்தை ஆளப்போகிறான். உன் கடாட்சம் இருந்தால்தான் அவனால் சிறப்பாக ராஜ்ஜியம் நடத்த முடியும்" என்றார்.

சனி, 15 ஜூன், 2024

அவன் பார்த்துக் கொண்டிருக்கிறானே !

பக்தமீரா மிகப்பெரிய கிருஷ்ணபக்தை. அழகு அவளோடு ஒட்டிப் பிறந்தது. அவளை அவ்வூரிலுள்ள ஒரு இளைஞன் எப்படியாவது அடைந்து விட வேண்டுமெனத் துடித்தான். தனிமையில் இருந்த அவளிடம், "நீ எனக்கு வேண்டும்,'' என வாய் கூசாமல் சொன்னான்.

சாதாரணப் பெண் என்றால் என்ன செய்திருப்பாள்? ஒன்று சத்தம் போட்டு ஊரைக் கூட்டியிருப்பாள் அல்லது அவனை உதைத்து அனுப்பியிருப்பாள். 


மீரா இந்த இரண்டையுமே செய்யவில்லை. கேட்டவனே அதிரும்படியாக, "அவ்வளவு தானே! நாளை என்னை எடுத்துக்கொள்,'' என்றாள்.

"
எங்கே, எப்போது வர வேண்டும்?'' அவன் அவசரமாய் கேட்டான். 

வெள்ளி, 14 ஜூன், 2024

மாயம் செய்த மாயவன்...

மகாபாரதத்தில் மிக அற்புதமாக தன் வீரத்தைக் காட்டினாலும், வெளியே தெரியாமல் போன ஒரு பாத்திரமே பர்பரிகன். இவன் கிருஷ்ணரால் கொல்லப்பட்டவன். 


தர்மராஜா பாரதப்போர் குறித்து மிகுந்த கவலை கொண்டிருந்தார். பீஷ்மரும்துரோணரும் குறிப்பிட்ட நாளில் பாண்டவர்களை அழித்தே தீருவதென சபதம் பூண்டிருப்பதை ஒற்றர்கள் மூலம் தெரிந்து கொண்டார். கர்ணனை நினைத்தாலும் கலக்கமாக இருக்கிறது. அவன் எந்த நேரமும் தன்னைக் கொன்று விடுவான் என்பதையும் அறிந்து, இதுபற்றிய தன் கவலையை கிருஷ்ணரிடம் வெளியிட்டார். அப்போது, அர்ஜுனன் வந்தான். 


"அண்ணா! நீங்கள் இவ்வாறு பயம் கொள்வது முறையில்லை. பரமாத்மா கிருஷ்ணரே நம்முடன் இருக்கும் போது, நாம் ஏன் கவலைப்பட வேண்டும்?'' என்றான்இப்படியாக பீமனும் தன் பிரலாபத்தை வெளியிட, பர்பரிகன் அங்கு வந்தான். அவன் யார் தெரியுமா? பீமனின் பேரன். 


பீமனின் மகனான கடோத்கஜன், மவுர்வி என்பவளைத் திருமணம் செய்திருந்தான். அவர்களது புதல்வனே இந்த பர்பரிகன். தன் பெரிய தாத்தா அர்ஜுனனனைப் பார்த்து அவன் சிரித்தான்.

புதன், 12 ஜூன், 2024

அழுக்குத்துணியிலும் ஆண்டவன்...

தயாசிந்து என்ற ஜகந்நாத பக்தர் பூரி நகரில் வசித்தார். 24 மணி நேரமும் அவருக்கு ஜகந்நாதரைப் பற்றிய சிந்தனை தான்! 

ஜகந்நாதப் பெருமாளின் புகழ்பரப்பும் பாடல்களைப் பாடியபடியே ஆடுவார். அவரது இசையும், தாளமும் பக்தர்களையும் நடனமாட வைக்கும். ஏழையாயினும், அவர் மீது பக்தர்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தனர். யார் என்ன கொடுத்தாலும் வாங்கமாட்டார்.


அவரது அன்றாட உணவு ஒரு டம்ளர் பால் மட்டுமே! அதையும் யாரும் தானாகக் கொடுத்து பருகமாட்டார். வீடு வீடாகப் போய், "தாயே! ஒரு டம்ளர் பால் கொடுங்கள்,'' என பிச்சை கேட்பார். கொடுத்தால் குடிப்பார். இல்லாவிட்டால் பட்டினி.