திங்கள், 16 செப்டம்பர், 2024

ஆளவந்தாரின் மூன்று ஆசைகள்! - எம்.என்.ஸ்ரீனிவாசன்

திருக்குடந்தையில் எழுந்தருளியிருக்கும் இறைவன் சார்ங்கபாணி என்ற ஆரா அமுதன். இவர் மூலமாக நாலாயிர திவ்யப் பிரபந்தத்தை நாட்டிற்களித்தவர் நாதமுனிகள். இவருடைய பேரன்தான் ஆளவந்தார். இருவரும் காட்டுமன்னார்குடியில் அவதரித்தவர்களே.

நாதமுனிகளின் விருப்பப்படியே இவருக்கு யமுனைத்துறைவன் என்ற திருப்பெயர் சூட்டப்பட்டது. தமது இளமைப் பருவத்திலேயே சகல கலைகளிலும் தேர்ந்து சகல சாஸ்திரங்களையும் கற்றறிந்தார். இவர் சோழராஜனின் புரோகிதரான ஆக்கியாழ்வானை வாதில் வென்றார். இவரின் வெற்றிக்கு பரிசாகக் கிடைத்த பாதி ராஜ்யத்தை திறம்பட நிர்வகித்தார். யமுனைத் துறைவனின் தேஜஸைக் கண்டு சோழ அரசி இவரை வாழ்த்தி வணங்கி, ‘‘எமை ஆளவந்தீரோ?’’ என்று கேட்டு வியந்தாள். அதனால் இவருக்கு ஆளவந்தார் என்ற பெயர் ஏற்பட்டு அதுவே நிலைத்து விட்டது.


தனக்குப் பரிசாகக் கிடைத்த நாட்டை ஆண்டபடி, மிகவும் ஆனந்தமாக நாட்களைக் கழித்த இவரை மணக்கால் நம்பி என்ற மகான் தடுத்தாட்கொண்டார். ‘‘உமது பரம்பரை சொத்து திருவரங்கத்தில் கோயில் கொண்டுள்ள திருவரங்கனே’’ என்று அறிவுறுத்தினார்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2024

கீதையின் 700 ஸ்லோகங்களை சில வரிகளில் சொன்ன கண்ணதாசன் - பாரதிநாதன்

B.R. பந்துலு எடுத்த படங்களில் மிக அற்புதமான படம் கர்ணன். வண்ணப் படமாக வெளிவந்த படம். காட்சியமைப்பும் இசையும் அந்தக்  காலகட்டத்தில் மிக அருமையாக இருக்கும். இந்துஸ்தானி மற்றும் கர்நாடக இசையின்  ராகங்களை விஸ்வநாதன் ராமமூர்த்தி குழுவினர் அதி அற்புதமாக வைத்திருப்பார்கள். அத்தனை பாடல்களுமே ஹிட் என்றுதான் சொல்ல வேண்டும்.

1964-ல் தயாரித்து பந்துலு இயக்கி வெளியிட்ட இந்த படம் மிகப் பிரம்மாண்டமான காட்சி அமைப்புகளோடு அப்போதே ரூ.40 லட்சம் செலவு செய்து எடுக்கப்பட்டது என்பார்கள். நடிகர் திலகம் சிவாஜி, என். டி. ராமாராவ், தேவிகா, சாவித்திரி, அசோகன் என பெரிய திறமைசாலிகள்  நடித்திருந்தனர். இப்போதைய பதிவு அந்தப் படத்தில் வந்த ஒரு அருமையான பாடலைப் பற்றியது.


படம் கிட்டத்தட்ட முடிந்த பிறகு தயாரிப்பாளரான பிஆர் பந்துலு அவர்களுக்கு ஒரு யோசனை வந்ததாம். போர்க்களத்தில் அர்ஜுனனுக்கு கீதை உபதேசிக்கும் ஒரு காட்சியை வைத்தால் என்ன என்ற யோசனைதான் அது.  உதவி இயக்குனர்களுடன் அதைக்  குறித்து விவாதித்தபோது, அத்தனை உதவி இயக்குனர்களுமே  மறுத்து விட்டார்களாம்.


“இது வேண்டாம், விபரீத எண்ணம். கதையின் நிறைவுப் பகுதியில் இப்படி ஒரு காட்சியை வைத்தால் அது நீண்ட காட்சியாகத்  தான் இருக்கும். காரணம், கீதையை சுருக்கமாகச் சொல்ல முடியாது. அடுத்து அது ஒரு தத்துவ உபதேசம். மக்களுக்கு அவ்வளவு எளிதில் புரியாது. எல்லோரும் எழுந்து போய்விடுவார்கள் படத்தில் எடுபடாது” என்றெல்லாம் சொன்னாலும், தயாரிப்பாளர் பந்துலு கேட்கவில்லையாம்.


எல்லோரும் பத்மினி பிக்சர்ஸ் அலுவலகத்தில் கூடி, இது குறித்து விவாதித்துக் கொண்டிருந்தபொழுது இசை அமைப்பாளர் M.S.விஸ்வநாதன் அங்கு வந்தார். துணை இயக்குனர்கள் தயாரிப்பாளர் சொன்ன யோசனையை அவரிடம் எடுத்துச் சொன்னார்கள். சற்று நேரம் யோசித்த விஸ்வநாதன் முகம் மலர்ந்து சொன்னாராம்.


‘‘அவ்வளவுதானே, கீதோபதேசக் காட்சியை நன்றாக எடுத்துவிடலாம்’’ 

சனி, 14 செப்டம்பர், 2024

படித்ததையே வாழ்வாக்கிக் கொண்டவர்! - சுதர்சன்

மார்கழி மாதத்தில் கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்த ஆழ்வார் தொண்டரடிப் பொடியாழ்வார். மார்கழி மாதத்தில் அதே கேட்டை நட்சத்திரத்தில் அவதரித்தவர் பெரியநம்பிகள் என்ற வைணவ ஆச்சாரியர்.

ஆளவந்தாரின் முக்கியமான சீடர்களில் ஒருவர். ராமானுஜரின் ஐந்து ஆச்சாரியர்கள் பிரதானமானவர். அதாவது ராமானுஜருக்கு வைணவ தீட்சை எனப்படும் பஞ்ச ஸம்ஸ்காரம் செய்து வைத்த நேரடி ஆசாரியர், பெரிய நம்பிகள். இன்றும் பெரியநம்பிகள் வம்சத்தவர்கள் திருவரங்கத்திலிருந்து கைங்கரியம் செய்து வருகின்றனர்.


பெரிய நம்பிகள் வாழ்க்கை வரலாறு சுவையானது, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியது. ஒரு ஆசாரியன் உத்தமமான ஞானத்தோடு வாழ வேண்டும். சாதுவாக இருக்கவேண்டும். குருநாதர் மீது அகலாத பக்தி இருக்க வேண்டும். சீடர்கள் மீது சாலச் சிறந்த அன்பு இருக்க வேண்டும். இத்தனையும் ஒரே இடத்தில் பரிபூரணமாக அமைந்தவர் பெரிய நம்பிகள்.


எந்தத் தத்துவத்தை நம்பினோமோ, அந்தத் தத்துவத்தை, விடாப்பிடியாகப் பிடித்துக் கொண்டு வாழ்க்கையில் கடைபிடித்தவர் பெரிய நம்பிகள். சொல் வேறு; செயல் வேறு என்று வாழாதவர் பெரிய நம்பிகள். தனது ஆசாரியன் கட்டளைப்படி, தனது சீடனை வைணவக் குலத்தலைவராக்கி, அவருடைய நிர்வாகத்தின் கீழ் ஒரு வைணவத் தொண்டனாகப் பணியாற்றியவர் பெரியநம்பிகள்.


அப்போது ஒரு சம்பவம் நடந்தது. ஒருநாள் ராமானுஜர் அவருடைய சீடர்களுடன் நடந்து வரும் பொழுது பெரிய நம்பி அவரை அப்படியே சாஷ்டாங்கமாக விழுந்து சேவித்தார். எல்லோரும் வியந்தனர். 

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

குறைகளைப் போக்கும் கோவிந்த நாமம் - முனைவர் புவனை ஸ்ரீராம்

நம்மாழ்வாரின் ஒரு அற்புதமான பாசுரம். இது வேங்கட மலையைப் பற்றியது. ‘‘நீங்கள் திருமலை அப்பனை பார்ப்பது இருக்கட்டும். முதலில் அந்த மலையை வணங்கினாலே போதும். உங்கள் குறையெல்லாம் தீர்ந்துவிடும்என்கிறார்.

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான், பரன்
சென்று சேர் திருவேங்கட மா மலை,
ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே
எம்பெருமானைத் தாங்கி அவனோடு உறவுகொண்ட மலை நமக்கும் உறவு என்கிறார்.


வினைகளைச் சுட்டெரிக்கும் மலை


‘‘வேம்என்றால் வெந்துபோகும். எது வெந்துபோகும்? திருமலைத் தரிசனம் செய்பவர்களின் பாவங்கள் வெந்துபோகும். அப்படி வினைகளைச் சுட்டெரிக்கும் சக்தி வாய்ந்த மலை திருமலை. எம்பெருமானிடம், எல்லையற்ற பக்திகொண்டு, அவனுடைய குணங்களில் ஆழ்ந்து இருப்பவர்கள் ஆழ்வார்கள்.


அவனை விட்டு சற்றும் பிரியமாட்டார்கள். பிரிந்தால் உயிர் தரிக்க மாட்டார்கள். இப்படி இருக்கக்கூடியவர்களுக்குத்தான் ஆழ்வார்கள் என்று பெயர்.‘‘உன்னை மறந்து என்னால் வாழ முடியாது’’ என்று சொல்பவர்கள்தான் ஆழ்வார்கள். ‘‘எங்ஙனம் மறந்து வாழ்ந்தேன், ஏழையேன் ஏழையேனே’’ என்று கதறுபவர்கள் ஆழ்வார்கள். வேங்கடமாமலை திருமலையப்பனை விடாமல் தாங்கிக் கொண்டிருக்கிறது.


திருமலை ஆழ்வார்


ஆழ்வார்களைப் போல இந்த மலையும் எம்பெருமானைப் பிரியாமல், அவன் திருவடி நிலைகளை தாங்கிக்கொண்டு இருப்பதால், அந்த மலைக்குதிருமலை ஆழ்வார்என்று வைணவத்தில் பெயர். ஆழ்வார்களைத் தொழாமல் நேரே பெருமானைத் தொழுவது வைணவ மரபு அன்று. எனவே ‘‘திருவேங்கட மா மலை, ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே’’ என்று மலை ஆழ்வார் வணங்கச் சொல்கிறார்.

புதன், 11 செப்டம்பர், 2024

ஸ்ரீவரதராஜப் பெருமாள் யதிராஜருக்கு அருளிய உபதேசம் - சுவாமி புத்திதானந்தர்

“பொலிக பொலிக பொலிக போயிற்று வல் உயிர்ச் சாபம்

நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாது ஒன்றும் இல்லை 

கலியும் கெடும் கண்டு கொண்மின் கடல் வண்ணன் பூதங்கள் மண்மேல்

மலியப் புகுந்து இசை பாடி ஆடி உழி தரக் கண்டோம்” 


என்று நம்மாழ்வார் திருவாய்மொழியிலே (5.2.1) சாதித்திருக்கிறார். இதனை ஸ்ரீவைஷ்ணவர்கள் எம்பெருமானாருடைய (ஸ்ரீராமானுஜர்) திருஅவதாரத்தையே நம்மாழ்வார் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே எடுத்துக் கூறியுள்ளதாகக் கொண்டாடுகிறார்கள். அங்ஙனம் ஸ்ரீ எம்பெருமானார் திருஅவதாரம் செய்து ஆயிரம் ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அவர் அடியார்களாகிய நமக்குத் தந்த கொடையினைச் சிந்திப்போம். 


சிந்தனைக்கு எட்டாத ஆயிரமாயிரம் விஷயங்கள் இருந்த போதிலும் ஒரு ஜீவனுக்கு எப்போதும் இருக்கக்கூடிய யம பயத்தைப் போக்கியது குறிப்பிடத்தக்கது. அதாவது ஞானமே வடிவாகிய இந்த ஜீவன் தன்னுடைய கர்ம வினையினால் நாள்தோறும் துயருறும் பொழுது எம்பெருமானுடைய கருணை ஒன்றையே உபாயமாகக் கொண்டு இந்த சம்சாரமாகிய துன்பக் கடலைக் கடக்க முயற்சிக்கிறது.


அப்போது இந்த ஜீவனுக்கு எழக்கூடிய சந்தேகங்களினால் கைக்கொண்ட ஒரே உபாயத்தை நழுவ விடாது இருக்க ‘ஆசையுடையோர்க்கெல்லாம் ஆரியர்கள் கூறுமென்று பேசி வரம்பறுத்தார் பின்' என்று மணவாள மாமுனிகள் சாதித்தாப்போலே, உலகம் உய்ய அந்த சந்தேகங்களுக்குரிய விடையை காஞ்சி பேரருளாளனிடமே கேட்டுப் பெற்றார் யதிராஜராகிய ஸ்ரீராமானுஜர். அதனைக் காண்போம்.

செவ்வாய், 10 செப்டம்பர், 2024

குரு பக்தி! - சைதை முரளி

கண்பார்வை பறிபோன ஒருவர், திரும்பவும் தனக்குக் கண்பார்வை கிடைக்கிறதென்றால், எப்படியெல்லாம் ஆனந்தக் கூத்தாடுவார்? அதுவும் முன்பு உலகத்தைப் பார்த்த கண்களின் பார்வை நடுவில் பறிபோய் விடுகிறதெனில், 'எப்படியெல்லாம் உலகத்தைப் பார்த்தோம், ரசித்தோம். இப்போது பார்க்க முடியாமல் போய்விட்டதே' என எவ்வளவு வேதனைப் படுவார்? அப்படிப்பட்ட பார்வைதான், திரும்பவும் பகவத் கிருபையால் ஒருவருக்குக் கிடைக்கப்போகிறது!

நாமாக இருந்தால் எவ்வளவு ஆனந்தப்படுவோம்? ஆனால், இவரோ அப்படி நினைக்க வில்லை. 'இந்தப் பார்வை தனக்கு எதற்கு? நம் உடலிலுள்ள அனைத்து இந்திரியங்களையும் அடக்கினால்தான், இறை தரிசனம் கிட்டும் என சாஸ்திரம் கூறுகிறது. அரச தண்டனையால் பறிபோன தன் கண்பார்வை, போனபடியே இருக்கட்டுமே. இந்த உலகில் கண்டதையும் பார்த்துக் கெட்டுப்போகாமல், இந்த ஒரு இந்திரியமாவது தன்னைக் காப்பாற்றி, பேருதவி புரிகிறது. எதற்குத் திரும்பவும் பார்வை' என்றே நினைத்தார் இந்த ஸ்ரீராமானுஜதாசன்.

திங்கள், 9 செப்டம்பர், 2024

பாடிய பிரும்மம் - விசாகா ஹரி

“பெயரில்லாதது, உருவமில்லாதது என்றெல்லாம் சொல்லப்படுகிற பிரும்மத்தை கானம் செய்தவர் சதாசிவ பிரம்மேந்திரர். பிரும்மத்தையும் பாட முடியும் எனக் காண்பித்தவர் அவர்தான்” என்றார் சதாசிவ பிரம்மேந்திரர் பற்றிய தமது சொற்பொழிவில் விசாகா ஹரி.

நம்ப எல்லாருக்குமே ஒவ்வொரு மஹானைப் பிடிக்கும். அதுபோல, சிருங்கேரி மடத்தின் ஆசாரிய மகா புருஷரான சிவாபிநவ நரசிம்ம பாரதி ஸ்வாமிகளுக்கு சதாசிவ பிரம்மேந்திரர் என்றால் மிகவும் பிடிக்குமாம். எப்படியாவது சதாசிவ பிரம்மேந்திரரை பார்க்க வேண்டும் என்பதே அவரது ஆசையாம். எப்படிப் பார்க்க முடியும்? அவரது காலம் வேறு; இவரது காலம் வேறு என்று நமக்குத் தோன்றலாம். மனசில் ஆழ்ந்த நம்பிக்கை இருந்தால் மஹான்களையோ அல்லது தெய்வத்தையோகூட நம்மால் நிச்சயம் பார்க்க முடியும்.


தியாகராஜர் ராம நாமத்தை ஜபித்து ஜபித்து எப்பொழுதோ வாழ்ந்த ராமரை தரிசித்தார். புரந்தரதாசரும் அப்படித்தான் விட்டலனை பார்த்தார். அதே போன்று ஒரு மகானிடத்தில் ப்ரேமை, பக்தி என்பது இருந்தால் அந்த மகானைப் பார்க்க முடியும். புரந்தர தாசர் மேல அப்படி ஒரு அபிமானம் விஜய விட்டல தாசருக்கு. இவர் தாம் வாழ்ந்த காலத்துக்கு முன்பு சுமார் 200, 300 வருடங்களுக்கு முன் வாழ்ந்த புரந்தரதாசரைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு இருப்பாராம்.

ஞாயிறு, 8 செப்டம்பர், 2024

சக்ய பாவம்! - ‘திருப்புகழ் திலகம்' மதிவண்ணன்

‘ஒன்பது விதமான  பக்தியை இறைவன் மீது நாம் செலுத்தலாம். ஸ்ரவணம் (இறைவன் நாமத்தைக் கேட்பது), கீர்த்தனம் (இறைவன் நாமத்தைச் சொல்வது), ஸ்மரணம் (இறைவன் திருநாமத்தையே நினைத்துக் கொண்டிருப்பது) இப்படி ஒன்பது விதமான பக்திகளில் ‘சக்யம்' என்பதும் ஒன்று. சக்யம் என்றால் நட்பு. இறைவனை நம் தோழனாகவே பாவித்து பக்தி செய்வது. அந்த சக்யத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்கியதுதான், ‘சுக்ரீவன் ராமன் இடத்தில் காட்டிய நட்பு’ என்றார் 'சுக்ரீவ சக்யம்’ என்ற தம் உபன்யாசத்தில் ‘திருப்புகழ் திலகம்' மதிவண்ணன்.

"ராமாயணம் என்பதன் பொருள் என்ன? அயணம் என்றால் வழி என்று அர்த்தம். நமக்காக ராமர் காட்டிய வழியைத்தான் ராமாயணமாக நாம் போற்றி வருகிறோம். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் - அதுதான் ராமர். ராமர், சீதை, லட்சுமணர் மூவரும் காட்டுக்குப் புறப்பட்டனர். மைதிலி ராவணனால் கவர்ந்து செல்லப்பட்டு, மூவர் இருவர் ஆன சமயத்தில்தான் சுக்ரீவ சந்திப்பு என்பது நிகழ்ந்தது.


வாலி, சுக்ரீவனது அரசையும் மனைவியையும் அபகரித்த பிறகு, எங்கே அவன் தன் உயிரையும் அபகரித்து விடுவானோ என பயந்துகொண்டு, சுக்ரீவன் ரிஷ்யமுக பர்வதத்தில் தங்கி இருந்தான். சுக்ரீவனின் மாண்புமிகு முதலமைச்சராக இருந்தவர், ஹனுமார். ராமரும், லட்சுமணரும் கவலை தோய்ந்த முகத்தோடு ரிஷ்யமுக பர்வதம் நோக்கி வரும் பொழுது, அவர்கள் வாலி அனுப்பிய ஆட்களோ என பயந்து நடுங்கினான் சுக்ரீவன்! 'ஆஞ்சநேயா! ஓடிச்சென்று அவர்கள் யார்? எதற்கு வந்திருக்கிறார்கள் என்பதை அறிந்து வா' என்றான். அந்த இடத்தைவிட்டு நகராமலேயே ஆஞ்சநேயர்,

சனி, 7 செப்டம்பர், 2024

காளிங்க நர்த்தனம்! - மன்னார்குடி ஸ்ரீ.உ.வே. ராஜ கோபாலாச்சார்யார்

"பகவான் எதைச் செய்தாலும் அதை டூ இன் ஒன், த்ரீ இன் ஒன்னாகத்தான் செய்வார். தங்களது பால பருவத்திலேயே பலராமரும், கிருஷ்ணரும் நன்றாக வளர்ந்து, குமார பருவத்தில் இருப்பவர்கள் போல இருந்தார்கள். 'கண்ணனுக்கு ஆபத்து வந்து விடும், அதனால் நாம் ப்ருந்தாவனம் சென்று விடுவோம்' என நந்தகோபரும், யசோதையும் முடிவு எடுத்தார்கள். நெருஞ்சி முட்கள் மட்டுமே நிறைந்த அடர்ந்த காடாக அதுநாள் வரை இருந்த ப்ருந்தாவனம், பகவானின் சங்கல்பத்தால், புற்களும் பூக்களும் நிறைய நீரும் நிறைந்த இடமாக மாறியது. க்ருஷ்ணாவதாரம் முழுக்கவே இப்படி தம் கருணையால் பல லீலைகளைச் செய்து காட்டியிருக்கிறார் கண்ணன்' என்றார், 'விஷ்ணு புராணத்தில் க்ருஷ்ணாவதாரம்' பற்றிய தம் சொற்பொழிவில் மன்னார்குடி ஸ்ரீ.உ.வே. ராஜ கோபாலாச்சார்யார்.

கிருஷ்ணர் எப்போ கன்றுகளை மேய்க்கப் போனாலும், கூடவே பலராமரும் போவார். ஒருநாள், கிருஷ்ணர் பலராமரை விட்டுவிட்டு தாம் மட்டும் தனியாக கன்றுகளை மேய்க்கப் புறப்பட்டார். உள்ளுக்குள்ளே நந்தகோபருக்கும், யசோதைக்கும் இப்படித் தனியாகப் போகிறாரே என்ற நடுக்கம் இருந்துகொண்டே இருந்தது. தினமும் கன்றுகளை மேய்க்கச் செல்லும் இடத்துக்குப் போகாமல் வேற ஒரு புது இடத்துக்கு அன்னிக்குன்னு போனார் கண்ணன். 

புதன், 4 செப்டம்பர், 2024

இரண்டு கேள்விகள் ஒரே விடை பராசர பட்டரின் அனுபவம் - பாரதிநாதன்

இறைவனிடம் பக்தி செலுத்துவதற்கு சாத்திரங்கள் தேவையா? சாத்திரங்களை மட்டும் நிறைய படித்து விட்டால் பக்தி தானாக வந்துவிடுமா?


இப்படி எல்லாம் பல கேள்விகள் வரும். சாத்திரங்கள் எல்லாம் இறைவனுடைய குணங்களையும், அவனைத் தெரிந்து கொள்ளுகின்ற வழிமுறைகளையும் காட்டுகிறதே தவிர, பக்தி என்பது அனுபவத்தில் வரக்கூடிய ஒன்று என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உபநிடதத்தில் ஒரு வாக்கியத்தைச் சொல்வார்கள்.


நிறைய படித்திருந்தாலும் நமக்கு ஒன்றும் தெரியவில்லை என்று நினைக்கும் மனப்பான்மை வரும்போது எல்லாம் தெரிந்ததாக ஆகிவிடுகிறது. “எல்லாம் தெரிந்தது” என்று நினைக்கின்ற பொழுது ஒன்றும் தெரியாமல் போய்விடுகிறது. பக்தி விஷயத்தில் பல நேரங்களில் இப்படித்தான் ஆகிவிடுகிறது.


எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் பட்டுவிட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொண்டு ஆகப்போவது ஒன்றும் இல்லை. எதைத் தெரிந்துகொள்ளவேண்டுமோ அந்த விஷயம் உறுதியாக நெஞ்சில் படாவிட்டால், மற்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதால் எந்தப் பயனும் இல்லை. இதை ஒரு எளிமையான கதை மூலம் நாம் தெரிந்துகொள்ளலாம்.

திங்கள், 2 செப்டம்பர், 2024

கண்ணன், தீராத விளையாட்டுப்பிள்ளை - அவன் சிங்கார மன்மதன்தான் சந்தேகமில்லை - தேதியூர் பாலு

கண்ணனின் பால்ய லீலைகள் பற்றிப் பாடாத - அதில் மனதைப் பறிகொடுத்துப் பரவசப்படாத பாவலர்களே இல்லை! ஸ்ரீமத்பாகவதம் தொடங்கி ஊத்துக்காடு கவி கீர்த்தனைகள் வரை - ஆழ்வார்கள் முதல் மகாகவி பாரதி வரை - ஏன் கண்ணதாசன் வரை கண்ணனின் பால்ய லீலைகளை சுவை சொட்டச் சொட்ட பாடிப் பரவசப் பட்டிருக்கின்றனர்.

அவற்றில் பெரியாழ்வார் பாசுரம் ஒன்றையும் மகாகவி பாரதி பாடல் ஒன்றையும் ஒரு "ஸாம்பிள்' பார்த்து பேரானந்தம் பெறலாமே!

பெரியாழ்வார், ஓர் ஆய்ச்சியின் குற்றப் பத்திரிகையைக் கவிதையாக்கி ஆன்ம அனுபூதி பெறுவது சுவைக்கத்தக்க ஓர் உன்னதம்!

யசோதையிடம் ஓர் ஆய்ச்சி வந்து, 

"அம்மா யசோதை... உன் கண்ணன் பிறந்த ஊரில் பசுக்களிடமிருந்து பாலைக் கறப்பதே நடக்கிற காரியமாக இல்லையம்மா...'' என்கிறாள்.

"என்ன சொல்கிறீர்கள்? பசுவிடமிருந்து பால் கறப்பது இல்லையா... ஏன்?'' என்று மனத்துக்குள் நகைத்தபடி கேட்கிறாள் யசோதை.

"கன்றுக்குட்டிபோல வந்து பசுவின் மடியில் வாயை வைத்து உறிஞ்சிக் குடித்து விடுகிறானம்மா அந்த மாயக் கண்ணன்!''

"அப்படியா... அதற்கு எச்சரிக்கையாக என்ன செய்தீர்கள்?''

"அதற்காக மிகக் கவனமாக இருந்து பாலைக் கறந்து அடுப்பில் வைத்தேன்!''

"சரி... அப்புறம் என்ன நடந்தது...?''

ஆச்சாரிய பக்தியின் எல்லை? - பாரதிநாதன்

வைணவத்தில் பெருமாளை முதல் நிலையிலும், பெருமாளை காட்டிக்கொடுத்து, ஆன்மீக உணர்வை ஊட்டும் குருவாகிய ஆச்சாரியனை நிறைவு நிலையிலும் (சரம நிலை) வைத்து வணங்குவது வழக்கம். ஆச்சாரிய அபிமானம் மட்டுமே ஜீவனுக்கு நிறைவு நிலை என்பது வைணவத்தின் அசைக்க முடியாத கோட்பாடு.

அந்த அடிப்படை கோட்பாட்டைப் புரிந்து கொள்வதற்கு ஒரு சில பெரியவர்கள் வைணவத்தில் உண்டு. அதில் ஒருவர்தான் இராமானுஜரின் சீடரான வடுக நம்பிகள். வடுக நம்பிகள் சித்திரை மாதம் அஸ்வினி நட்சத்திரத்தில், கர்நாடகாவில் உள்ள சாளக்கிராமம் என்னும் ஊரில் அவதரித்தவர். இவருக்கு இராமானுஜரின் அறிமுகம் எப்படிக் கிடைத்தது என்பதற்கு சுவையான வரலாற்று சம்பவம் உண்டு.

ஸ்ரீரங்கத்தில் அவர் எழுந்தருளியிருந்த பொழுது, சில பிரச்சனைகள் ஏற்பட்டன. இராமானுஜரின் உயிருக்கு ஆபத்தான அரசியல் சூழல் இருந்தது. அதனால் அவர் திருவரங்கத்தை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது. மேல்நாடு என்று அப்போது சொல்லப்பட்ட கர்நாடகத்திலுள்ள மேல்கோட்டை எனப்படும் திருநாராயணபுரம் சென்றார். அக்காலத்தில் அங்கு வேற்று மதம் செல்வாக்கோடு இருந்தது.

அங்குள்ள மிதிலாபுரி சாளக்கிராமம் போன்ற ஊர்களில் இராமானுஜருக்கு மிகப்பெரிய எதிர்ப்பு எழுந்தது. அப்பொழுது அவருடைய பிரதான சீடரான முதலியாண்டானை அங்கிருந்த ஒரு குளத்தில், பகவான் ஸ்ரீமன் நாராயணனை நினைத்துக்கொண்டு,  திருவடி நனைக்கச் சொன்னார்.

அடுத்தநாள் அதில் நீராடிய ஊர்க்காரர்கள் ஏதோ ஒரு புத்துணர்வு தங்கள் உடலில் பிரவேசிப்பதைக் கண்டனர். நேற்றுவரை எதிர்த்த இராமானுஜர் மீது அவர்களை அறியாமலேயே பக்தி பிறந்தது. அனைவரும் ஸ்வாமியின் சிஷ்யர்களாக மாறினர். அவர்களில் ஒருவர் தான் ஆந்த்ர பூர்ணர் எனும் வடுக நம்பி. இவர் இராமானுஜரிடம் பூண்ட ஆசார்ய பக்தி மிக மிக வித்தியாசமானது. இராமானுஜரிடமிருந்து இவர் வைணவத்தின் உயர் நிலையான ஆச்சாரிய பக்தியைத் தெரிந்து கொண்டார்.

சதாசர்வகாலமும் அவர் தம்முடைய ஆச்சாரியனையே நினைத்துக் கொண்டு ஆச்சார்ய நிஷ்டையில் ஊறியிருந்தார். பெருமாளுக்கு ஆராதனம் செய்வதை விட, தினமும் இராமானுஜரின் பாதுகைகளுக்கு திருவாராதனம் செய்வார். இவருடைய பக்திக்கு உதாரணமாக ஒரு சம்பவத்தைச் சொல்லலாம்.

கண்ணன் காட்டிய வழியம்மா! அது அன்பால் விளைந்த அவதாரமம்மா - வி.எஸ். ஸ்ரீநிவாஸன்

கண்ணபிரான் செய்த ராஜதந்திரச் செயல்களும் திருவிளையாடல்களும் புதுமையானவை. அவன் இயல்புக்கு மாறாகப் பல புரட்சிகளைச் செய்தான். அவற்றில் சிலவற்றை விளக்குகிறது இந்தக் கட்டுரை.

கண்ணன் செய்த புரட்சி அகப்புரட்சி, அன்புப் புரட்சி. புரட்சியென்றால் புரட்டு அல்ல. பரிணாம ஏணியில் படிப்படியாக ஏறுவதைக் குறுக்கு வழியில் சாதித்துக் கொள்வதே உண்மையான புரட்சி.

பிரெஞ்சுப் புரட்சி என்பது ரத்தம் சிந்திய அரசியல் புரட்சி. ஆங்கிலேயர்களின் தொழிற்புரட்சி, முதலாளி வர்க்கத்தினரால் தங்கள் சொந்த நலனுக்காகப் பயன்படுத்தப்பட்ட புரட்சி. கண்ணன் செய்தது ஆன்ம நேயப் புரட்சி. இது இந்தியாவை உலகத்துக்கே ஒரு முன்மாதிரியாகக் காட்டுகிறது. இதை ஒரு வேய்ங்குழல் புரட்சி என்றும் சொல்லலாம்.

கண்ணன் அழகுத் தெய்வம். சாமானிய அழகு வாடிப் போகும். கண்ணனின் அழகோ என்றும் வாடாத செந்தாமரை. கண்ணன் அழகு ஆனந்தத்தில் தோய்ந்து உருவாயிற்று. தொட்டதையெல்லாம் தன் பேரன்பினால் அழகு செய்தான் கண்ணன்.

கண்ணன் பிறப்பே ஒரு புரட்சி. பிறவியற்றவன் பிறக்கிறான். இறைவனுடைய முழுமையான சொரூபம் கண்ணன்; மானிடப் பிறவியில் தெய்வமாகச் செயற்படுகிறான். இவன் பிறப்பு, சிறைச்சாலைக் கதவுகளைத் திறந்துவிட்டது. கைவிலங்குகளை உடைத்தெறிந்தது. வடமதுரையில் மட்டும் அல்ல; வையகம் முழுவதிலும் ஓர் ஆன்மநேயப் புரட்சியை ஏற்படுத்தி மக்களுக்கு விடுதலை காண வழிகாட்டியது.

வளர்ப்பிலும் புரட்சிதான். பெற்றவள் தேவகி; வளர்த்தவள் யசோதை.